வாக்களித்ததை சான்றுடன் உலகிற்குச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு!
An appeal to Election Commission of India!
அதிமுகவைச் சேர்ந்த, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ப.குமார், திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுக்க, படப்பிடிப்புக் கலைஞர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' எனக் கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரை அடுத்து, மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா.பிரதீப்குமார், மீண்டும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, நண்பகல் 12 மணியளவில் அவர் மீண்டும் வந்து வாக்களித்தார். அப்போது ஊடகத் துறையினர் படம் பிடித்தனர்.
தமது உரிமையைப் போராடிப் பெற்று, நிலைநாட்டிய குமாருக்குப் பாராட்டு. தேர்தல் ஆணைய நடைமுறையில் உள்ள முரண்பாடுகளை அவர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் முன் ஏழையும் பணக்காரரும் பாமரரும் படித்தவரும் குடிமகனும் குடியரசுத் தலைவரும் உள்பட அனைவரும் சமம். இப்படியாக, விளம்பரங்கள் வருவது உண்டு. ஆனால், நடைமுறையில் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் படமெடுக்க அனுமதி என்பது, மிகப் பெரிய பாரபட்சம். நான் வாக்களித்துவிட்டேன் என்பதைப் படமெடுத்து, சான்றுடன் உலகிற்குச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் வாக்களிப்பதைத் தனக்குப் பின்னால் உள்ளவரிடம் கொடுத்துப் படமெடுக்கச் சொல்லலாம். அல்லது படம் எடுப்பவரைத் தன்னுடன் அழைத்து வரலாம். அல்லது இதற்கெனப் படப்பிடிப்புக் கலைஞர் ஒருவரைத் தேர்தல் ஆணையமே அங்கே அமர்த்தலாம்.
வாக்களிப்பதைப் படமெடுக்க அனுமதிப்பதானால், அனைவருக்கும் இந்த வாய்ப்பினை அளிக்க வேண்டும். மறுப்பதானால், அனைவருக்கும் மறுக்க வேண்டும். தேர்தல் ஆணையம், இதில் தெளிவான ஒரு முடிவு எடுக்க வேண்டும். மக்களாட்சியில் அனைவருக்கும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அண்ணாகண்ணன்