For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆடி மாதத்தில் இலவச அம்மன் கோயில்கள் தரிசன சுற்றுலா!

07:18 PM Jul 02, 2024 IST | admin
ஆடி மாதத்தில் இலவச அம்மன் கோயில்கள் தரிசன சுற்றுலா
Advertisement

டி மாதம் அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதம். ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் தீமிதி, பால்குடம், கரகம், காவடி என்று உற்சவங்களுக்கும், பக்தர்களின் உற்சாகத்திற்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் முக்கியமான அம்மன் ஆலயங்களுக்கு போக பலரும் விரும்புவர். அப்படி கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் பலித்து வாழ்வில் மேன்மை அடையலாம். இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமயத்தினைப் பின்பற்றி வரும் 60-வயது வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள் சுற்றுலா இலவசமாக அழைத்துச் செல்லப்பட உள்ளது.

Advertisement

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் 2024-2025-ம் நிதி ஆண்டில் ஆடி மாதத்தில் 60-70 வயதுடைய மூத்த குடிமக்களை தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களைத் தரிசிக்க ஆன்மீகச் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 1000 பக்தர்கள் இந்த ஆன்மீகச் சுற்றுலாவில் பங்கு பெறலாம். இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதியாக வழங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆன்மீகச் சுற்றுலாவிற்கான முன்பதிவு மற்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுமார் 1000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Advertisement

சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன் அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில், கோயமுத்தூர் தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் ஏற்பாடு செய்யப்படும்.

திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17–ந் தேதி-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111,சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.ஆகவே, ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்`` என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement