பெரு வெள்ள தொற்று நோய்களும், முன் எச்சரிக்கைகளும்!
கொட்டித் தீர்த்த பெரு மழையாலும், குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளத்தாலும் நோய்கள் பரவுமோ என்ற பீதி நாடெங்கும் தொற்றியுள்ளது. பல நாட்கள் வெள்ள நீர் தேங்கியதால் நீர் மூலம் பரவும் நோய்கள், கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், மனிதர்கள் மூலம் பரவும் தொற்று நோய்களே இந்தப் பீதிக்கான காரணம். ஆனால், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பயப்படுத்துவதற்கு ஒன்றுமே இல்லை.பொதுவாகக் காய்ச்சல், குளிர்-நடுக்கம், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர்களைச் சந்திப்பது மிகவும் நல்லது. மேலும் அங்கீகாரம் பெற்ற ரத்தப் பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் நோய்க்கான சிகிச்சையை சரியாகப் பெறவும் முடியும்.
எனவே இவற்றைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கைகள் இதோ:
1. தண்ணீரை எப்போதும் காய்ச்சி வடிகட்டிப் பருக வேண்டும். க்ளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் தண்ணீரை நன்றாக காய்ச்ச வேண்டும்
குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் நீர்க்குமிழ்கள் தோன்றுமளவு காய்ச்சிப் பருக வேண்டும்.
மாசடைந்த நீரை வீட்டிலேயே க்ளோரினேற்றம் செய்யும் எளிய முறை :-
ப்ளீச்சிங் பவுடரை 35 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் கலந்தால் 1% ஸ்டாக் சொல்யூசன் கிடைக்கும். நீங்கள் தொற்று நீக்கம் செய்ய விரும்பும் நீரின் அளவைப் பொருத்து
ஒரு லிட்டர் நீருக்கு 0.6 மில்லி ஸ்டாக் சொல்யூசன்
10 லிட்டர் நீருக்கு 6 மில்லி
100 லிட்டர் நீருக்கு 60 மில்லி
1000 லிட்டர் நீருக்கு 600 மில்லி
10000 லிட்டர் நீருக்கு 6000 மில்லி என்று ஸ்டாக் சொல்யூசனைக் கலந்து அரை மணிநேரம் அப்படியே விட்டு விட வேண்டும். எப்போதும் க்ளோரினேற்றம் செய்யப்பட்ட காய்ச்சிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஓ.ஆர்.எஸ் எனும் உப்புக் கரைசல் திரவத்தைப் பருகி வர வேண்டும். தாமதிக்காமல் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு விரைய வேண்டும். சுயமருத்துவம் ஆபத்தானது.முறையான மருத்துவ சிகிச்சையை விரைவில் பெற்றால் நோயில் இருந்து மீண்டு வரும் காலம் கணிசமாகக் குறையும்
2.சகதிகளில் வெறும் கால்களை நீண்ட நேரம் வைத்திருப்பதால் சேற்றுப்புண் தோன்றும் வாய்ப்பு உண்டு இதனால் கால்கள் ஊறிப்போய் "Trench Foot" எனும் பிரச்சனை வரலாம்.முதல் உலகப்போரில் பதுங்கு குழி பறித்து போர் புரியும் முறை இருந்தது. அப்போது பல வீரர்களுக்கும் பதுங்குகுழியில் சேர்ந்த மழை நீர் பாதங்களை ஊறவைத்து அதன் மூலம் நோய் தொற்று ஏற்படுத்தும் நிலை இருந்தது.அதே போன்று சகதியில் கால்களை வைத்து நீண்ட நேரம் இருப்பதால் "Trench Foot" என்று அழைக்கப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே கட்டாயம் பாதணி அல்லது ஷூ அணிந்து இருப்பது நல்லது. சகதியில் நடக்க நேரும் போது நெகிழிப்பையை கணுக்கால் வரை நன்றாக இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடக்கலாம்.
3.தேங்கிக்கிடக்கும் நீரில் வெறும் கால்களில் நடக்கும் போது கால்களில் தண்ணீருக்குள் கிடக்கும் கல் , முள் குத்தி காயம் கீறல் ஏற்படலாம். அல்லது தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஜந்துக்கள் கடித்து விடும் சூழல் இருக்கலாம். எனவே, கால்களில் அல்லது உடலில் வேறு ஏதேனும் பகுதிகளில் கல், முள் குத்தினாலோ விஷப்பூச்சிகள் கடித்தாலோ உடனே அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி டிடி எனும் டெட்டானஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.கால்களில் சேற்றுப் புண் ஏற்பட்டால் க்ளோட்ரிமசோல் களிம்பு/ விட்ஃபீல்டு களிம்பு பூசிக் கொள்ளவும். - கால்களில் ஏதேனும் கடித்த உணர்வு ஏற்பட்டால் உடனடியாக கவனித்து மருத்துவம் செய்ய வேண்டும்.பாம்புக்கடியாக இருக்கலாம். அலட்சியம் ஆபத்து. பாம்புக்கடி என்றால் இரண்டு பல் கடி தடம் இருக்க வேண்டும் என்றில்லை. கையில் தடி வைத்துக் கொண்டு அதை வைத்து அடித்துக் கொண்டும் நடக்கும் போது அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே நடப்பது ஊர்வனவற்றை விலகச் செய்யும்.
4.வெள்ள பாதிப்பு நிவாரணப்பணி புரியும் போது நாய்கள் , பூனை கடித்து விடும் சூழல் ஏற்பட்டால் உடனே ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி ரேபிஸ் தடுப் பூசியை அட்டவணைப்படி முறையாக போட்டுக்கொள்ள வேண்டும்.
5.குளிர்ச்சியான தரையில் கால்களை வைத்திருக்கும் போது முதியோருக்கு கால்கள் மரமரத்துப்போய் விடும் cold feet வந்துவிடும் தன்மை இருக்கும். எனவே வீடுகளுக்குள் இருக்கும் போதும் கூட கால்களில் காலுறைகள் (சாக்ஸ்) அல்லது பாதணி அணிந்து கொள்வது நல்லது. அவ்வபோது வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்திருப்பது இதை தடுக்க உதவும்.
6.வீட்டைச்சுற்றி தேங்கியிருக்கும் நீரில் தொற்றுப்பரப்பும் கிருமிகள் வராமல் இருக்க ப்ளீச்சிங் பவுடர் போட்டு வைப்பது உதவும்.வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தாலும் சிறிய சிறிய பொருட்களில் பாத்திரங்களில் தண்ணீர் தேங்கும் போது அவற்றில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு முட்டையிட்டு வளரும் அபாயம் உள்ளது. எனவே வீட்டைச்சுற்றியுள்ள இடங்களில் பாத்திரங்கள் தேங்காய் சிரட்டைகள் டயர்கள் ப்ளாஸ்டிக் சாமான்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் கட்டாயம் குடம் , பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்திருந்தால் அவற்றை மூடி போட்டு அல்லது துணிகள் வைத்து வேடு கட்டி வைக்கவும். தண்ணீருக்குள் கொசுப்புழுக்கள் நெளிந்தால் அந்த தண்ணீரை உடனே கொட்டி விட வேண்டும்.
7. காய்ச்சல் / இருமல் சளி போன்ற அறிகுறிகள் தோன்றுமாயின் உடனே தாமதிக்காமல் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.
8. வீட்டில் பிறந்து ஒரு வருடத்துக்குள் இருக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு நேரும் காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகளை புறந்தள்ளாமல் உடனே மருத்துவ சிகிச்சை கிடைக்கச்செய்ய வேண்டும்.வீட்டில் கர்ப்பிணிகள் அதிலும் நிறைமாத கர்ப்பிணிகள் தங்களது பிரசவ தேதியை நெருங்கிக்கொண்டிருந்தால் முன்கூட்டியே அவர்களை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் அட்மிட் செய்து கண்காணிக்க வேண்டும்.வெள்ளம் வடிந்த பிறகு பிரசவம் பார்க்கச்செல்லலாம் என்று காத்துக்கொண்டிருப்பது தாய் சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கலாம் . வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து ஆறு வாரங்கள் வரை பல்வேறு தொற்று நோய்களின் காத்திருப்பு காலமாகும். எனவே காய்ச்சல்,இருமல்,தலைவலி,கண் சிவந்து போதல்,செந்நிற படை போன்றவை ஏற்பட்டால் மருத்துவமனை விரைய வேண்டும். சுயமருத்துவம் ஆபத்து.
9. கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவத்திச்சுருள் உபயோகிக்கலாம். மணிக்கட்டு வரை முழுக்கை சட்டைகள் , கால்களை முழுவதுமாக மறைக்கும் பேண்ட் அணியலாம். குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
10. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்யும் இடங்களில் அதிக சுகாதாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் உணவு தயார் செய்யும் சமையல்காரர்கள் கட்டாயம் கைகளை சுத்தமாக சோப் போட்டு கழுவி விட்டு உணவுகளை செய்ய வேண்டும்.
11. வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலுக்கு முன்கூட்டிய தடுப்பு மாத்திரையான டாக்சிசைக்ளின் 100 மில்லி கிராம் காலை மற்றும் இரவு - ஒரு வாரம் உட்கொள்ளவும். இவை உணவு மூலம் நோய் தொற்று பரவுவதை தடுக்கும். இந்தப் பெருவெள்ள நிகழ்வைக் கடந்து மீண்டு வர இலங்கையுடன் துணை நிற்போம்