தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

முதியவர்களாக இருந்தாலும் முன்னுக்கு வர முடியும்!

09:10 PM Jan 23, 2024 IST | admin
Advertisement

முதியோரைக் கடவுளுக்கு இணையாக கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்பொழுது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாச்சாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டைப் பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம். இது கலாச்சாரச் சீரழிவுக்கு நம்மைக் கொண்டு போகிறது. முதியோரை மதிக்கும் பண்பாடடென்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ, செலவாகவோ கருதப்படுகிறார்கள். இப்பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள் என்றொரு கருத்துண்டு...!

Advertisement

அதே சமயம் “வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார் என்றொரு செய்தியுமுண்டு.

Advertisement

உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன. 30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன. 50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 80 வயதை எட்டியவர்களின் மனதில் சுய மதிப்பீடும் சுயாபிமானமும் உச்சத்தை எட்டுகின்றன. ‘இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை’என்ற பெருமிதம் உண்டாகிறது. அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. கடுமையான வியாதிகளும் வலி - வேதனைகளும்கூட அவர்களுடைய மனநிலையைக் குறைந்த அளவே குலைக்கின்றன. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பலருக்கு, ‘இனிமேல் அதிகாலையில் எழுந்து, அரக்கப்பரக்கக் காலக்கடன்களை முடித்துக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியமில்லை’என்ற எண்ணமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலைகூட ஓரளவுக்கு மேல் வருத்துவதில்லை.

புகைப்பட ஆய்வு

ஒரு கூட்டத்தின் ஒளிப்படத்தை இளைஞர்களிடம் காட்டியபோது, அவர்களின் முகங்கள் ஆர்வமில்லாமல் சற்றே சுருங்கின. அதே படத்தை முதியோர்களிடம் காட்டியபோது மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சியாக அதை உற்றுப்பார்த்தனர். வயதானவர்களுக்கு துக்கங்களும் கவலைகளும் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கைத் துணையை இழக்கும் இளவயதினரைப் போல முதிய வயதினர் துயரத்தில் மூழ்கி நிலைகுலைந்துபோவதில்லை.

தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அச்சமும் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வறுமையும் தனிமையும்கூட அவர்களை அச்சுறுத்துவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். முயன்றாலும் முடியாது என்ற இயலாமைகுறித்த முழுமையான புரிதலாலும், இனி கவலைப்பட்டு ஏதும் சரியாகிவிடாது என்ற பக்குவத்தாலும் அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு வந்துவிடுகிறார்கள். கவலைகள் குறைகின்றன. மகன், மகள் ஆகியோருக்கு இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளைக் குறைத்துவிடுகின்றன. தங்களுடைய குழந்தைகளில் சிலரின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், ஆரம்பத்தில் கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில், அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.

மன இறுக்கம் இல்லை

ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்கள் மன இறுக்கத்தில் வாழ்வதில்லை. இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தால் போதும் என்று நினைக்கும் முதியவர்கள், ‘நாளைய பொழுது நம்மிடம் இல்லை’என்று விட்டுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளின் முத்தம், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஸ்பரிசம் போன்றவை மூளையில் ஆக்சிடோசின் என்ற ரசாயனத்தின் சுரப்பை அதிகப்படுத்துவதால் மெய்ம்மறந்து ரசித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

தன் முதுமைக் குறித்து டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சொன்னதைப் பகிர்வது இச்சூழலில் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ:

“எனக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றார்கள். பேரன் பேத்திகள் , கொள்ளுப் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். நான் பூட்டன், என் மனைவி பூட்டி ஆகிவிட்டோம். ஆனால் இந்த வயதை நாம் எண்ணும் பொழுது, பல பேர் வயது அதிகம் என்று சொல்லுவார்கள். என் நண்பர்கள் பலர் பேர்கள் 91 ஆண்டு மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்! சிலர் 60 ஆண்டுகள் ஆனவுடனேயே தளர்ந்து விடுகிறார்கள்! முதிர்ச்சி என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த முதுமை என்பது வயதைப் பொறுத்து இருக்கிறது. வயது ஆக ஆக, புதுமையும் வரும். முதுமையும் வரும்.

முதுமையில் நாம் எப்படி இருக்க வேண்டும். நமக்குப் பிள்ளைகள் நிறைய இருந்தாலும் ஒவ்வொரு முதியவரும் தாம் வாழ்ந்த காலத்தில் தமக்காக ஏதாவது சேர்த்து வைத்தேயாக வேண்டும். பிள்ளைகளை மட்டும் நாம் நம்பி இருந்தால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நம்மிடம் பணம், நிலங்கள், வீடுகள் இருந்தால் பிள்ளைகள் எல்லாம் நம்மிடம் மகிழ்ச்சியோடு வருவார்கள். இப்படி இருக்கும் பொழுதுதான், ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்! நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் பண்டிகை கொண்டாடும் பொழுது முதியவர்களை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம்.

ஒரு முறை விஜிபி தங்கக் கடற்கரையில் 100 ஆண்டுகளுக்கும் மேல் வயது உள்ளவர்களை அழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தந்தோம். அதில் ஒரு மூதாட்டிக்கு 110 வயது! அவர்கள் திடகாத்திரமாகத்தான் இருந்தார்கள்! அவ்வாறு அவர்களிடம் நாம் அன்பு செலுத்தும் பொழுது, வயது தெரியாது! அன்பின் வழியாக அரவணைக்கும் போது அவர்கள் மன மகிழ்ச்சியோடு இருப்பார்கள். ஒவ்வோர் இல்லத்திலும் வயது முதிர்ந்தவர்கள் இருக்கிறார்கள். வயதானவர்களும் இருக்கிறார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த வயது முதியவர்கள் தம் பிள்ளைகளை நம்பி இருக்கிறார்கள். அந்த முதியவர்கள் தம் பிள்ளைகளை நம்பி இருக்கும் பொழுது தான் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை அப்பிள்ளைகள் பூர்த்தி செய்து தர வேண்டும்!

எல்லா மக்களிடமும் அன்பும் அறனும் உடைத்தாயினும் வயது முதிர்ந்தவரை நாம் அன்போடு பார்க்கும் பொழுது, அவர்கள் நம்மை வாழ்த்துவார்கள்! அப்படி அவர்கள் வாழ்த்தும் பொழுது, பிள்ளைகளின் வாழ்வும் சிறக்கும்! இப்பொழுதெல்லாம், அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டாலே “எனக்கு வயதாகி விட்டது! என்ன செய்வது?” என்று அவர்கள் நினைப்பார்கள். மனிதன், அறம், பொருள், இன்பத்தோடு இருந்து, தனக்காக சேர்த்த பணமோ, பொருளோ மற்றவையோ, தன் பிள்ளைகளுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பெரியவர்கள் இருக்க வேண்டும்! ஆனால் இந்தக் காலத்திலே சில பிள்ளைகள், “தந்தையிடம் என்ன இருக்கின்றது, தாயிடம் என்ன இருக்கின்றது, அதனை எப்படியாவது நாம் வாங்கிக் கொள்ள வேண்டும்!” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது மகாத் தவறு! தாய், தந்தை சேர்த்து வைத்த பொருள்கள் எல்லாம் அவர்தம் பிள்ளைகளான வாரிசுகளுக்குத் தான் கிடைக்கும். அதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்! ,“தந்தைக்கு வயதாகி விட்டது, தாய்க்கும் வயதாகி விட்டது அவர்கள் எப்பொழுது மறைவார்களோ! எப்பொழுது நமக்கு சொத்து கிடைக்குமோ?” என்று சில பிள்ளைகள் எண்ணுவார்கள். அது மிகத்தவறு சட்டப்படியே தந்தை சொத்தும் தாய் சொத்தும் அவர்தம் பிள்ளைகளுக்குத் தானே சேரும்? அவ்வாறு இருக்கும் பொழுது வயதான முதியவர்களான தம் பெற்றோரை பிள்ளைகள் அன்போடு அரவணைத்து கொள்ள வேண்டும்!

