For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நமக்கு இந்த நீட் எதிர்ப்பு தொன்றுதொட்ட ஒன்றுதான்!

05:22 PM Jun 09, 2024 IST | admin
நமக்கு இந்த நீட் எதிர்ப்பு தொன்றுதொட்ட ஒன்றுதான்
Advertisement

நீட் தேர்வு குறித்த மோசடிகள் பற்றி வட இந்தியாவே கபகபவென தீப்பிடித்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தேர்தலை தூக்கி ஓரம் வைத்துவிட்டு நீட்டுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் இன்ஸ்டாகிராமத்து வடஇந்திய இளைஞர்கள்! ஜியின் வாரணாசி தொகுதியிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜியை கண்டித்து மறுதேர்வு கோரி ஊர்வலம் போய் ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் முறைய 67பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதில்தான் தொடங்கியது பிரச்சனை. அந்த 67பேரில் ஒரே சென்டரில் ஆறு பேர் 720/720 மதிப்பெண் பெற்றது எல்லோரையும் திகைக்க செய்தது. அதெப்படி தேர்வு நடைபெற்ற 4750 சென்டர்களில் ஒரே ஒரு சென்டரில் மட்டும் 6 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சந்தேகம் வரத்தானே செய்யும். அதுவுமில்லாமல் 2022, 2023ல் 2 பேர்தான் முதல் மதிப்பெண் பெற்றனர். 2019, 2020ல் ஒருவரும், 2021ல் மூவர் என்பதுதான் பழைய வரலாறு. திடீரென்று ஒரே ஆண்டில் 67பேர் முதல் மதிப்பெண் பெற்றால்…!?

Advertisement

அடுத்து, ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கவேண்டிய தேர்வு முடிவுகளை ஏன் அவசரமாக ஜூன்4 ஆம் தேதி அதுவும் தேர்தல் முடிவு அறிவிக்கிற நாளில் அறிவிக்க வேண்டும். ஏன் இந்த அவசரம், அதற்கான அவசியம் என்ன? தேர்வு முடிவுகள் தாமதமாவதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்பே அறிவிப்பது சந்தேகத்தை வலுவாக்கியது. கூடவே, ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்குகிற தேர்வில் எப்படி சிலர் மட்டும் 720க்கு 718, 715 மாதிரியான மதிப்பெண்களை எடுத்தனர். அது எப்படி சாத்தியம்? இப்படி இன்னும் பல வினோதங்கள், விபரீதங்கள், ஆச்சர்யங்கள் இந்தாண்டு நீட்தேர்வில் நடந்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு குற்றசாட்டுகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ NTA எனப்படும் தேர்வு நடத்துகிற மத்திய நிறுவனத்திடம் இருந்தோ பதில் இல்லை. அதனால்தான் வட இந்தியர்கள் கொதித்தெழுந்து போராட்டம் பண்ணுகிறார்கள். விசாரணைக்கு உத்தரவிட கோருகிறார்கள். மறுதேர்வு வைக்க கோருகிறார்கள். நீட் தேர்வையே ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவும் கோரிக்கைகள் எழுகின்றன.

Advertisement

நன்றாக கவனித்தால் வட மாநிலங்களில்தான் நீட் தேர்வு மோசடிகளும் குளறுபடிகளும் அதிகம் நடப்பதை காணலாம். அதிலும் டெல்லி, ராஜஸ்தான், பீகார், உபி மாதிரி மாநிலங்கள்தான் எப்போதும் நீட் முறைகேடுகளில் அதிகம் அடிபடுகின்றன. தென் மாநிலங்களில் அத்தனை கெடுபிடியாக தாலியை கூட விடாமல் கழட்டி சட்டைகளை கத்தரித்து கம்மலை கழட்டி பெல்ட்டை கழட்டி ஜட்டி முதற்கொண்டு சோதனை பண்ணுகிற என்டிஏ, ஏனோ வடக்கு பக்கம் பூப்போல பொட்டாட்டம் மென்மையாக தேர்வை நடத்துகிறது. தமிழ்நாட்டில் எப்போதாவது நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது, ஆள்மாறாட்டம் பண்ணினார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டதுண்டா… அரிதிலும் அரிது. ஆனால் நீட் மோசடி என தேடத்தொடங்கினால் வட மாநிலங்களில் நடந்த பித்தலாட்டாங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

வடமாநிலங்களில் நீட் தேர்வுகளில் (மற்ற தேர்வுகளிலும்) ஆள்மாறாட்டம் மிக சகஜமாக நடக்கிறது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாவது என்டிஏ ஆட்களின் உதவியோடு நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை தேர்வுக்கு முந்தைய நாளே லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து விடைதாளையும் கொடுத்து படிக்கவைத்து பாஸ் பண்ணவைக்கிற சம்பவங்கள் நடக்கின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் கோடிகள் பெறப் படுகின்றன. உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்த வினாத்தாள் மோசடிகளையே பல ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன!

நீட் தேர்வில் என்ன மாதிரியான மோசடிகள் நடக்கிறது என்பதே சுவாரஸ்யமான தனிக்கதை. சென்றமாதம் நீட் தேர்வுக்கு இரண்டு நாள் முன்பு கோத்ரா நகரத்தில் துஷார் பட் என்கிற பள்ளி ஆசிரியரையும், பாஜக முக்கிய பிரமுகரான அரிஃப் வோரா என்பவரையும் காவல்துறை கைது செய்தது. இவர்கள் செய்த மோசடி என்னவென்றால், நீட் தேர்வு எழுதவரும் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொள்வது. இந்த ஆண்டு ஒரு மாணவருக்கு பத்து லட்சம் வீதம் 16 மாணவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். மொத்தம் 1.6கோடி. இந்த மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பரிட்சையில் எதையுமே எழுதக்கூடாது. கொடுத்த விடைத்தாளை அப்படியே வைத்திருந்து சும்மா எழுதுவது போல பாவ்லா காட்டிவிட்டு ஆசிரியரிடம் கொடுத்து விடவேண்டும். விடைத்தாள்களை வாங்கி அதை தொகுத்துத் தருகிற ஆசிரியராக இருக்கிற துஷார் பட், அந்த விடைத்தாள்களை சமர்பிக்கும் முன்பு அவரே சரியான விடைகளை டிக் அடித்து மற்ற விடைத்தாள்களோடு சேர்த்து சமர்பித்துவிடுவார். என்ன ஒரு புத்திசாலித்தனம்.

சென்ற ஆண்டுகளிலும் இதை செய்திருக்கிறார். கோடிக்கணக்கில் பலருக்கும் பணம் பட்டுவாடா நடந்திருக்கிறது. இந்த ஆண்டுதான் கையுங்களவுமாக மாட்டி இருக்கிறார். இதில் பாஜகவினர் கையும் இருக்கிறது கவனியுங்கள்! இப்போதும் அவர் மாட்டியதற்கு காரணம் ஏதோ பணத்தை பங்கு பிரித்துக்கொள்வதில் நடந்து சிக்கல்தான் என்கிறார்கள்! சென்ற மாதம் பாட்னாவில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் தருகிறோம் என 50 லட்சம் பெற்று ஒரு நிறுவனம் கைதானார்கள். 20 மாணவர்களுக்கு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கிடைத்ததும் தெரிய வந்தது. என்டிஏ உதவி இல்லாமல் எப்படி வினாத்தாள் கிடைக்கும்.

நமக்கு இந்த நீட் எதிர்ப்பு தொன்றுதொட்ட ஒன்றுதான் என்பதனால் கிரவுண்டில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை கையை தலைக்கு வைத்துகொண்டு ஒய்யாரமாய் வேடிக்கை பார்க்கிற முதியவர் போல இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ‘’ஏன்டாப்பா இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா’’ என்பதுதான் நம் குரல். முதன்முறையாக வட இந்தியாவில் நீட் வேண்டாம் என்கிற குரல்கள் வலுவாக எழத்தொடங்கி இருக்கின்றன. அதன் தீமைகளை அது ஏழை மாணவர்கள் மீது நிகழ்த்தும் அநீதிகளை முதன்முறையாக உணர்ந்து கூக்குரல் எழுப்பத்தொடங்கி இருக்கிறார்கள் மாணவர்கள். பாஜகவின் நீட் குறித்த பொய் பிரச்சாரங்களை புரிந்துகொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நீட் இரண்டு விஷயங்களுக்காக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஒன்று இது மாணவர்களுக்கு உண்டாக்கும் உளவியல் நெருக்கடிகள். அது உண்டாக்கும் சுயமரணங்கள் மற்றும் இத்தேர்வில் பிள்ளைகளை வெற்றிபெற செய்ய வேண்டும் என பெற்றோர்கள் செய்யும் முட்டாள்தனங்கள். அதனாலேயே இதில் நடக்கும் பல மோசடிகள் நடக்கின்றன. இதற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருப்பதால் பணமுள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பையும் ஏழைகளுக்கு குறைவான வாய்ப்பையும் வழங்குகிற பாகுபாட்டை உருவாக்குகின்றன. ராஜஸ்தானில் கோட்டா என்கிற நகரம் நம்மூர் நாமக்கல் போல கல்விக்கு மிகவும் புகழ்வாய்ந்தது. முழுநேர கோச்சிங் நகரம். தடுக்கிவிழுந்தால் கோச்சிங் சென்டர்தான். ஐஐடி ஐஐம் நீட் போன்ற போட்டித்தேர்வுகளுக்கென்றே இருக்கிற நகரம் இந்த கோட்டா. இங்கே பயிற்சி பண்ணைகள் வைத்து போட்டித்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வார்கள். Dummy Schools என்கிற கான்செப்ட்டை உருவாக்கியதே இந்த கோட்டாதான்.

