Flipkart பிரத்யேக டிஜிட்டல் கட்டண சேவை அறிமுகம்!
ஃபிளிப்கார்ட், அதன் சொந்த Unified Payments Interface (யுபிஐ) சேவையை வெளியிட்டுள்ளது. அதன் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, டிஜிட்டல் கட்டண விருப்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. புதிய ஃபிளிப்கார்ட் யுபிஐ சேவை மூலம் அதன் இ-காமர்ஸ் சேவை மட்டுமன்றி, குழுமத்தின் மிந்த்ரா, ஃபிளிப்கார்ட் ஹெல்த் உள்ளிட்டவற்றின் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம். இவற்றுக்கு அப்பால் இதர யிபிஐ சேவைகளைப் போன்றே பொதுவான மொபைல் ரீசார்ஜ், பணம் அனுப்புதல் - பெறுதல் உள்ளிட்ட நிதி சேவைக்கும் ஃபிளிப்கார்ட் பே சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக ஃபிளிப்கார்டின் பிரத்யேக வெகுமதிகளான, சூப்பர் காயின் மற்றும் சிறப்பு வவுச்சர் உள்ளிட்டவற்றையும் பெற்றுப் பயனடையலாம் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபிளிப்கார் நிறுவனம், அவ்வப்போது அமேசானுக்கு நிகராக தன்னையும் மேம்படுத்தி வருகிறது . இந்த வரிசையில் தனது ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.முன்னதாக ஜிபே, பேடிஎம், போன்பே, அமேசான் பே போன்ற இதர யுபிஐ சேவைகளையே ஃபிளிப்கார்ட் பயன்படுத்தி வந்தது. இப்போது தனக்கான பிரத்யேக யுபிஐ சேவை வாயிலாக, வாடிக்கையாளர்களின் மின் வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்க முயல்கிறது.
முக்கியமாக சகலத்திலும் அமேசானுடன் போட்டியிடும் ஃபிளிப்கார்ட், அந்த நிறுவனத்தின் ’அமேசான் பே’ யுபிஐக்கு போட்டியாக பிரத்யேக யுபிஐ கொண்டுவரும் முயற்சியை தற்போது சாத்தியமாக்கி உள்ளது. இதற்காக ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து, இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் வழி வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.’ஃபிளிப்கார்ட் பே’ எனப்படும் இந்த பிரத்யேக யுபிஐ சேவை, தனது சுமார் 50 கோடி ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என ஃபிளிப்கார்ட் கணிக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 117 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாண்டதாக பெருமிதப்படும் ஃபிளிப்கார்ட், இனி அந்த பரிவர்த்தனைகளுக்கா மூன்றாம் தரப்பின் உதவியை நாடத் தேவையில்லை என திருப்தி கொள்கிறது.
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் சூப்பர்காயின்கள், பிராண்ட் வவுச்சர்கள் மற்றும் பிற வெகுமதிகளை, பாதுகாப்பான மற்றும் வசதியான கட்டண விருப்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனேஜா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஃபிளிப்கார்ட் செயலியின் உள்ளேயும் வெளியேயும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கட்டணங்களுக்கான பிளிப்கார்ட் யுபிஐ வசதி முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் முதலில் ஃபிளிப்கார்ட் செயலியில் யுபிஐ ஐடியை உருவாக்க வேண்டும், அதன் பிறகு அவர்கள் வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பணம் செலுத்தலாம். வேறு எந்த செயலிக்கும் செல்லாமல் நேரடியாக பில்களை செலுத்தலாம். மிந்த்ரா, பிளிப்கார்ட் ஹோல்சேல், ஃபிளிப்கார்ட் ஹெல்த் மற்றும் க்ளியர்டிரிப் உள்ளிட்ட ஃபிளிப்கார்ட் குழுமம் நிறுவனங்களில் இந்த யுபிஐ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.