தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘நரம்பியல் நோய்களின் தந்தை' அல்சீமர்!

09:23 AM Dec 19, 2024 IST | admin
Advertisement

ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணரும், தலைசிறந்த நரம்பியல் மருத்துவருமான அலாய்ஸ் அல்சீமர் (Alois Alzheimer) காலமான  நாளின்று

Advertisement

ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள மார்க்பிரைட் என்ற கிராமத்தில் (1864) பிறந்தார். தந்தை சொந்த ஊரில் ஒரு வழக்கறிஞரிடம் பணிபுரிந்து வந்தார். தலைசிறந்த ராயல் ஹ்யுமானிஸ்டிக் ஜிம்னாசியம் பள்ளியில் பயின்றார். இளம் பருவத்திலேயே அறிவியலில் நாட்டம் கொண்டார். மருத்துவக் கல்வியிலும் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிக் கல்விக்குப் பிறகு அஷ்பென்பர்க், டுபிங்கன், பெர்லின், வூர்ஸ்பர்க் பல்கலைக்கழகங்களில் பயின்று 1887-ல் மருத்துவப் பட்டம் பெற்றார்.

Advertisement

பிறகு பிராங்க்பர்ட்டில் பல மருத்துவமனைகளில் பணியாற்றினார். மருத்துவராக, பேராசிரியராகப் பணியாற்றினாலும் நோயியல் குறித்த ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நரம்பு நோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பிரபல உளவியல் நிபுணர்கள், நரம்பியல் விஞ்ஞானிகளுடன் இணைந்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மூனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர், உடற்கூறியல் ஆய்வக நிறுவனத்தில் பேராசிரியராகவும், அதன் இயக்குநராகவும் பணியாற்றினார். விரைவிலேயே சிறந்த ஆராய்ச்சியாளராக அறியப்பட்டார். தனது தொடர் ஆராய்ச்சிகள் வாயிலாக, ஐரோப்பாவின் நுண்திசு நோய்க் கூறியலின் (Histopathology) முன்னணி நிபுணராகப் புகழ்பெற்றார்.

லுட்விக் மாக்ஸ்மில்லியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு, பிரெட்ரிக்-வில்ஹெம் பல்கலைக்கழகத்தின் நரம்பியல், உளவியல் துறையிலும், ரெக்லாவ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். மாணவர்கள் போற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தார். பிராங்க்பர்ட்டில் உள்ள மனநோய் மருத்துவமனையில் எமில் கிரேப்ளின் என்ற பிரபல ஜெர்மன் உளவியல் நிபுணரின் நட்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, மறதியால் அவதிப்பட்ட ஒரு பெண்ணைச் சந்தித்தார். அந்த நோய் குறித்து ஆராயத் தொடங்கினார். அந்தப் பெண் இறந்ததால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூளையை தனியே பிரித்தெடுத்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தார். பிரேதப் பரிசோதனை நடைபெற்ற 320 நோயாளிகளின் நோயியல், உடற்கூறியலை ஆராய்ந்து, ஏறக்குறைய 7 ஆண்டுகள் இதுசம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியில் அந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தார். மூளையில் அவரால் கண்டறியப்பட்ட இந்த முரண்பாடுகள் பின்னாளில் அல்சீமர் நோய்க்கான அறிகுறிகளாக கருதப்பட்டன.

மூளை நோய்க் குறியியல் மற்றும் முதுமை அறிகுறிகள் குறித்து 1906-ல் விரிவுரையாற்றினார். தன் ஆராய்ச்சியில் கண்டறிந்தவற்றையும் அதுகுறித்த தனது விரிவுரையையும் கட்டுரையாக வெளியிட்டார். மருத்துவ உலகில் புதிதாக கண்டறியப்பட்ட அந்த நோய்க்கு ‘அல்சீமர்’ என்று தனது நண்பரின் பெயரையே வைத்து, அந்த நோயை 1910-ல் உலகுக்கு அறிமுகம் செய்தார் இவரது நண்பர் எமில். அதற்கான சிகிச்சை முறைகளையும் அலாய்ஸ் அல்சீமர் கண்டறிந்தார்.

மறதி நோய் மட்டுமல்லாது மூளையில் ஏற்படும் கட்டி, கைகால் வலிப்பு, மூளையின் வாஸ்குலார் நோய்கள், ஆரம்பகால முதுமை, மறதி உள்ளிட்ட நரம்பு தொடர்பான நோய்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

குறிப்பாக ‘நரம்பியல் நோய்களின் தந்தை’ எனப் போற்றப்பட்டார்.

Tags :
Alois AlzheimerAlzheimerdiseasesFatherneurologicalஅலாய்ஸ் அல்சீமர்
Advertisement
Next Article