டம்மி ஸ்கூல் என்பது பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை பேருக்கு ஒரு பள்ளியில் ப்ளஸ் ஒன் சேர்த்துவிடுவார்கள். அங்கே அந்த மாணவர்கள் போய் படிக்க தேவையில்லை. வகுப்புகள் கிடையாது. ஆய்வுக்கூடங்கள் கிடையாது. எதுவுமே கிடையாது. ஃபீஸ் கட்டினால் அடுத்து, பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கட் வாங்க சென்றால் போதும். அட்டென்டன்ஸ் இன்டர்னல் மதிப்பெண் எதுவும் இல்லை.. இதுபோன்ற டம்மி பள்ளிகளை கோட்டா முழுக்க நிறைய பார்க்கலாம். டம்மி பள்ளி விளம்பரங்கள் கோட்டா முழுக்க அலங்கரிக்கும். இங்கே படிக்க(?) 15ஆயிரம் தொடங்கி 50ஆயிரம் வரை கட்டணம். மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் அந்த நேரம் முழுக்கவும் நீட் கோச்சிங் செல்வார்கள். பள்ளிப் பாடம் என்பது இரண்டாம் பட்சம்தான். தேர்வில் ஓரளவு மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள்.

இந்த டம்மி ஸ்கூல் சிஸ்டம் இப்போது இந்தியா முழுக்க பரவி விட்டது. காசிருக்கிற பணக்கார வீட்டு பிள்ளைகள் பலரும் இந்த டம்மி ஸ்கூல் சிஸ்டத்தில் படிப்பவர்களே. இவர்களுக்கும் நம்மூரில் அரசுப்பள்ளியில் தனக்கான பாடத்தை மட்டும் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குக்கும்தான் போட்டி வைக்கிறோம்! அதனால்தான் நீட்டை அநீதியான தேர்வு என்கிறோம். இப்படி பயிற்சி மையங்களில் சில லட்சங்களை செலவழித்து படித்து தோற்றாலும் மீண்டும் மீண்டும் பணம் செலவழித்து தேர்வெழுதுகிற மாணவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும். இந்த டம்மி ஸ்கூல் சிஸ்டம் இருக்கிற கோட்டாவில் கூட நீட் மாணவர்களுக்கு உளவியல் நெருக்கடியைத்தான் தருகிறது. கோட்டா நகரத்தில் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த பதினோறு மாணவர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு மாணவன் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டிருக்கிறான். 11 என்பது வெறும் எண்கள் அல்ல. இது இந்த ஆண்டு கணக்கு, இதே ராஜஸ்தான் கோட்டாவில் 2019ல் 18, 2018ல் 20, 2016ல் 17, 2015ல் 18 என்கிறது கோட்டா நகர காவல்துறை அளிக்கிற தகவல் அறிக்கை.

இது கோட்டா கணக்குதான் அகில இந்திய கணக்குகள் மூன்று இலக்கங்களில் இருக்கலாம். அத்தனையும் மருத்துவக்கனவால் இறந்து போன உயிர்கள். தமிழ்நாட்டில் இதுவரை தங்கை அனிதா தொடங்கி எத்தனையோ பேர் அநியாய நீட் தேர்வால் இறந்து போயிருக்கிறார்கள். நீட் தேர்வு தொடங்கப்பட்ட நாளில் இருந்தது போல இல்லை இன்று. அது ஒரு ராட்சச அரக்கனைபோல வளர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் அதில் இருக்கிற வணிகம். கிட்டத்தட்ட 2.3 லட்சம் பேர் எழுதுகிற தேர்வு இது. இதில் பாதி பேர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றாலும் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்! இன்று நீட் தேர்வு பயிற்சிக்கு 1.5 தொடங்கி 2 லட்சம் வரை தனியார் மையங்களில் வாங்குகிறார்கள். கணக்குப்போட்டால் சில ஆயிரம் கோடிகளுக்கு மேல் செல்லுகிற வணிகம் இது! ஆகாஷ், ஆலன், அவன் இவன் என எத்தனை பயிற்சி மையங்கள்.

எந்த செய்தித்தாளை எடுத்தாலும் முதல் பக்கத்தை நிறைத்திருக்கிறார்கள். இத்தனை பணமுள்ள ஒரு வணிகத்தை அவ்வளவு எளிதில் மூடவிடமாட்டார்கள் முதலாளிகள். உண்மையில் நீட் தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது என்கிற பொய் பிரச்சாரமும் அது ஏழைமாணவர்களுக்கு சீட் கிடைக்க வழி செய்கிறது என்பதும் பொய்யாக தொடர்ந்து பரபரப்ப படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை தமிழ்நாடு எப்போதோ உணர்ந்துவிட்டது. இப்போதுதான் வட இந்தியா உணரத்தொடங்கி இருக்கிறது. அநீதியும் மோசடிகளும் பல நாட்கள் மறைந்தே இருக்காது, அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும், அதுவே நீட்டை அழிக்கும்.

அதிஷா

Tags :
Advertisement