டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஆம் ஆத்மி கட்சியின் பெருந்தலையும், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து, காவலை நீட்டித்துள்ளது. அதே சமயம் 6 முதல் 8 மாத காலத்திற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2021 நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மாநில அரசால் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்து விவரங்களை கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக புகார்கள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிசோடியாவை சிபிஐ கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தது. சுமார் 8 மாத காலமாக சிறையில் இருந்து வரும் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி கிழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட் 6 முதல் 8 மாத காலத்திற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணை தொய்வாக நடைபெற்றால் ஜாமீன் கோர மணீஷ் சிசோடியாவிற்கு உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.