ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு: பரிசு வழங்கி நெகிழ்ந்த உதயநிதி!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் ஆகஸ்ட் 31ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றன. இறுதி நாளான நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10:45 மணி வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சோதனை ஓட்டம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் என பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.
தகுதிச்சுற்று முதல் போட்டியின் ரவுண்டு 2, FLGP 4 கார் பந்தய போட்டியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் மின்னல் வேகத்தில் பந்தய கார்களை இயக்கினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் இந்தியாவின் மெக்பெர்சன் 2 நிமிடம் மூன்று வினாடிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தில்ஜித் மற்றும் மூன்றாவது இடத்தை டத்தா பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஐ ஆர் எல், ஃபார்முலா 4யின் தகுதி சுற்று போட்டிகளும் சுற்று மற்றும் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஐஆர்எல் -டிரைவர் ஏ பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளும், மாலை 3:55 மணி முதல் மாலை 4:35 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு பந்தயங்களும் நடைபெற்றன. மாலை 4:50 மணி முதல் 5:35 மணி வரை, பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களும், 5:50 மணி முதல் 6:35 மணி வரை ஐஆர்எல் – டிரைவர் ஏ பிரிவு போட்டிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 6:45 மணி முதல் 7:45 வரை, ஒரு மணி நேரம் கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7:55 மணி முதல் 8:40 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு போட்டிகளும், 8:50 மணி முதல் 9:35 வரை பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களையும் நடைபெற்றது. இறுதியாக 9:50 மணி முதல் 10:35 மணி வரை ஐஆர்எல் -டிரைவர் பி பிரிவு பந்தயங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கார் பந்தயம் நிறைவில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்க வீரர் அலிபாய் முதலிடமும், அகமதாபாத் அணியில் இடம்பெற்ற இந்திய வீரர் திவி நந்தன் 2வது இடமும், பெங்களூரு அணியில் இடம்பெற்ற ஜேடன் பாரியாட் 3வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘இப்படி ஒரு சிறப்பான போட்டியை நடத்தியதற்கு பேராதரவு நல்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் போட்டியில் பங்கேற்றுள்ள இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறிக் கொள்கிறேன்.பொதுமக்கள் இந்த போட்டிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மாடங்கள் நிரம்பியுள்ளன. அவர்களுக்கு எனது நன்றிகள். மோட்டார் பந்தயம் மட்டுமின்றி எல்லா வகையான விளையாட்டுகளையும் மேம்படுத்துவதிலும் நடத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஆதரவாக உள்ளோம். முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சென்னையில் முதல் முறையாக இப்படி ஒரு பந்தயம் நடப்பது உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான அனுபவம்’ என்றார்.