தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ஃபாத்திமா பீவி மரணம்: அவருக்கு வயது 96!
தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் ஃபாத்திமா பீவி (96) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்திய சுப்ரீம் கோர்ட்டி முதல் பெண் தலைமை நீதிபதி, தமிழகத்தின் முதல் பெண் கவர்னர், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் என பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் இவர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. தோலிகட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை படித்தார். சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். மேலும் 14 நவம்பர் 1950 அன்று வழக்கறிஞராகச் சேர்ந்தார். கேரளாவின் கீழ் நீதித்துறையில் தனது பணியைத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டில், கேரள துணை நீதித்துறை சேவைகளில் முன்சிஃப் ஆகவும், துணை நீதிபதியாகவும், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் விரைவில் உயர்ந்தார். மேலும் நாட்டின் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமைக்குரியவர். கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய பின் ஃபாத்திமா பீவி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
1989-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் முதலாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு கவர்னராகப் பணியாற்றினார்.ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இறுதியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்தார் ஃபாத்திமா பீவி. அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் சாலிஹூ நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் கவர்னராக இருந்த ஃபாத்திமா பீவி.
பின்னர் 2001- தேர்தலில் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார் . 2001 ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான நள்ளிரவு கைது நடவடிக்கையின் போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் கவர்னர் பதவியில் இருந்த ஃபாத்திமா பீவி. குறிப்பாக மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டிஆர் பாலு அப்போது கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அறியப்பட்டார். இந்த சம்பவங்களால் மத்திய அரசால் கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் ஃபாத்திமா பீவி. அதாவது கவர்னராக தமது கடமையில் இருந்து தவறியதாக குற்றம்சாட்டப்பட்டு அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் ஃபாத்திமா பீவி. அவருக்கு பின்னர் தற்காலிக கவர்னராக ஆந்திரா கவர்னர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் கேரளா சென்றார் ஃபாத்திமா பீவி. அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஃபாத்திமா பீவி. தன் 96 வயதில் காலமானார்