பெண்களை வதைக்கும் பண்டிகைகள்!
உங்களுக்கு ஒன்று தெரியுமா.? தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கை கண்டு பிடிப்பதற்கு முன் உலகத்து மனிதர்கள் எல்லாம் தினமும் பத்து மணி நேரம் உறங்கினார்கள். அப்போது அதுதான் நார்மல்.. அதாவது மொத்த மனித இனத்துக்கும் மிருக இனத்துக்கும். இந்த மின்சாரமும் மின் விளக்கும்தான் நம்முடைய மொத்த வாழ்வியல் நடைமுறைகளையே மாற்றிவிட்டன. சின்ன வயதில் எங்களுக்கு டிவி, மொபைல் எதுவும் கிடையாது. எங்கள் வீட்டுக்கு டிவி வந்ததே 93 ல்தான் என நினைக்கிறேன். 96 ஆ என்று நினைவில் இல்லை.. முதல் ஃபேன் 96 ல் போட்டோம்.. சின்ன வயதில் ஏழரைக்கே எங்களுக்கு தூக்கம் சொக்கத் துவங்கிவிடும். இரவு சாப்பாடு. உடனடியாக படுக்கை. அவ்வளவுதான்.. காலை ஆறரை ஏழுக்கு அடித்துதான் தினமும் எழுப்பி விடுவார்கள். பின்னர்தான் டிவி வந்தது. சீரியல்கள் வந்தன.. கேபிள் சேனல்கள் வந்தன.. மொபைல், யு டியூப், ஓடிட்டீ.. வெப் சீரீஸ் என்று அனைத்தும் வந்தன மனிதனின் உறங்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது சராசரி மனிதன் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் உறங்குகிறான். மருத்துவர்கள் மனிதர்களிடம் எட்டு மணி நேரமாவது உறங்குங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருககிறார்கள்.
******
சொல்ல வந்தது அதைப் பற்றி அல்ல.. இந்த பண்டிகைகளைப் பற்றி..
அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல்,. கிருஷ்ணஜெயந்தி, சித்திரை முதல் நாள்.. இவைதான் பண்டிகைகளாக இருந்தன. அம்மா எங்கள் ஐந்து பேருக்கும் நாள் முழுக்க உழைத்துதான் சோறு போடுவாள். ஆனால் இந்த பண்டிகை நாட்கள் இருக்கின்றனவே.. அம்மாவுக்கு கிட்டத்தட்ட உறக்கமே கிடையாது. தீபாவளியை எடுத்துக் கொள்வோம்.. தீபாவளி வந்தாலே அம்மா ஓர் உழைக்கும் மிஷினாக மாறி விடுவாள். அப்போதெல்லாம் யு டியூப் இல்லை. அக்கம்பக்க ஆன்ட்டிகளும் அத்தைகளும்தான் பட்சணங்கள் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களது கைப் பக்குவம் வந்து விடக் கூடாது என்று முக்கியமான இன்கிரேடியண்ட்களை சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.என் அம்மா மாதிரியானவர்கள் அவர்கள் சொன்னபடி செய்தும் முறுக்குகள் கம்பி மாதிரியும், மைசூர்ப்பாகுகள் கல் மாதிரியுமாக வந்தது குறித்து பெரும் கவலை கொண்டிருப்பார்கள்.தீபாவளி நெருங்க நெருங்கவே அம்மா அனைவருக்கும் சமைத்து துவைத்து, பாத்திரம் கழுவி வீடு கூட்டி மெழுகி, அனைத்து சேவைகளையும் செய்து முடித்துவிட்டு பலகாரம் சுட உட்கார வேண்டும். தேன்குழல், முள்முறுக்கு, எதாவது ஒரு ஸ்வீட் என்று அது இரண்டு நாட்களுக்கு எதுக்களிக்கும் எண்ணை வாசத்தில் உட்கார்ந்து சுட்டுத் தள்ளுவார்கள்.
அப்புறம் தீபாவளிக்கு முந்தின நாள்..
அது ரொம்ப கொடுமை. தீபாவளிக்கு இட்லி சுட அந்த மாவை தனியாக ஆட்டுக்கல்லில் உட்கார்ந்து ஆட்ட வேண்டும். அதன் பிறகு தீபாவளிக்கு என்று சுடும் தனிப்பட்ட வெள்ளையப்பம் என்று ஒன்று இருக்கும். அதற்கான மாவை ஆட்ட வேண்டும்.. அப்புறம் உக்காரை என்று ஒரு இனிப்பு பலகாரம் செய்வார்கள். அதற்கு இடிக்க வேண்டுமோ அரைக்க வேண்டுமோ.. நாள் முழுக்க வேலை வேலை என்று உழன்று கொண்டிருப்பார்கள். இரவு படுக்கப் போகையில் ஒரு மணியாவது ஆகிவிடும். பிறகு மூன்று மணிக்கே எழுந்து விடுவார்.. விடிந்த பின் பிள்ளைகளுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்ட வென்னீர் போட ஒரு பெரிய போராட்டம். பிள்ளைகளை குளிக்க வைக்க ஒரு போராட்டம். குளிக்க வைத்தப்பின் ஒரு பக்கம் இட்லி அவிக்க வேண்டும். ஒரு பக்கம் எண்ணையில் வெள்ளையப்பம் பொறிக்க வேண்டும். அப்புறம் இந்த உக்காரை.. !
நினைத்துப் பார்த்தால் பண்டிகை என்றால் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருந்தது குடும்பப் பெண்கள்தான். அவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும்.. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பண்டிகை என்று வந்துவிட்டால் அவர்கள்தான் நசிந்து போக வேண்டும்.
