தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான இலவசத் தடுப்பூசி மீண்டும் வேண்டும்!

01:42 PM Feb 08, 2025 IST | admin
Advertisement

சில மாதங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட நம் நாட்டின் பல மாநிலங்களில் "பொன்னுக்கு வீங்கி நோய்"குழந்தைகளிடையே கொள்ளை நோயாக உருவெடுத்துப் பரவி வருகிறது. இந்த நோய்க்கு மருத்துவ மொழியில் "மம்ப்ஸ்" என்று பெயர். இந்த நோய்க்கு நமது பகுதிகளில் "கூகைக் கட்டு அம்மை" என்ற பெயரும் உண்டு.சின்னம்மை ( சிக்கன் பாக்ஸ்) ,தட்டம்மை/ சின்னமுத்து / மணல்வாரி அம்மை ( மீசில்ஸ்) அக்கி ( வேரிசெல்லா சோஸ்டர்) ,கூகைக்கட்டு அம்மை / பொன்னுக்கு வீங்கி ( மம்ப்ஸ்) என்று வைரஸ் தீநுண்மிகளால் பரவும் நோய்கள் அனைத்தும் "அம்மை" என்ற பொதுப் பெயருடன் நம் முன்னோர் விளித்து வந்தனர். இவற்றுள் மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை/ பொன்னுக்கு வீங்கி தற்போது குழந்தைகளிடையேவும், பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது.

Advertisement

ஏனைய வைரஸ் தொற்றுகளைப் போலவே
-அதீத காய்ச்சல்
- தலைவலி
- உடல் சோர்வு
- உடல் வலி
- வயிற்றுப் பகுதி வலி
- பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் முக்கியமாக கண்ணப்பகுதிக்கு கீழே கழுத்தின் ஒரு புறத்திலோ இரு புறங்களிலுமோ வீக்கம் ஏற்படும். இதற்குக் காரணம் மம்ப்ஸ் வைரஸ் தாக்கும் போது உமிழ்நீரை உருவாக்கும் பரோட்டிட் (PAROTID GLAND)சப் லிங்குவல் ( SUB LINGUAL) சப் மேண்டிபுலார் ( SUB MANDIBULAR) சுரப்பிகளில் அழற்சியை உருவாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. குறிப்பாக பரோடிட் சுரப்பியை அதிகமாகத் தாக்கி அழற்சியை உருவாக்கி வீக்கத்தை உருவாக்குவதால் இதற்கு "பரோட்டைட்டிஸ்"(PAROTITIS) என்ற பெயரும் உண்டு. இதன் விளைவாக "கூகை" - ஆண் ஆந்தை போல கண்ணத்தின் இரு பக்கத்திலும் வீக்கம் இருப்பதால் கூகைக் கட்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் இருமல், தும்மல் , மூக்கொழுகுதல் சளி போன்றவற்றால் எளிதாகப் பிற குழந்தைகளுக்குப் பரவும். எனவே காய்ச்சல் தணியுமட்டும் அல்லது கண்ணப் பகுதியில் உள்ள வீக்கம் தொடங்கி முதல் ஐந்து நாட்களுக்கேனும் "தனிமைப்படுத்துவது" நோய் பரவல் நிகழாமல் தடுக்க உதவும். நோய்த் தொற்று ஏற்பட்டு 12 முதல் 25 நாட்களுக்குள் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படலாம்.பெரும்பான்மையினருக்கு சாதாரண காய்ச்சலாக இருந்து இரண்டொரு வாரங்களில் முற்றிலும் குணமாகிவிடும்.

Advertisement

இந்தத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையாக

- நல்ல ஓய்வும் தனிமைப்படுத்துதலும் தேவை. எனவே குறைந்தபட்சம் காய்ச்சல் தணியுமட்டுமேனும் ஓய்வு தேவை.

- காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் வழங்கலாம்

- வலி அதிகமாக இருக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரையில் வலி நிவாரணிகள் வழங்கலாம்

- வீக்கம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி அல்லது வெந்நீர் ஒத்தடம் வழங்கலாம். இது வலியைக் குறைத்து சற்று இதம் தரும்.

- உணவுகளை கஞ்சி , மோர் , பழச்சாறு, கூழ் வடிவத்தில் திரவமாக
வழங்க வேண்டும். அதிகமான அளவு நீரைப் பருகி வர வேண்டும்.

- அமில பழச்சாறுகளான எலுமிச்சை ஆரஞ்சு போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

இந்த நோயின் அபாய அறிகுறிகள்

- கணையத்தை தாக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுத்தும்

- பெண் குழந்தைகளின் சினைப்பையைத் தாக்கி அழற்சியை ஏற்படுத்தலாம். அடிவயிற்றுப் பகுதியில் தீவிர வலி இருக்கும்.

- ஆண்களில் விந்தணு உற்பத்தியில் உதவும் விதைகளில் அழற்சியை ஏற்படுத்தி விதைப்பையில் வலியை ஏற்படுத்தும்.
பிற்காலத்தில் விந்தணு உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்தி ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம் என்கின்றன ஆய்வுகள்

- தண்டுவட நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூளை வரை தொற்றுப் பரவி மூர்ச்சை நிலை / கழுத்துப் பகுதி இறுக்கம் / பிதற்றல் நிலை/ தீவிரமான தலைவலி போன்ற அபாய அறிகுறிகள் தோன்றும்

- தொடர்ந்து உணவு மற்றும் திரவம் கூட உட்கொள்ளாத நிலை இருக்கும் போது குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த நோய்ப் பரவாமல் தவிர்ப்பது எப்படி?

- நோய்த்தொற்று ஏற்பட்டவரை தனிமைப்படுத்திட வேண்டும். வீக்கம் ஏற்பட்டதில் இருந்து ஐந்து நாட்களுக்காவது தனிமைப்படுத்துதல் அவசியம்.

- கைகளை சோப் போட்டு கழுவி வர வேண்டும்.

- இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டை வைத்து தும்மலாம் / முழங்கை மூட்டை மடக்கி வாயைப் பொத்தி இருமவோ தும்மவோ செய்யலாம்.

- நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் நீர்க்குடுவை மற்றும் பாத்திரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்.

இந்த நோயைத் தடுப்பதற்கு எம் எம் ஆர் ( மீசில்ஸ் மம்ப்ஸ் ரூபெல்லா) முத்தடுப்பூசியை குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் முதல் டோஸ் 12 முதல் 15வது மாதத்தில் இரண்டாவது டோஸ் பிறகு மூன்றாவது டோஸ் - நான்கில் இருந்து ஆறு வயதுக்குள்ளும் வழங்குவது சிறப்பான பலனளிக்கும். இரண்டு டோஸ்களுக்கு இடையே குறைந்தபட்சம் 28 நாட்கள் இடைவெளி கட்டாயம். முதல் டோஸ் போட்டதில் இருந்து மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு 12 வயது வரை எம்எம்ஆர் தடுப்பூசியை வழங்கலாம். இந்தத் தடுப்பூசி தனியார் சந்தையில் ஒரு டோஸ் ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த எம் எம் ஆர் தடுப்பூசி நாடெங்கிலும் தேசிய தடுப்பூசி அட்டவணைக்குக் கீழ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் ஒன்பது மாதங்கள் நிறைவுற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

நம் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம், இந்த எம் எம் ஆர் தடுப்பூசியில் உள்ள மம்ப்ஸ் தடுப்பூசியை மட்டும் நீக்கி விட்டு எம் ஆர் (MR VACCINE) எனும் பெயரில் 2017 ஆம் வருடம் முதல் எம் ஆர் தடுப்பூசியை அறிமுகம் செய்தது. இதற்கான காரணமாக - மம்ப்ஸ் பெரிய அளவில் பொது சுகாதாரத்திற்கு பிரச்சனையாக இல்லை. ரூபெல்லா மற்றும் மீசில்ஸ் நோய்களை ஒப்பிடுகையில் மம்ப்ஸ் தீவிரம் குறைவான நோயாக இருக்கிறது.  எம் எம் ஆர் ஊசியை விட எம் ஆர் ஊசி உருவாக்க குறைந்த செலவினம் ஆகிறது என்று கூறப்பட்டது.இதன் விளைவாக 2016-2017 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தடுப்பூசி அட்டவணையில் இருந்து மம்ப்ஸ்க்கான தடுப்பூசி நீக்கப்பட்டது. தனியார் சந்தையில் எம்எம்ஆர் தடுப்பூசி கிடைத்தாலும் கூட நாட்டின் 90% மக்களுக்கு மேல் அரசின் இலவச தடுப்பூசித் திட்டத்தையே நம்பி பலனடைந்து வருகின்றனர்.கூடவே அனைவராலும் ரூபாய் ஆயிரம் செலுத்தி எம்எம்ஆர் தடுப்பூசியை பெற இயலாது என்பதால் மம்ப்ஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி ( மந்தை எதிர்ப்பாற்றல்) நமது சமூகத்தில் குறைந்து கொண்டே வந்தது. முறையான மம்ப்ஸ் தடுப்பூசி வழங்கப்படாத நாடுகளில் ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மம்ப்ஸ் கொள்ளை நோயாக உருவெடுத்துப் பரவும் வழக்கம் கொண்டுள்ளது.அது போலவே தற்சமயம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன்னுக்கு வீங்கி நோய் மிக அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது.

எனினும் இந்த நோயை முறையாக அரசுக்குத் தெரிவிக்கும் செயல்முறை இல்லாததால் குறைவாகவே பதிவு செய்யப்படுகிறது. இந்த நோயை "கட்டாயம் வெளிப்படுத்தும் நோயாக" (Notifiable disease) அறிவித்தால் சமூகத்தில் நிலவும் இந்த நோயின் மெய்யான தாக்கம் தெரிய வரும்.இந்த நோய்க்கு எதிரான எம்எம்ஆர் முத்தடுப்பு ஊசியை மீண்டும் இலவச தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. கூடவே தேசிய அளவில் பல்வேறு பொது சுகாதாரத் துறை நிபுணர்களும் இந்த நோயின் தாக்கத்தை உணர்ந்து மீண்டும் மம்ப்ஸ்க்கு எதிரான தடுப்பூசியை இலவச புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று பறைசாற்றி வருகின்றனர்.

மம்ப்ஸ் குறித்து அறிந்து தெளிந்தோம். மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு அதற்குரிய சிகிச்சை எடுப்பது சிறந்தது.மம்ப்ஸ்க்கு எதிரான தடுப்பூசி தனியாரில் கிடைக்கிறது. விரும்புபவர்கள் அதை குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் முதல் டோஸ் 12 முதல் 15வது மாதத்தில் இரண்டாவது டோஸ் பிறகு மூன்றாவது டோஸ் - நான்கில் இருந்து ஆறு வயதுக்குள்ளும் வழங்குவது சிறப்பான பலனளிக்கும். விரைவில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி முன்பு கிடைத்தது போலவே இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் வேண்டுதலும்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

Tags :
contagious viraldiphtheriainfectionpainful swellingr mumps virussalivary glandsvaccine
Advertisement
Next Article