லெபனானில் பேஜரில் குண்டு வைத்து வெடிப்பு: சில விபரம்!
இது வரை நடந்திராத வகையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட் உள்பட நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்த சுமார் 2,750 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களால் லெபனான் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. சிறப்பு சிகிச்சை தேவைப்படுவோர் இரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.நவீன தகவல் தொடர்பு யுகத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெஸ்பொலா இன்னும் பேஜர்களையே பயன்படுத்துகிறது. அதனை குறிவைத்தே இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ரகசிய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும் லெபனான் நாட்டில் பேஜர்கள் வெடித்த சம்பவம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வந்த பேஜர்களை முன்கூட்டியே வழிமறித்து, பார்சல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பு கைப்பற்றி விட்டது. பேஜர்களின் உள்ளே வெடிபொருளை வைத்து, மெசேஜ் வந்தால் வெடிக்கும் வகையில் செய்திருக்கிறது. இது எல்லாம் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்துள்ளது.அந்த பேஜர் பார்சல்கள், ஹிஸ்புல்லாவுக்கு கிடைத்து, அவர்களும் வெடிபொருள் இருப்பது தெரியாமலேயே பயன்படுத்தி வந்துள்ளனர். இஸ்ரேலிய உளவு அமைப்பினர் குறித்த நேரத்தில் மெசேஜ் அனுப்பி அவற்றை நேற்று வெடிக்க வைத்து விட்டனர்.இப்படி பேஜர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது உலகில் இதுவே முதல் முறை என்பதால், ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பேஜர்கள் என்றால் என்ன?
* 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களில் பிரபலமானது பேஜர்கள். இது கம்பில்லா தொலைத்தொடர்பு சாதனங்களாகும். ஒரு வழிப்பாதை தகவல் தொடர்புக்கு வசதியானவை. மெசேஜ் பெறுபவர் பதில் அனுப்ப முடியாது. இந்தியாவிலும், 20ம் நுாற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் இவை புழக்கத்தில் இருந்தன. காலப்போக்கில் சந்தையில் இருந்து காணாமல் போய் விட்டன.
* மொபைல் போன் அதிநவீன வளர்ச்சிகள், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட அடுத்தடுத்து மாற்றங்கள் வந்ததும் பேஜர்கள் உபயோகம் நின்று விட்டது.
* அதிநவீன சாதனங்கள் வந்தாலும் சில முக்கிய பகுதியில் பேஜர்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அவற்றின் தனித்துவமான நன்மைகள் தான் காரணம். இதனை உபயோகப்படுத்துவது நம்பகத்தன்மைக்காக கருதப்படுகிறது.
* பேஜர்களில் உள்ள பேட்டரிகளுக்கு ஆயுள் காலம் அதிகம். இதனால், சிக்னல்கள் கிடைக்காத பகுதிகளில், மருத்துவமனைகளுக்குள் உபயோகப்படுத்தப்படுகிறது.
* ஒரு முறை சார்ஜ் போட்டால், ஒரு வாரம் கூட பயன்படுத்தலாம். பேஜர்கள் மூலம் தொடர்புகொள்வது மிகவும் பாதுகாப்பானதாகவும் தனிப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
லெபனான் நாட்டில் பேஜர் வெடித்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விஷயம் எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என அமெரிக்கா செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கும், அமெரிக்காவிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இதற்கு, அமெரிக்கா செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்த சம்பங்களில் அமெரிக்காவிற்கு தொடர்பு இல்லை. யார் பொறுப்பு என்று தெரியவில்லை. அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என்று என்னால் சொல்ல முடியும். இந்த சம்பவம் குறித்து விஷயம் எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது.
என்ன நடந்திருக்கக்கூடும் என்பது பற்றிய உண்மைகளை சேகரிக்க, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே வழியில் நாங்கள் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மத்திய கிழக்கில் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவம் குறித்தும் அமெரிக்கா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு மக்களை தண்டிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் தங்கள் தகவல் தொடர்புக்காக தைவான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பேஜர்களை ஆர்டர் செய்திருந்தனர். இதை அறிந்த இஸ்ரேல் உளவு நிறுவனம் முன்கூட்டியே அந்த ஆர்டர் பார்சல் கைப்பற்றி பேஜர்களுக்குள் வெடி பொருட்களை வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பேஜர் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுவரை எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. உலக அளவில் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, பெரிய அளவில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுதான் என்று கூறப்படுகிறது.