For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நவீன இந்தியாவில் நிஜ சிற்பி ஜவஹர்லால் நேரு!

08:25 AM May 27, 2024 IST | admin
நவீன இந்தியாவில் நிஜ சிற்பி ஜவஹர்லால் நேரு
Advertisement

வஹர்லால் நேரு, இளவரசனாகப் பிறந்தவர். அரசனாக வளர்ந்தவர். ஆனால், ஆண்டியாக வாழ்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பிறகு, அவர் பெரும்பாலும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்ந்தார். ‘அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத்தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமானமாக இருந்தது’ என்று எழுதுகிறார், அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய். ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது. ‘வீட்டின் வேலையாள்களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்ந்தார் மத்தாய். நேரு எனும் ஆளுமை, சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்துசெல்லும் நெஞ்சுரத்தை அவர் காந்தியிடம் இருந்துபெற்றிருந்தார். ‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை. தண்டனையைப் போல ஒரு தவமில்லை’ என்றே, சிறை அதிகாரிகளிடம் சொல்கிறார், அவர். ஒரு கணக்கின்படி, நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3259... கிட்டத்தட்ட 9 வருடங்கள், அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சிறைவதையை அனுபவித்திருக்கிறார். சிறையில் கழிந்தது அவரின் இளமை. காசநோயால் அவதிப்பட்டு வந்த மனைவியை அருகிருந்து கவனிக்க முடியவில்லை. அந்தத் தியாகத்துக்குதான் இன்று நினைவு நாள்.

Advertisement

1934 பிப்ரவரியில் இருந்து, 1935 செப்டம்பர் வரை, 188 புத்தகங்களை சிறைச்சாலையின் தூசிபடிந்த தரைகளில் அமர்ந்து படித்து முடித்திருக்கிறார், நேரு. அவற்றில் அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று எல்லாமே கலந்திருந்தது. காந்தி அலைந்து திரிந்து கண்டுணர்ந்த இந்தியாவை அவரால் உட்கார்ந்த இடத்திலேயே கண்டுணர முடிந்தது புத்தகங்களில்தான்.

Advertisement

ஆனால் பாருங்கள்... இத்தனை படித்த நேரு, இத்தனை சிந்தித்த நேரு, இத்தனை எழுதிய நேரு, ’நான் எவ்வளவு பெரிய அறிவாளி பார்த்தீர்களா’ என்று எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை மேடையில் சொல்லி அழுது, அரசியல் ஆதாயம் அடைய முயன்றதில்லை. நேருவின் விமர்சகர்கள்கூட, அவரின் அத்தனை செயல்களும் இந்தியா மீதான நம்பிக்கையில் இருந்தும், இந்திய மக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பில் இருந்தும் எழுந்து வந்ததை ஏற்றுக்கொள்வார்கள். நேரு தொடந்தார். ’உண்மையும் நம்பிக்கையும் கொண்டு நாம் பயணத்தைத் தொடங்குவோம். இது இந்தியாவுக்கான பயணம் மட்டுமல்ல, உலகத்துக்கான பயணமும்கூடத்தான். இது எவரையும் தூற்றுவதற்கான தருணமோ, எவர் மீதேனும் பழிபோடும் தருணமோ அல்ல. நமக்கென ஒரு கனவு காத்திருக்கிறது. அதை மெய்யாக்கப்போராடுவோம்’ என்று பேசிவிட்டு அவர் மேலே பார்த்தபோது, அவரை ஆதுரத்துடன் ஆசீர்வதித்தாள், இந்திய அன்னை. நேருவின் அந்த ஒருநிமிட உரைதான், ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ என்ற பெயரில், பின்னாளில் உலகப்புகழ் பெற்றது. இது, எவரோ எழுதிக்கொடுத்து நேரு பேசிய பேச்சல்ல. அவை, அவரது மனதில் இருந்து எழுந்து வந்த வார்த்தைகள். அவருக்குள் இயல்பாகவே ஓர் ஆட்சியாளன் இருந்தான். நேருவை பிரதமர் ஆக்கியது காந்தியல்ல; காந்தியின் வழியாக காலம்தான் அவரைத்தேர்ந்தெடுத்தது. அடிப்படையில், அவர் ‘Officer Material' அல்ல. ஆனால், ஓர் ஆட்சியாளன் ‘Officer Material' ஆக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ‘இங்கே கண்ணீர் இருக்கும்வரை, நமக்கு கடமை இருக்கும்’ என்ற சொல்லை, வெறுமே ஒரு நிர்வாகியால் பேசிவிட முடியாது.

சந்தேகமே இன்றி, இந்திய அன்னையின் தலைப்புதல்வன், நேருதான். எத்தனை காந்திகள், மோடிகள் வந்தாலும் அவரது அந்த இடத்தை தட்டிப்பறிக்க முடியாது. இன்றைய இந்தியா முழுக்க முழுக்க நேருவின் சிருஷ்டி. நேரு இறந்தபொழுது உலக ஊடகங்கள், ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று அழைத்தே அவருக்கு அஞ்சலி செலுத்தின.

1947-ல் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளார். அந்த 17 ஆண்டுகளாம் , நேரு மோசமாக ஆட்சியையோ அல்லது கொடுங்கோல் ஆட்சியையோ செய்திருக்கவில்லை என்பதற்கு சான்று தான் வரலாறு அவரை ‘நவ இந்தியாவின் சிற்பி’ என அழைப்பதற்குக் காரணம். நேருவின் வாழ்க்கையை நினைவுகூர்வது முக்கியமானது. அதன்மூலம், அவரின் வாழ்நாளில் இந்தியாவிற்கு எப்படியெல்லாம் உழைத்தார் என்றும், இப்போதும் நேரு ஏன் தேவைப்படுகிறார் என்றும் உணர முடியும்..

200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் சுரண்டல் ஆட்சிக்குப் பிறகு, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நாடாகத் திக்கற்ற நிலையில், ஆதரவின்றி விடப்பட்டது இந்தியா. சுதந்திரம் பெற்றபோது, உலகத்தின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக தர வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருள் சூழ்ந்த தீவு போல திக்கற்ற நிலையில் தான் இந்தியா இருந்தது. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் இந்தியா வித்தியாசமான நாடு. இங்கே, இருபது மொழிகள். இருநூறு இனங்கள். இரண்டாயிரம் சாதிகள். இதை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாம் வெளியேவேண்டுமானால் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உள்ளுக்குள் அது ஆண்டாண்டு காலமாக சமத்துவத்தை சூழ்ந்து சுட்டெரிக்கும் கொடுநெருப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலங்களில், அந்த நெருப்பு இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருந்தது. அப்போது மட்டும், ‘அனைவரும் பங்களிப்பதேஉண்மையான ஜனநாயகம்’ என்ற எண்ணத்தை உள்ளத்தில் சூடிய நேரு எனும் தலைவன் எழுந்து வந்திருக்காவிட்டால், இந்தியா உள்நாட்டுப் போர்களால் உருக்குலையும் இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாறியிருக்கும்.

இப்படியான மோசமான நிலையில்தான் இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பேற்றார். வறுமையில் உழன்று கொண்டிருந்த இந்தியாவை சரியான திட்டமிட்ட பொருளாதாரத்தின் மூலம் வளர்ச்சியை நோக்கி முன்னேற தொடங்கியது. என்ன செய்தார் நேரு என்பதற்கு அன்றைய சுதந்திர இந்தியாவின் நிலையை அடிப்படையாக வைத்துத்தான் அவரது சாதனைகளைப் பார்க்க வேண்டும். இந்தியா இன்று இருக்கும் நிலைக்கு, நேருவின் ஆட்சிக்காலம் தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கிறது. இந்தியாவை விடுதலைக் குடியரசாக அறிவித்ததோடு, தனக்கான அதிகாரத்தை இந்தியா தன்னுடைய மக்களிடமிருந்தே பெறுகிறது என்று அறிவித்ததார்.

அனைவருக்கும், "சமூக, பொருளாதார, அரசியல் நீதி கிடைப்பதையும்; சம அந்தஸ்து, வாய்ப்புகளை உறுதி செய்வதையும்; சிந்திக்கவும், விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமையும் மேலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பகுதிகளுக்குப் பாதுகாப்பும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டது. இவையனைத்தும் அதற்கு முன்புவரை தரப்படவில்லை. 1937-ம் ஆண்டு தேர்தலில் சொத்துரிமையைக் கொண்டு வாக்களிக்கும் உரிமை மூன்று கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால், விடுதலை இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் 17.3 கோடி இந்தியர்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.

தொழில் துறையைப் பொறுத்தவரை நேருவுக்குப் பெருங்கனவு இருந்தது. 1948-ல் தொழிற்கொள்கைத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஒழுங்குமுறைச் சட்டம் 1951-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1952-ல் சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF) நிறுவப்பட்டது. 1953-ல் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்எம்டி) உருவாக்கப்பட்டுப் பலவிதமான தொழில் உபகரணங்களை உற்பத்திசெய்யத் தொடங்கியது. 1954-ல் அரசாங்கத்துக்குச் சொந்தமான பிம்ப்ரி ஆலையிலிருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்பட்டது போன்ற பல விசயங்கள் நேருவால் நிகழ்ந்தது தான். அதே நேரத்தில் சமூக நலன் மீதும் அவர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் விளைவாக, பல முக்கியமான சட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டன. 1947-ல் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நல நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1956-ல் ஆயுள் காப்பீட்டுக் கழகம் தேசியமயமாக்கப்பட்டது நேரு அரசு எடுத்துவைத்த முக்கியமான முன்னெடுப்பு இது.

1954 அன்று உலகின் மிகப் பெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பைத் தொடங்கிவைத்த நேரு, ‘அணைகள், வழிபட வேண்டிய ஆலயங்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும், கொனார் அணை, கிருஷ்ணா நதி மீது நாகார்ஜுனா சாகர் அணை, பக்ரா நங்கல் அணை, ரிஹந்த் அணை என்று ஏராளமான அணைகள் நேருவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 1960-ல் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன அமைப்பைக் கட்டமைக்க இது உதவியது.

வறுமையில் ஆழ்ந்துகிடந்த இந்தியாவைக் கல்வியில் கரையேற்றுவது அவ்வளவு சாதாரணமான விஷயமா? இந்த அசாதாரண விசயத்தை நிகழ்த்தி காட்டினார். நேருவின் ஆட்சிக் காலத்தில் நாடெங்கும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் என சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்திலும் நாடு வளர்ச்சியும், சமூக அக்கறையும் இருக்கும்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை, அண்ணல் அம்பேத்கரை அழைத்து உருவாக்கியது, அவரது அரசு. அனைத்துக்கும் மேலே, இந்தியாவின் அடையாளமாக அசோகரை கொண்டு வந்து வைத்தார், நேரு. அவர் நினைத்திருந்தால் சிவாஜியையோ அக்பரையோ இந்தியாவின் அடையாளமாக மாற்றியிருக்கலாம். ஆனால், தர்மச்சக்கரத்தை உருட்டிய அசோகரை இந்நாட்டின் அடையாளமாக ஆக்கினார், நேரு.

‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு.

ஆம்! பைகளில் இருக்கும் வாக்குச்சீட்டை எடுத்துப் பாருங்கள். அதை நமக்கு அளித்தது ‘ஜனநாயகம்’. அந்த ஜனநாயகத்தை நமக்கு அளித்தவர், நேரு. ’நீங்கள் விட்டுச் செல்லும் விஷயமாக எது இருக்கும்?’ என்ற கேள்விக்கும், ‘ஜனநாயகம்தான்’ என்றே பதில் சொன்னார், அவர்.

நேரு, மாமனிதன்! மாமனிதன் என்பதாலேயே, அவரால் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியாமல் போனது. என்ன செய்வது? மாமனிதர்களை அப்படியொரு நிலைக்கு தள்ளிவிட்டு விடுகிறது, விதி. காந்தியும் கடைசிக்காலங்களில் கண்ணீரைத்தான் சுமந்து கொண்டிருந்தார். காமராஜரின் கல்லறையும் இன்னும் ஈரமாகத்தான் இருக்கிறது. லிங்கனின் அழுகுரலை கனவில் கேட்காத அமெரிக்கர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அந்த மகான் நினைவு நாளில் கண்ணீர் அஞ்சலி!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement