For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முகவாதம் தாக்குதல்- சில முன் எச்சரிக்கைக் குறிப்புகள் !

02:15 PM Dec 16, 2024 IST | admin
முகவாதம் தாக்குதல்   சில முன் எச்சரிக்கைக் குறிப்புகள்
Advertisement

குளிர் காலங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், மத்திய வயதினரில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் முகவாதம் ஏற்படுவதைக் காண முடிகிறது. முகவாதம் என்பது பேசும்போதோ அல்லது சிரிக்கும்போதோ ஒரு பக்கமாக வாய் கோணும். பாதிக்கப்பட்ட கண்ணை முழுமையாக மூட முடியாது. கண்ணீர் சொட்டும். தண்ணீர் குடிக்கும்போது வாய் வழியாக தண்ணீர் வழியும். பாதிக்கப்பட்ட புருவத்தை உயர்த்த முடியாது. சாப்பிடும்போது கன்னத்தின் உட்பகுதி பற்களுக்கிடையே சிக்கும். நாக்கில் சுவை தெரியாது.

Advertisement

70 வயது பாட்டி ஒருவர், சமீபத்தில் கிளினிக்கில் என்னைச் சந்தித்தார். பதற்றமாக இருந்தார். "சார்... நேத்து சொந்தக்காரங்களைப் பார்க்க ஊருக்குப் போயிட்டு வந்தேன். வந்ததுல இருந்து முகத்துல ஒரு பக்கத்துல சொரணை (உணர்ச்சி) குறைவா இருக்க மாதிரி இருந்துச்சு. காலையில எழுந்திரிச்சப்போ வலது பக்க கண்ணை மூட முடியல. இடது பக்கம் உதடு இழுத்திருக்கு. எச்சில் வடியுது. பயமா இருக்கு சார்...’’ - அவர் சொல்லச் சொல்ல அவர் பதற்றம் அதிகரித்தது.

Advertisement

’’இது பக்கவாதமா சார்..?’’ என்றார் கலங்கியபடி."முதல்ல... பதற்றப்படாதீங்க. பயப்படாதீங்க. உங்களுக்கு பக்கவாதம் எதுவும் வரல...’’ என்றதும் அவர் முகத்தில் நிம்மதி ரேகைகள் சற்று படர்ந்தன.

’’உங்களுக்கு வந்திருக்கிறது முகவாதம்....’’ என்றதும், மீண்டும் அவர் முகத்தில் கவலை ரேகைகள் ஏறிக்கொண்டன.

’’அய்யய்யோ சார்...’’

‘’இல்ல இல்ல... இது நீங்க பயப்படுற அளவுக்கு இல்ல. சீக்கிரம் சரியாகிடும்...’’ என்றபோது, அவருக்கு முழுவதுமாக நம்பிக்கை வரவில்லை.

முகவாதம் குறித்து அவருக்கு விளக்கியதை இங்கு உங்களுக்கும் விளக்குகிறேன்.

பக்கவாதம் என்பது, மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு அதனால் மூளையின் சில பகுதிகள் ரத்த ஓட்டம் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை. அவ்வாறு ஏற்படும்போது ஒரு பக்க கை, கால்... அல்லது இரு பக்க கை, கால் செயல்திறன் குறைவது, செயலிழந்துபோவது, கூடவே பேச்சு வராமல் போவது போன்ற விளைவுகள் ஏற்படும்.

இன்னும் விரிவாகச் சொல்வதானால் முகவாதம் என்பது, முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும் முக நரம்பில் உள்காயம் ஏற்படுவது, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் ஏற்படும் பிரச்னை. குளிர் காலங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், மத்திய வயதினரில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் முகவாதம் ஏற்படுவதைக் காண முடிகிறது. இதன் விளைவாக பாதிக்கப்பட்டவரால் வாயைக் குவிக்க முடியாது. உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. எச்சில் வடியும், சரியாகப் பேச இயலாமல் வாய் குளறும்.