கந்தர்வனுடைய இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்டிருக்கில்லை..
கவிதையை சரியாக இங்கே சொல்லி இருக்கிறேனா என்று கூட தெரியவில்லை. ஆனால் இது அன்றைக்கு உலகாயத உண்மை..
******
பெண்களை வதைக்கும் இந்த பண்டிகைகள் என்பன தற்போது சற்றே நெகிழ்ந்து கொடுத்திருக்கின்றன. நாங்கள் சென்னையில் வாழ்ந்த காலத்திலேயே தீபாவளி அன்று காலையில் வெடிச்சத்தம் கேட்கும் ஐந்தரைக்கு மேல்தான் சோம்பலாக எழுவோம். பலகாரங்கள் எதுவும் வீட்டில் சுடுவது இல்லை. எதாவது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,, அடையாறு ஆனந்தபவன் என்று வாங்கி வைத்துவிடுவோம். ஆனாலும் மனைவியார் தன் கையால் எதாவது செய்தே ஆக வேண்டும் என்று இந்த எழவெடுத்த குலோப் ஜாமூனை தவறாமல் செய்து விடுவார். சரி. செய்ததை அக்கம் பக்கத்துக்கு கொடுத்து ஒழித்து விடுவோம் என்று பார்த்தால் அக்கம் பக்கத்தில் இருந்து நான்கு மடங்கு குலோப் ஜாமூன்கள் வந்து நிற்கும்..
****
ஆக தற்போது இப்படியான பண்டிகை பலகாரங்கள் சுடும் தண்டனைகள் பெண்களுக்கு இல்லைதான். ஆனாலும் பண்டிகை என்று வந்துவிட்டால் இப்போது புதிய நெருக்கடிகள் பெண்களுக்கு வரத் துவங்கி இருக்கின்றன. மூன்று வகை கறிகள்.. ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன்.. அனைத்தையும் பெண்கள்தானே சமைக்க வேண்டும்.. அப்படியே ஒரு வெஜிட்டேரியன் பண்டிகை என்றால் வெஜிட்டேரியனிலும் பல வகைகளை பெண்கள்தான் சமைக்க வேண்டி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை.. அது ஒரு பெரிய ப்ராசஸ்.. உண்மையில் நேரத்தைத் தின்னும் சமையல் அது.
*****
நண்பர் வக்கீலய்யா சரவணன் ஒரு பதிவு போட்டிருந்தார். கொழுக்கட்டை அரைக்கிலோ இவ்வளவு என்று விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று.. எனக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. எப்படி தீபாவளி பலகாரங்களில் இருந்து பெண்களை இந்த இனிப்புக் கடைகள் விடுவித்தனவோ அதே போல இந்த கொழுக்கட்டை எரிச்சலில் இருந்தும் பெண்கள் விடுபடும் நேரம் வந்துவிட்டது என நான் நம்புகிறேன். எல்லா பண்டிகைகளுக்குமான பலகாரங்கள் அனைத்தும் இனி வணிக நிறுவனங்கள் மூலம் கிடைக்கத் துவங்கிவிட்டால் பெண்களுக்கு அந்தந்த நாட்களின் ஸ்ட்ரெஸ்ஸாவது மிஞ்சும் என நான் எதிர்பார்க்கிறேன்.
******
கோவை தோழர் விஜி ராம் ஒரு பதிவு போட்டிருந்தார். நம் தோழமையில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் விதவிதமாக சமைத்தேன் என்று சோஷியல் மீடியாக்களில் போடும்போது நமக்கும் ஸ்ட்ரெஸ் தொற்றிக் கொள்கிறது.. நாமும் அதே போல சமைத்தே ஆக வேண்டி இருக்கிறது. பல பெண்கள் இந்த ஸ்ட்ரெஸ்ஸில் மாட்டிக் கொள்கிறார்கள். விநாயகர் சதுத்ர்த்தியாக இருந்தால் என்ன..? வழக்கம் போல அரிசீம் பருப்பும் ஆக்கி வைத்துவிட்டு சாமிக்கு ரெண்டு பூ போட்டுவிட்டால் போதும் என்று.. உண்மையில் இந்த சமூக ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபடுவதுதான் தற்போது முக்கியமாக இருக்கிறது..
பெண்கள் அனைவரும் அதைத்தான் இப்போது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நமது பாரம்பரிய ஸ்வீட்கள். கொழுக்கட்டைகள் எல்லாம் இனிமேல் அழிந்து போகுமே என்று ஒரு கும்பல் ஒப்பாரி வைத்துக் கொண்டு வரும்.. ஏண்டா.. உலகின் மிகப் பெரிய மிருக இனங்களே அழிந்து வருகின்றன. அதற்கே கவலைப் படாத நீங்கள், கேவலம் கொழுக்கட்டைக்கும், சுகியத்திற்கும் வக்காலத்து வாங்கிட்டு வருகிறீர்களே.. கொழுக்கட்டை தயாரிப்பு அழிந்து விட்டால் உலகம் நின்றுவிடவா போகிறது..? போயி வேலை கூந்தல் இருந்தா பாருங்கலே.. இல்லன்னா அடுத்த திருட்டுப் பிள்ளையார் சதுர்த்தியில் இருந்து நீங்க கொழுக்கட்டை செய்ய ஆரம்பிங்கலே.. என்று சொல்லி விட வேண்டி இருக்கிறது.
அது சரி. கொழுக்கட்டையை பெண்கள் செய்தால் மட்டும்தான் இனிக்குமா என்ன..?