என்னமாய்க் கம்பி கட்டுகிறார்கள்?
‘அவர்களை’த் தவிர மற்ற யாருக்கும் அறிவே கிடையாது. அதனால் சுய சிந்தனையும் கிடையாது. அவர்கள் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் ஆண்டவனின் அனுக்கிரகம்தான் காரணமே தவிர, அவர்கள் அல்லர் என்பதைக் கட்டமைப்பதில் ‘அவர்கள்’ மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஒருவர் சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் அவருக்கும் இதுதான் கதி. இதற்கு ஒரு ‘சாணக்கியா’ காரர் ஒரு விஷயத்தைச் சொல்லி, காணொளி ஒன்றில், சாமர்த்தியம் என நினைத்து ஒரு ‘கம்பி’ கட்டினார் பாருங்கள்…. திகைத்துப் போய் விட்டேன். அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்… !
தமிழ்நாட்டில் ஜாதிகளே இல்லையென்று சொல்வது ஏமாற்று வேலை. பெரும்பான்மை மக்களிடம் அது இருக்கவே இருக்கிறது. ஆனாலும் பெரியாருக்கு முன்பிருந்த காலம்போல, இப்போது தங்கள் பெயர்களுக்குப் பின்னால் யாரும் தங்கள் ஜாதிகளை கர்வத்தோடு போட்டுக் கொள்வதில்லை. வெளியில் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு, விட்டு விட்டார்கள் என்பதே உண்மை. ஆனால் இவர் தனது பெயருக்குப் பின்னால், தனது ஜாதிப் பெயரைப் பெருமையோடு போட்டுக் கொண்டு திரிகிறார். இடையில் போட்டுக் கொண்டதற்கு என்ன காரணம்? கேட்டபோது, “எங்கள் அலுவலகத்தில் என் பெயரில் நிறையப் பேர் இருந்தார்கள். அதனால் பெயர்க் குழப்பம். அதிலிருந்து விடுபடவே அந்தப் பெயர் மாற்றம்” என்று அப்போதிலிருந்தே கம்பி கட்ட ஆரம்பித்து விட்டார். அதாவது தமிழ்நாட்டில் மீண்டும் பழைய மூடப் பழக்கத்தைக் கொண்டு வருவது போன்ற பணிகளுக்காகவே இவரை யாராவது நியமித்திருக்கிறார்களோ என்னவோ…!
சரி, விஷயத்திற்கு வருவோம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் விளக்குப் போட்டது பற்றிப் பேசுகிறார். அதற்கு ரஜினியைப் பார்க்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் சொன்னாராம் ஒரு சாமியார். அதன்படி, அந்த ஆட்சியரும் படப்பிடிப்பு நடக்குமிடத்தில் ரஜினியைச் சந்தித்து, ‘கிரிவலப் பாதையில் விளக்குப் போட வேண்டும்’ என்றாராம். ‘விளக்குதானே ஒரு விளக்கிற்கு என்ன செலவாகும்?’ என்றாராம் ரஜினி. ஆட்சியரும் ஒரு விளக்கிற்கான செலவைச் சொன்னாராம். ‘இவ்வளவுதானே…சரி, போட்டுவிடலாம்’ என்று ஆட்சியரை அனுப்பி வைத்து விட்டாராம், ரஜினி. ரஜினியே ஒரு விளக்கு என்று சொன்ன பிறகு, கிரிவலப் பாதை முழுமைக்கும் போட வேண்டும் என்பதை எப்படி அவரிடம் சொல்வது என்கிற தயக்கத்துடன் பேசாமல் வந்து விட்டாராம் ஆட்சியர். ஒரு விளக்கு மட்டும் போட்டு என்ன பயன் என்று ஆட்சியருக்குக் கவலை.
இந்நிலையில் ஆட்சியருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர் முனையில் ரஜினி. ‘கிரிவலப் பாதை முழுமைக்குமான விளக்குப் போடும் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்றாராம். முதலில் ஒரு விளக்கு என்றவர், பிறகு பாதை முழுமைக்கும் போட்டுத் தருவதாக எப்படி ஒப்புக் கொண்டார்? தெய்வம்தான் ரஜினிக்கு அந்த எண்ணத்தையும் மாற்றத்தையும் கொடுத்திருக்கிறது என்கிறார் அவர்.
ஆக, அவருடைய கூற்றுப்படி ரஜினிக்கு சுய சிந்தனையே கிடையாதா? படப்பிடிப்பின்போது , அவருடைய கவனம் முழுமையும் நடிப்பில்தான் இருந்திருக்கும். அதனால் ஆட்சியரிடம் விளக்கமாகப் பேசமுடியாமல் போயிருக்கும். பிறகு நிதானமாக யோசிக்கும்போது, ‘ஒரேயொரு விளக்குக்காகவா ஆட்சியர் என்னைத் தேடி வந்திருப்பார். ஒரேயொரு விளக்கை யார் வேண்டுமானாலும் போட்டிருப்பார்களே… என்னைத் தேடி வந்திருக்க மாட்டாரே…’ என்கிற உண்மையை ரஜினி உணர்ந்து, மீண்டும் ஆட்சியரிடம் பேசியிருப்பார். இந்த கைப்புண்ணைப் பார்க்க கடவுள் என்கிற பூதக் கண்ணாடி எதற்கு?
ஆக, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், அவர்கள் எதைக் கட்டமைக்கிறார்கள் தெரியுமா? சுய அறிவும் சுய சிந்தனையம் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஏனையோருக்கு அது துளியும் கிடையாது. அப்படியேதேனும் இருப்பின், அது ஆண்டவனால் மட்டுமே தரப்படுகிறது என்பதுதான். இந்த ‘சாணக்கியா’தனத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு விமோசனமேயில்லை.