For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஹின்டன்பர்க் மூடப்பட்டாலும் அதானி மோசடி குழுமமே!

09:46 AM Jan 21, 2025 IST | admin
ஹின்டன்பர்க் மூடப்பட்டாலும் அதானி  மோசடி குழுமமே
Advertisement

தானி மீது பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹின்டன்பர்க் நிறுவனம் மூடப்படும் செய்தி பாஜக அபிமானிகளின் காதில் தேன் போலப் பாய்ந்திருக்கிறது. அதைப் பல்வேறு விதமாய் விவரித்து கிளுகிளுப்பு கொண்டு பல பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஹின்டன்பர்க் அறிக்கையை வைத்து அதானி மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி நான் பல பதிவுகளை எழுதி இருந்தேன். அதற்குப் பழி வாங்கும் (!) விதமாய் அந்த கிளுகிளுப்பு பதிவுகளில் என்னை டேக் செய்து 'இப்போ என்ன சொல்லுறே?' என்று சவால் விடுகிறார்கள். அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். அதானி மீது ஹின்டன்பர்க் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பதுதான் என் உறுதியான நம்பிக்கை. குற்றம் சாட்டிய நிறுவனம் மூடப்பட்டது என்பதனால் குற்றம் பொய் என்று ஆகி விடாது.

Advertisement

நவீன சட்டங்களின்படி ஒரு நிறுவனம் என்பது தனி நபர் போலத்தான். An entity just like a person. ஒரு மனிதர் பல்வேறு காரணங்களால் அகால மரணம் அடையலாம். அது போலவே ஒரு நிறுவனத்தின் அகால மூடலும் ஒரு மரணம் போலத்தான் சட்டப்படி கருதப்பட வேண்டும். ஒரு கட்சியின் மேல் ஊழல் குற்றம் சாட்டிய ஒரு தனி நபர் அகால மரணம் அடைவதை அந்தக் கட்சியினர் கொண்டடுவதற்கும், ஒரு கட்சியின் மேல் ஊழல் குற்றம் சாட்டிய ஒரு நிறுவனம் மூடப்படுவதைக் கொண்டாடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிலும் குறிப்பாக, அந்த மூடலை வைத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் நிரபராதி என்று அர்த்தம் கொள்வதைப் போல மூடத்தனம் வேறு இல்லை. மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் தன்னைத் திட்டிய அப்பா டெல்லி கணேஷ் தடுக்கி விழுவதைப் பார்த்து கமல் சிரித்து 'பாரு உனக்கு பகவான் கொடுத்துட்டார்!' என்று சொல்லி சிரிப்பார். அந்த மாதிரியான ரியாக்சன்தான் இதுவும். A sort of juvenile retribution.

Advertisement

அதானி குழுமம் பாஜக மாநில மத்திய அரசுகளின் முழுமையான ஆதரவுடன், உதவியுடன் செயற்கையாக கட்டமைக்கப்பட்டு வளர்ச்சி கொண்ட நிறுவனம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதானியின் வளர்ச்சிக்காகவே திட்டங்கள் தீட்டி, நிதி ஒதுக்கீடுகள் செய்து, வங்கிக் கடன்கள் வழங்க வைத்து, சட்டங்களை திருத்தி, வளைத்து, உடைத்து எல்லாம் செய்ததில், அது இன்றைக்கு மாபெரும் அசுர வளர்ச்சி கண்டு நிற்கிறது. இந்த அசுர வளர்ச்சிக்காக என்னென்ன சட்டங்கள், திட்டங்கள், அரசுப் பணிகள் காவு கொடுக்கப்பட்டன எனும் முழுமையான தகவல் யாருக்கும் தெரியாது. ஆங்காங்கே கொஞ்ச நஞ்சம் கசிவது தவிர வேறு எதுவும் இப்போதைக்குத் தெரியாது. ஆனால் ஒருநாள் கண்டிப்பாக தெரிய வரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

ஹின்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை அப்படிப்பட்ட ஒரு சிறு கசிவுதான். அந்தக் குற்றத்தில் இருந்து அவர்களை விடுவிக்க செபியை வைத்தே clean certificate கொடுக்க வைத்தது அடுத்த கசிவு. அதானிக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஊழல் வழக்கு அடுத்த கசிவு. இப்படி அடுத்தடுத்து இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறேன். அதானிக்கு எதிரான அமெரிக்க குற்றப்பத்திரிகை குறித்து சேப்பியன் சங்கத்தில் ஒரு காணொளி பதிந்து இருந்தோம். அதன் லின்க்கை கமெண்ட்டில் பகிர்கிறேன். அந்த சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தில் அதானி குழுமத்துக்கு ஆதரவாக டெண்டர்கள் கிடைப்பதற்காக மத்திய அரசு என்னவெல்லாம் குரளி வித்தைகள் செய்தது என்பது குறித்த வேறொரு காணொளி தயாராகிக் கொண்டிருக்கிறது. அது இன்றோ நாளையோ வெளியாகும்.

இந்த இரண்டு காணொளிகளையும் பார்க்கும் போது முழுமையான பிம்பம் நமக்குப் புரிபடும். பல்லாண்டுகளாக எப்படி எல்லாம் திட்டமிடல்கள் நடந்து வருகின்றன, என்னவெல்லாம் வளைத்து திரித்தல்கள் பின்னணியில் நிகழ்ந்திருக்கின்றன என்பது புரிபடும் போது தலை சுற்றும். அறிவியல்-ரீதியிலான ஊழல் என்று யார் யாரையோ பாஜகவினர் குறிப்பிடுவார்கள். தங்களுக்கே உரித்தான அந்தப் பட்டத்தை அடுத்தவர்களுக்கு தாரை வார்க்கும் அவர்களின் தாராள மனதை எண்ணி வியக்கிறேன்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement