For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மோசடி அழைப்புகள் :-தொலைத் தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

07:16 PM Mar 29, 2024 IST | admin
மோசடி அழைப்புகள்   தொலைத் தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Advertisement

நாடெங்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால், வெளியே செல்லும் போது கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. மிக எளிதாக போன் மூலமாகவே பணம் செலுத்தவும் இன்னொருவருக்கு பணத்தை மாற்றவும் முடிவதால் பலரும் இந்த டிஜிட்டக் பேமெண்ட் வசதியை உபயோகித்து வருகிறார்கள். டிஜிட்டல் பேமெண்ட் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்காக இந்திய அரசும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் இது தொடர்பாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. போலியான குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் மூலம் நமது வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு திருட்டுத்தனமாக நமது பணத்தை மோசடி நபர்கள் திருட முயல்வதால் நாம் எப்போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். சமீபகாலமாக தொலைத் தொடர்பு துறையிலிருந்து பேசுவதாக ஆள்மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத் தொடர்பு துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

ஏற்கெனவே மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள், வேலை வாய்ப்புகள், முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் மோசடி, ஹேக்கிங் மற்றும் ஸ்கிரீன் ஷேர் என ஏழு வகையான மோசடிகள் குறித்து எச்சரித்துள்ள நிலையில் 92 போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகள், அரசாங்க அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைத் தொடர்புத் துறையின் பெயரில் வரும் அழைப்புகளில் மொபைல் எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது மொபைல் எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அச்சுறுத்தும் அழைப்புகள் பொதுமக்களுக்கு வருகின்றன. சைபர் குற்றவாளிகள், இத்தகைய அழைப்புகள் மூலம், சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய தனிப்பட்ட தகவல்களை திருடவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் முயற்சிக்கின்றனர்.தொலைத்தொடர்பு துறை சார்பில் இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை. மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய அழைப்புகளில் பேசுபவர்களிடம் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இதுபோன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளை சஞ்சார் சாதி (Sanchar Saathi) வலைதளத்தில் 'உங்கள் மொபைல் இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்' என்ற வசதியின் கீழ் சரிபார்க்கலாம். மேலும் தாங்கள் எடுக்காத அல்லது தேவையில்லாத மொபைல் இணைப்பைப் பற்றி புகாரளிக்கலாம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement