இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் !? ஐ.நா வலியுறுத்தல்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் தொடர்பாக ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கருத்தை குட்டரெசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார். அதன்படி இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் அரசியல் - சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போதுதான் அனைவரும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் நீதித்துறையின் சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகமும் கெஜ்ரிவால் வழக்கில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை தெரிவித்த சூழலில் நம் நாட்டில் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. மேலும், அந்தக் கட்சிக்கு 1,700 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினால் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மத்திய அரசின் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் பிரதான எதிர்க்கட்சிகள் முன் வைத்திருக்கின்றன.
இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் கைது, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேர்தல் நடைபெறும் ஒரு நாட்டில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்க்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன.இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டதாக கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.