For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!

10:00 PM Dec 14, 2024 IST | admin
ஈ வி கே எஸ் இளங்கோவன் காலமானார்
Advertisement

மிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று காலை 10.12 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்தவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத், கணவரின் மறைவுக்கு பிறகு அண்ணா திமுகவில் இணைத்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். எம். ஜி. ஆர் முதல்வராக இருந்த போது, அவரது ஆட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவராகவும் பின், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக நிறுவன தலைவராகவும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் சமூகநல வாரிய உறுப்பினராகவும் இருந்தார். பின்னர், ஜெயலலிதா முதலமைச்சரான இருந்தபோது, சுலோச்சனா சம்பத் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தந்தை பெரியாரின் அண்ணன் மகனான ஈவிகே சம்பத்–சுலோச்சனா சம்பத் அவர்களுடைய மகனாக பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ந்தேதி பிறந்தவர். ஈரோட்டில் பள்ளிப்படிப்பு படித்த அவர், சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் சேர்ந்து பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதனைத் தொடர்நது, 2006 ஆம் ஆண்டு கோபிச்செட்டிபாளையம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற தொகுதியில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக பதவி வகித்த நிலையில், திடீரென மறைந்தார். அதனையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவையொட்டி, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்பட, காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் எடுத்து வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக ராமாபுரம் அடுத்துள்ள மணப்பாக்கத்திலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்முத்துசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், முன்னாள் ஆளுநரும் பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் பலரும், இளங்கோவனின் பெருமையை போற்றி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement