அகத்தியா பட ரிலீசில் கூட இப்படியோர் அதிசயம்!- பா.விஜய் நெகிழ்ச்சி!
மறைந்து கிடக்கும் உண்மைகளைச் சொல்வதில் தமக்கு அலாதி பிரியம் இருப்பதாகச் சொல்கிறார் கவிஞர் பா.விஜய். இவர் ஓர் டைரக்டராக தமிழ் ரசிகர்களுக்குப் படைக்கும் மூன்றாவது படம் ‘அகத்தியா’. இதற்கு முன்பு ‘ஸ்ட்ராபெரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஜீவா, அர்ஜுன் ஆகியோருடன் கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், '''அகத்தியா' படம் பார்த்தவுடன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டு விட்டது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களை தயாரித்திருக்கிறது. அதில் இந்த படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது'' என்றார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை -28ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகிறது.இந்நிலையில் டைரக்டர் பா விஜய் அனுப்பி இருக்கும் மடல் இதோ:
நெஞ்சிற்கினிய ஊடக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,
ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
மூன்றாண்டு கால தொடர் உழைப்பில் நேர்த்தியான தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியோடு vels film international limted டாக்டர் கே.ஐசரி கணேஷ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் wide angle media அனீஸ் அர்ஜூன் தேவ் இணைதயாரிப்பில் , நடிகர்கள் ஜீவா, அர்ஜூன் ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகத்தியா திரைப்படத்தின் ஊடக நண்பர்கள் காட்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
ஒரு நிறையான படைப்பாக அகத்தியாவை உங்கள் முன் முதல் காட்சியாக திரையிடும் இந்நேரத்தில் தமிழ் மரபு சார்ந்த ஒரு முக்கியப் பதிவையும் நம் மண்ணும் நம் முன்னோர்களும் நமக்களித்த பெரும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியையும் அகத்தியா திரைப்படத்தில் கதைக்களமாக படைத்துள்ளோம்.
இந்நேரத்தில் ஒரு இயற்கையின் அதிசய ஆசீர்வாதமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது, நாசா விண்வெளி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 28 ஆம் தேதி ஏழு கிரகங்கள் நேர் கோட்டில் சந்திப்பதாக அதிசய நிகழ்வை குறிப்பிட்டுள்ளது. அதே தேதியில் பிப்ரவரி 28 வெளியாகும் அகத்தியாவும் இந்த நிகழ்வில் இணைக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இக்கதையை எழுதும் போது அகத்தியாவின் அடிநாதத்தில் வான்வெளியில் நிகழும் ஏழு கிரங்களின் நேர்க்கோட்டு கூட்டணியை ‘கிரக மாலை ’ என்று அழைப்பார்கள் அந்த கிரக மாலை என்கிற அதிசயத்தை இத்திரைப்படத்தின் ஆரம்பக்காட்சி முதலே எதேச்சையாக பதிவாகி கிளைமாக்ஸ் காட்சியே இந்த கிரக மாலை ஏற்படுகிற சம்பவத்தை நோக்கி படமாக்கப்பட்டுள்ளது . . இது இயற்கையின் ஆசிகளாகவே தோன்றுகிறது,
ஒரு ஹாரர் ஃபேண்டஸி திரைப்படத்திற்குள் நாங்கள் சொல்ல முயற்சித்திருக்கும் நம் மண் சார்ந்த மரபு வழி அறிவை திரைப்படமாய் படைத்திருக்கிறோம். மக்களின் ஜனரஞ்சக வெற்றியை பெறுவதற்கு ஒரு சக நண்பனாக உங்களின் இரு கரங்கள் பற்றி அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் பேராதரவிற்கும் பேரன்பிற்கும் நன்றியுடன் பா.விஜய்.