சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்.
சீனாவில் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியவர் லீ கெகியாங் (வயது 68) மாரடைப்பால் காலமானார். முற்போக்கு சீர்திருத்த எண்ணம் கொண்ட இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராவார். சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் மேற்கொண்ட லீ கெகியாங், ஒரு காலத்தில் சீன நாட்டின் வருங்காலத் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜி ஜின்பிங் இவரை ஓவர்டேக் செய்து அதிபரானார். அதன் பிறகே ஜி ஜின்பிங் தலைமையில் அவருக்குக் கீழ் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார். பெக்கிங் பல்கலைக்கழகத்தில் படித்த பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கடந்த 2020இல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சீனாவில் 60 கோடிக்கும் அதிகமானோர் மாதத்திற்கு $140 டாலருக்கு குறைவாகவே சம்பளம் பெறுவதாகக் கூறியிருந்தார். இது அப்போது சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. சீனா வறுமையை ஒழித்துவிட்டதாகக் கூறி வந்த நிலையில், மாத வருமானம் இவ்வளவு குறைவாக இருந்தால் எப்படி வறுமையை ஒழிக்க முடியும் எனப் பல மேற்குல வல்லுநர்கள் கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது..
கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங் இளமையில் வறுமையில் வாடியவரிவர்ர். சீன கலாசார புரட்சிக் காலத்தில் அவர் தனது தந்தையுட விவசாய நிலங்களில் பாடுபட்டுக் கொண்டிருந்தார். தந்தை விவசாயம் தாண்டி அரசு வேலையும் செய்தார். இருப்பினும் வருமானம் போதாமல் வறுமையில் இருந்துள்ளனர். இந்தச் சூழலிலும் கெகியாங் கல்வியிலும் தேர்ந்தார். பின்னாளில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பொருளாதாரத்தில் தேர்ந்த அவர் தாராளமயமக் கொள்கையின் ஆதரவாளர். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் நெருக்கடிகள் காரணமாக அவரது கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டியிருந்தது.
கட்சியில் செல்வாக்கு நிறைந்த அவரை சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் ஓரங்கட்டத் தொடங்கினார். இதனால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகியிருக்க நேர்ந்தது. பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஷாங்காய் நகரில் வசித்து வந்த இவர், திடீரென மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும், அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சீன ஊடகங்கள் கூறியுள்ளன.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.