அந்தப் பாட்டியிடம், ‘’வயசானவங்க, இளவயசுக்காரங்க யாரா இருந்தாலும் முகவாதம் வராம இருக்க சில விஷயங்களைச் செய்யக் கூடாது. அதன் படி எந்த விரிப்பும் விரிக்காம வெறும் தரையில படுக்கக் கூடாது. ஒரு பக்கமா சாய்ஞ்சு படுக்கும்போது நேரடியா குளிர்ச்சியான தரையில கன்னம் படுற மாதிரி படுக்கக் கூடாது. தலையணை கன்னத்தை அழுத்தும்படி இருக்கக் கூடாது. குளிர்ச்சியும் அழுத்தமும் இருக்கும்போது நரம்புக்குத் தேவையான ரத்த ஓட்டம் தடைபட்டு அதனால முகவாதம் ஏற்படலாம்.’’

‘’சரி சார்... பண்ணமாட்டேன்...’’

’’இன்னும் கேளுங்க...’’ என்றபடி பட்டியலை வாசித்தேன்.

"வீட்டில் உறங்கும்போதுகூட, ஜன்னல் வழி வரும் குளிர்ந்த காற்று நேரடியாக முகத்தில் படும் வகையில் படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏ.சியின் குளிர் காற்றும் நேரடியாக முகத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மிகக் கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது. பேருந்து, ரயில் பயணங்களில் குளிர்ந்த வாடைக் காற்று அதிக நேரம் காதுகள் மற்றும் கன்னப்பகுதியில் படும் வகையில் ஜன்னலோரம் அமரக் கூடாது''.

’சார்.... இப்ப புரிஞ்சிடுச்சு சார். நான் நேத்து ஊருக்குப் போனப்போவும், திரும்பினப்போவும் ஜன்னலோரமா உக்காந்திருந்தேன். போக மூணு மணி நேரம், வர மூணு நேரம்னு ஆறு மணி நேரம். சரியான வாடைக்காத்து. எனக்கு எப்போ சார் இது சரியாகும்?’’ எனக் கேட்டார் பாட்டி.

"பொதுவாக, இதுபோன்ற குளிர் சீதோஷ்ண நிலை, மற்றும் முகத்தில் ஏற்படும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். முக நரம்பானது உள்காயம் அடைந்து வீக்கம் அடைந்து இருக்கும் என்பதால், அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

முகவாதம் ஏற்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் தொற்றுக்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். எவ்வளவு விரைவாக சிகிச்சை எடுக்கிறோமோ அவ்வளவு நல்லது.

இத்துடன் மருத்துவப் பரிந்துரைப் படி இயன்முறை சிகிச்சை (ஃபிசியோதெரபி) எடுக்க வேண்டும்.

கண்கள் திறந்தே இருப்பதால் வறண்டுவிடாமல் இருக்க சொட்டு மருந்து/களிம்பு போன்றவை பரிந்துரைக்கப்படும்.

கண்களுக்கு பகல் நேரத்தில் கண்ணாடியும், இரவு நேரத்தில் கண்களை மூடும் கவசமும் அணிந்து கொள்ளலாம்.

உணவை மெதுவாகச் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் ஆனாலும் பரவாயில்லை. வேகமாகச் சாப்பிட நினைத்தால் புரையேறும், இருமல் வரும். எளிதாக மென்று விழுங்கக் கூடிய அளவில் சிறிய சிறிய கவளங்களாக உட்கொள்ள வேண்டும்.

உணவானது முழு திட உணவாகவோ, முழு திரவ உணவாகவோ இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. வாய் வறண்டு இருக்கும் என்பதால் உணவில் வெண்ணெயை வழவழப்புக்காகக் கலப்பது பலன் தரும்.

உணவு உண்ணும்போதும் தண்ணீர் பருகும்போதும் எந்த கவனச் சிதறலும் இல்லாமல் முழுக் கவனமும் உணவில்/ தண்ணீரில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீரை பாட்டிலில் பருகுவதை தவிர்த்துவிட்டு சிறிய கோப்பையில் சிறுகச் சிறுகப் பருகுவது நல்லது.

வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் உடன் ஃபிசியோதெரபி அவசியம். மனதை தளரவிடாமல் மருத்துவ முறைகளை சரி வரக் கடைப்பிடித்தால் போதும்... சில வாரங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

முகவாதம் ஏற்படுவதைத் தவிர்ப்போம். முகவாதம் ஏற்பட்டாலும் அச்சமின்றி உடனடியாக சிகிச்சை பெற்று தீர்வு காண்போம்."

டாக்டர் ஃபரூம் அப்துல்லா

Tags :
Advertisement