தமிழ்நாடு ஆளுநராக பாத்திமா பீவி -களமாடிய கர்நாடகம்!
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானப் பெருமையோடு செயல்பட்ட பாத்திமா பீவி, தமிழகத்தில் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றார். நூற்றாண்டை நெருங்குகின்ற நிலையில் 96வது வயதில் காலமாகிவிட்டார்.
பாத்திமா பீவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சில அரசியல் சுவாரசியங்கள் உண்டு. அவற்றை மேலோட்டமாக இங்கே கவனிக்கலாம்.
அந்த காலகட்டத்தில் அரசியல் களச் செயல்பாட்டில் நான் தினமலர் சிறப்புச் செய்தியாளனாகச் சுற்றித் திரிந்துத் தெரிந்தவை இவை.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மக்களிடையே செல்வாக்கானத் தலைவராகத் திகழ்ந்தவர் சி எம் இப்ராஹிம். அவருக்கு எழும்பூரில் கூட அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அதன் சட்டரீதியான பிரச்சினையின் போது அடியேனும் உடனிருந்து ஒத்துழைத்துள்ளேன். தேவே கவுடாவின் ஆத்மார்த்தமான சீடரவர். மதசார்பற்ற ஜனதா தளத்திற்குக் கர்நாடக இஸ்லாமியர்களின் வாக்குகளைத் திரட்டிக் கொடுத்து, வெற்றிக்கான வழியை வகுத்து வழங்கி வந்தவர் இப்ராஹிம்.பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன்பாடு வைத்துக் கொண்டதாக அறிவிப்பு வெளியானதும், நொந்து போன சிஎம் இப்ராஹிம், நீண்ட காலத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு, தேவே கவுடாவை விட்டு மட்டுமல்ல; மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை விட்டும் ஒதுங்கி விட்டார். வரை இழுத்துப் பிடித்து வளைத்துக் கொள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சி களமாடி வருகிறது.
புது டெல்லியில் அரசியல் களத்தில் அடுத்த பிரதமர் யார் சர்ச்சை எழுந்த காலகட்டம். அப்போது கர்நாடக முதல்வராக இருந்தவர் தேவே கவுடா. அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யக்கூடிய செல்வாக்கில் இருந்தோர் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி, பீகாரைச் சேர்ந்த லல்லு பிரசாத் யாதவ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோதிபாசு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரான ஹர் கிஷன் சிங் சுர்ஜித், தமிழகத் தலைவரான மூப்பனார் போன்றோர். அடுத்த பிரதமராக யாரை அறிவிப்பது என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் இருக்கும் பழைய தமிழ்நாடு இல்லத்தில் மேல் தள அரங்கில் நடந்தது. அதில் மேற்கண்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியது கலைஞர் தான்.
ஒவ்வொரு தலைவரின் மனதிலும் ஒருவர், பிரதமர் பதவிக்கான தகுதியாளர் என நிழலாடிக் கொண்டிருக்க... அத்தகைய சூழலில் தேவகவுடாவைப் பெரும்பாலான தலைவர்களின் இதயத்தில் இருக்கச் செய்யும் பணியைத் திட்டமிட்டுச் செயல்படுத்திக் காட்டியவர் தான் இப்ராஹிம். இதற்கான விளைவு விடை தான் கலைஞர் தலைமையிலான டெல்லி தமிழ்நாடு இல்லம் ஆலோசனைக் கூட்டத்தின் போது உணரப்பட்டது. கூட்டம் தொடங்கியதும், யாரைப் பிரதமராக அறிவிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனையைக் கலைஞர் தான் தொடங்கி வைத்தார். ஜோதி பாசு பெயர் தான் முதலில் அடிபட்டது. அப்போது அவர் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும், யாராலும் வெல்ல முடியாத தனிப் பெரும் தலைவராகவும் விளங்கி வந்தார். பாசுவின் பெயர் அடிபடத் தொடங்கியதும், ஹர் கிஷன் சிங் சுர்ஜித் ஆமோதித்துப் பேசி இருக்க வேண்டும். ஆனால் அவரோ தயக்க மயக்கத்தில் தள்ளாடினார்.
ஜோதிபாசுவிடமே கேட்கப்பட்டது. மிக நிதானமாகவும் உணர்ச்சிவசப்படாமலும் அமைதியாகச் சொன்னார் பாசு: "நான் பிரதமராக விரும்புகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. என் கட்சி முடிவெடுக்க வேண்டும். ஆனால் மேலிடத்தில் இதற்கு ஒப்புதல் இல்லை. என் கட்சி மேலிடத்தைத் தாண்டி எந்த முடிவையும் நான் எடுக்க முடியாது. ஆகவே கட்சித் தலைமை எடுத்த முடிவுக்குத் தலைவணங்கி, நான் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். "
-இப்படித்தான் அவர் மென்மையாகத் தெரிவித்தார்.
அடுத்தடுத்து மூப்பனார் உட்பட சில பெயர்கள் குறிப்பிடப்பட்டன. என்றாலும் சிஎம் இப்ராஹிம் நடத்திய களப்பணியின் காரணமாக தேவகவுடாவின் பெயர் தான் பலமாக அடிபடத் தொடங்கியது. அப்போது தேவே கவுடாவே எழுந்து, "பிரதமர் பதவியை வகிக்க நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் தயார்" என பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
இதனால் மற்ற தலைவர்களுக்கு இந்தக் கருத்தை எதிர்த்துப் பேசத் தர்ம சங்கடம். ஆகவே ஒவ்வொருவரும் லேசாக தலை ஆட்டத் தொடங்கினர். வேறு வழி இன்றி தேவே கவுடாவின் பேரையே கலைஞர் அறிவிக்க வேண்டியதாயிற்று.
அடுத்த பிரதமர் யார் என்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்து கொண்டிருந்த தமிழ்நாடு இல்லத்தின் தரை தளத்தில் நூற்றுக் கணக்கான செய்தியாளர்கள் குவிந்து விட்டார்கள். நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் தலைவரைப் பற்றிய அறிவிப்பல்லவா? வேகமும் விறுவிறுப்பும் செய்தியாளர்களிடையே இருந்தன.
அந்த செய்தியாளர் குழுமத்தில் ஒருவனாக, தினமலர் சிறப்புச் செய்தியாளனாக அடியேனும் இருந்தேன். மாடித்தளத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்ட பின்னர், படிக்கட்டுகள் வழியே கலைஞர் ஒருபுறமும் லாலு பிரசாத் யாதவ் மறுபுறமும் இருக்க, நடுவில் தேவே கவுடா என்றவாறு மூவரும் இறங்கி வந்தனர். கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் வடநாட்டுச் செய்தியாளர்களே அதிகம். குறிப்பாக வட இந்திய மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தொலைக்காட்சிகளின் கலைஞர்கள் மிகுதியாக இருந்தார்கள்.
ஆகவே ஒரு தொலைக்காட்சியின் காட்சிப்படக் கலைஞர் தனது கேமராவை வேகமாகக் கொண்டு சென்று லல்லு பிரசாத்தின் முகத்தருகே நிறுத்தினார். ஆனாலும் அவரின் ஆவேசம் காரணமாகவும், உணர்ச்சிமயமான சூழல் இருந்ததாலும் அவரின் கட்டுப்பாட்டையும் மீறி லல்லுவின் முகத்தில் கேமரா பலமாக மோதியது. இதனால் லல்லுவின் பல்லு உடைந்து குருதி கொட்டிற்று. அவர் எதிர்வினையாற்றுவார் என்று நாங்கள் எல்லாம் பதற்றத்தோடு இருந்த நிலையில், அவரோ...அந்தப் புகைப்பட கலைஞரின் தோளில் கையைப் போட்டு, "ஹம் சப் பாய் ஹைங்" ( நாமெல்லாம் சகோதரர்கள்) என்று கூறியவாறு, அந்த தற்செயல் தாக்குதலைப் போகிற போக்கில் ஒதுக்கி வைத்து விட்டு, முக்கிய பணிக்குத் தன் கவனத்தைத் திருப்பிக் கொண்டார்.
தேவே கவுடாவின் பெயரைக் கலைஞர் அறிவித்தார். அதுவரையிலும் தேவே கவுடாவின் பெயர் பிரதமரின் தேர்வுக்குரியதாக இருப்பதாகவே இதழியல் வட்டாரத்தில் கிசுகிசுக் கசிவுக் கூட கிடையாது. அந்த அளவுக்கு மிகத் துல்லியமாகவும் ரகசியமாகவும் களப்பணியாற்றி முடித்து, வெற்றி கண்டவர் சிஎம் இப்ராஹிம் தான். இவ்வாறாக தேவே கவுடா பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
தன்னை பிரதமர் ஆக்கும் அளவுக்கு கடும் பணியாற்றிய தன் சீடர் சிஎம் இப்ராஹிமை மத்திய அமைச்சராக்கித் தன்னுடன் நெருக்கமாக வைத்துக் கொண்டார். தேவே கவுடா. மத்திய அரசு எடுத்த அப்போதைய பல்வேறு முக்கிய முடிவுகளில் இப்ராஹீம் தாக்கமும் இருந்து வந்ததை மறுக்க இயலாது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் புதிய ஆளுநரை நியமிப்பதற்குரிய சூழல் உருவாயிற்று. அப்போது உச்ச நீதிமன்றத்தின் பெண் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற, கேரளத்தைச் சேர்ந்த பாத்திமா பீவி பெயரை பிரதமரிடம் முன்மொழிந்தவர் சிஎம் இப்ராஹிம் தான். அவரின் முயற்சி காரணமாகத் தான் பாத்திமா பீவி தமிழ்நாடு ஆளுநராக, ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டார். கேரளப் பெண்மணி யைத் தமிழக ஆளுநராக்கக் கர்நாடகம் களம் கண்ட அரசியல் விநோதம் தானே!பாத்திமா பீவி காலமாகிவிட்ட இந்த சூழலில், அரசியல் வரலாற்றில் பதிவிட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, இபபதிவை வெளியிட்டு இருக்கிறேன்.
ஆர் நூருல்லா செய்தியாளன்
26-11-2023