முதுமை வரும் தளர்ச்சி வரும். ஆனால் முதுமையிலும் உழைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தினை விட்டுவிடக் கூடாது! பிறரை நம்பி வாழாமல் நம்மை நம்பியே நாம் வாழ வேண்டும். இன்று எனக்கு 88 வயது ஆகிக் கொண்டு இருக்கிறது! இருந்தாலும் எனக்கு உலகமெல்லாம் நண்பர்கள் இருக்கிறார்கள்! எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு என் நண்பர்கள் இருப்பார்கள்! இந்த 88 வயதிலும் நான் காலையிலே 10 மணிக்கு அலுவலகத்திற்கு வருவேன். மாலை 6:30 மணிக்குத்தான் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வேன். வீட்டிற்குச் சென்று, அங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு, இரவு உணவு அருந்திவிட்டு பின்பு நித்திரைக்குச் செல்வேன். காலையில் 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியும் செய்வேன்.

முதியவர் ஆகிய நாம் எப்பொழுதும் நம்பிக்கையோடு வாழ வேண்டும்! இறைவன் நம்மை நன்றாகவே படைக்கின்றார்! ஒரு தாமரை தடாகத்திலே மலர் வீசும் மலர்களாக நம்மை படைக்கின்றார். நாம் அந்தத் தடாகத்திலே மலர்களை முகர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன்! ஒருநாள்… குறிப்பிட்டு வைத்திருப்பார்! அந்த நாள் வந்ததும் அவருக்கு தேவைப்படும் பொழுது அந்த மலரை பறித்துக் கொள்வார். “கொடுப்பதும், எடுப்பதும் இறைவனின் செயல் ”அதற்கு வயது வரம்பு ஒன்றும் கிடையாது!

இப்பொழுது வயது முதியவர்களுக்கு அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. முதியோர் இல்லங்கள் பலர் நடத்துகின்றனர். வெளிநாடுகளிலும் முதியோர்கள் இருக்கின்றனர். அந்த முதியோர்களுக்கு அவர்தம் பிள்ளைகள் மாதத்திற்கு ஒரு கணிசமான தொகையை தன் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு இருக்கும் நிலையில், அந்த முதியவருக்கு பிறந்தநாள் வரும்பொழுது மட்டும் “அப்பா எப்படி இருக்கிறீர்கள்!” என்று கேட்கிறார்கள் ஒரு பூங்கொத்தினைக் கொடுத்து விட்டுச் சென்று விடுகிறார்கள்! இதுதான் வெளிநாடுகளில் அதிகம் நடைபெறுகிறது. நமது நாட்டிலும் அப்படி இருக்கின்றது.

ஆனால் முதியவர்கள் ஒருவர் நம் குடும்பத்தில் நம்முடனே இருந்தால் அந்த குடும்பத்தின் வாழ்க்கை செம்மையாகும். “இது எனது அப்பா, தாத்தா!” என்றெல்லாம் சொல்லி பேரப்பிள்ளைகள் மகிழ்ச்சியோடு விளையாடும் பொழுது எவ்வளவு குதூகலமாக அந்தக் குடும்பம் இருக்கும்! அந்தக் குடும்பம் வலுவாகவும் சந்தோஷமாகவும் அன்பாகவும் இருக்கும்! அதே நேரத்திலே இதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அருமையான நேயர்களுக்கு, நான் சொல்வது யாதெனில் மனிதன் பிறக்கின்றான்; வாழுகின்றான்; மறைகின்றான். “இது இயற்கையின் நியதி”! ஆனால் நீங்கள் உங்கள் முதிர்ந்த தந்தை, தாயை போற்ற வேண்டும்; போற்றி வணங்க வேண்டும். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்!” வீட்டில் உள்ள தாய் மனம் குளிர வேண்டும்.

எனக்கு எனது அன்பு தாய் சந்தனம்மாள் அவர்கள் இளம் வயதில் இருந்தே எனதருகிலிருந்து என்னைப் பாதுகாத்து வளர்த்து, வாலிபனாக்கி, திருமணம் செய்து வைத்து, எனக்கான அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்தார்கள்! இப்பொழுதும் அவர்களை நாங்கள் வணங்குவோம். அவரை கும்பிட்டு விட்டுத் தான் எந்த காரியமும் நாங்கள் செய்வோம். அவ்வாறு என் அன்புத் தாயின் உள்ளத்தை நான் நினைக்கும் பொழுது எனக்கு மனமகிழ்ச்சி தருகிறது. எனவே வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், பல இன்னல்களுக்கிடையிலும் நான் மிகுந்த தன்னிம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்துள்ளேன் என்று சொல்ல வேண்டும்!

அந்த ஒரு சிறிய கிராமம்– அழகப்பபுரத்திலே பிறந்த நான் உண்ண உணவு, உடுக்க உடை வசதி இல்லாமல் இருந்தேன். அவ்வளவு வறுமையான குடும்பத்தினைச் சேர்ந்தவன்தான் நான்! என் அருமை அம்மா அவர்கள் தினம் தோறும் கழனிக்கு சென்று ஒரு ரூபாய் சம்பாதித்து எங்களைக் காப்பாற்றினார்கள்! அதே என் சந்தனத்தாய் அவர்களை, வயது முதிர்ந்தாலும் அவர்களை அழைத்துக் கொண்டு உலகம் எல்லாம் 68 நாட்கள் சுற்றி வந்தோம். போப் ஆண்டவர்களை அவர்களுக்கு நான் காண்பித்தேன். ரோமில் உள்ள ஆலயத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றோம். வயதான என் தாயினை ஜெர்மனி, லண்டன் போன்ற பல வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்வித்தேன். பொதுவாக “முதிர்காலம் என்பது இலையுதிர் காலம்” என்று சொல்வார்கள். இன்றும் நான் எனது அம்மாவை வாழும் தெய்வமாகதான் கருதி, தினம் தோறும் அவர்களை வணங்கி என் தொழிலைத் தொடங்குவேன்.“தாயை வணங்குபவன் தரணியெல்லாம் போற்றப்படுவான்!” அவர்கள் மீது உள்ள அன்பின் காரணமாக என் அம்மாவை பற்றி நான் புத்தகங்கள் எழுதியுள்ளேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களும் அன்பைப் போதிக்கின்றார். அந்த அன்பு தான், இன்று விஜிபி சகோதரர்கள், உலகம் எல்லாம் புகழ் பெற்றுவர ஊக்கம் தந்தது. “அன்புடையோர்எல்லாம்உடையோர்” அன்பை நாம் பிறரிடம் காண்பிக்கும் பொழுது அவர்களும் நம்மிடம் அன்பாக வருவார்கள்! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எல்லா மனிதர்கள் வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு! அந்த ஏற்றத்தாழ்வு வரும்பொழுது, ஏற்றத்தில் இருக்கும் பொழுது நம்மால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். பிற முதியவர்களையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்காணிக்க வேண்டும். அந்த முதியவர்களுக்கு என்ன தேவையோ, பிள்ளைகளாகிய நாம் நம்மால் முடிந்தவரை செய்து தர வேண்டும்! அதனைச் செய்யும் பொழுது செய்யும் பொழுது உள்ளத்திலே மகிழ்ச்சி, சந்தோஷம், உற்சாகம், அன்பு எல்லாம் கிடைக்கும்.

வள்ளுவர் பெருமான் சொன்னார், அறம், பொருள், இன்பம் வேண்டும், அறம் என்றால் தர்மம், மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்புகள். பொருள் வேண்டுமென்பதனை வலியுறுத்தும் அவர், ”அருள்இல்லாதவனுக்குஅவ்வுலகம்இல்லை; பொருள்இல்லாதவனுக்குஇவ்வுலகம்இல்லை” என்றார். ஆனால், அந்தப் பொருளை நாம் சம்பாதிக்க வேண்டும் நம் சம்பாதித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும்! அதனால்தான் டீக்கடை வைத்து நடத்தி வந்த விஜிபி சகோதர்களுள் ஒருவனான நான் சென்னைக்குப் பல்லாண்டுகள் முன் வந்து, இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வளர்ந்து வந்துள்ளேன். வாழ்வில் நாம் உயரத்தில் இருக்கும் பொழுது நம்மால் முடிந்த சேவைகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். காரணம் புதிய முயற்சி, புதிய யுத்தி, புதிய, புதிய எண்ணங்கள் எல்லாம் எங்களுக்குக் கை கூடியதால்தான் இன்று கிழக்கு கடற்கரையில் கம்பீரமாக எழுந்து பொலிகிறது விஜிபி தங்கக் கடற்கரை.

இவ்வாறு வாழ்வில் உயரத்திற்கு வர, சாதாரண மளிகைக் கடையை வைத்து அதன் பின் டீக்கடை வைத்து, நாங்கள் முயன்று வென்றுள்ளோம்! காரணம் “முடியும் என்ற நம்பிக்கை” ”முதியவர்கள்என்றும்இளைஞர்கள்தான்” உடல் நலம் குன்றி இருந்தாலும் உள்ளத்தால் அவர்கள் இளைஞர்கள்! இன்று எனக்கு இந்த வயதானாலும் உள்ளத்திலே நான் இளைஞனாகவே இருக்கின்றேன்! “நம்மால் எதையும் செய்ய முடியும்” என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை, நான் எழுதி இருக்கின்றேன், லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதி இருக்கின்றேன். இப்பொழுதும் எந்த விழாக்களாக இருந்தாலும் அந்த விழாக்களிலும் ஆர்வத்துடன் நான் கலந்து கொள்கின்றேன். அவ்வாறு நான் கலந்து கொள்ளும் பொழுது, ஆங்காங்கே புதிய உறவுகளும் கிடைக்கின்றன! அவ்வாறு அவ்விழாவிற்கு செல்லும் போதெல்லாம் மனதிலே ஓர் உற்சாகமும் பீறிட்டெழுகிறது. புகழ் இல்லை என்றால் ஒன்றும் இல்லை! உறவாக வாழ வேண்டும்; உள்ளத்திலே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

வயது முதிர்வு என்பது இயற்கை! அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் வயதானாலும் நாம் செய்யும் செயல் ஒரு முழு முயற்சியோடு எல்லோரையும் அரவணைத்து அன்பாக கொண்டு செல்லுதலில் நிறைவுறும் போது, நம் வாழ்வு நன்றாக அமைகிறது! மனிதனாகிய நமக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும்! லட்சியப் பாதையிலே நாம் எப்பொழுதும் பயணிக்க வேண்டும். “இந்த 88 வயதிலும் எப்படி நீங்கள் இவ்வளவு செய்கிறீர்கள்?” என்று கேட்கும் பொழுது அதற்கு நான் சொல்லும் பதில் “என்னால் முடியும்” என்பதுதான்! ஆதலால் நம்பிக்கையுடன் இறைவனை நம்பி என் அம்மாவை வணங்கி தந்தையை வணங்கிச் செல்வேன். இவ்வாறு என் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி என்னைத் தழுவிக் கொள்ளும் சூட்சுயம் இதுவே!

“முதியவர்களாக இருந்தாலும் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும்.” ஆகவே வயது முதிர்வு என்பது தோற்றம் மட்டுமே! எப்பொழுதும் நாம் நம்பிக்கை, முயற்சி கொண்டு இருந்தால் வாழ்வில் எந்த உயர்த்திற்கும் நம்மால் செல்ல முடியும் என்று கூறி “முதுமையில் யாரையும் எதிர்பார்க்கக் கூடாது!”என்று சொல்லி இறைவனை வணங்கி வாழ்த்தி வணங்குகிறேன்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Agemindsetold agesenior citizens
Advertisement
Next Article