For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ - முதல்வர் அறிவிப்பு!

02:07 PM Feb 04, 2025 IST | admin
தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’   முதல்வர் அறிவிப்பு
Advertisement

திகரித்து வரும் காலநிலை மாற்றதின் விளைவாக அதி தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் பெரும் வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகள் ஏற்கெனவே கோடி கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அச்சுறுத்திவருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும், காலநிலை மாற்றத்தால் சுமார் 13.2 கோடி மக்கள் தீவிர வறுமையினால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த அவசர நிலையை உணர்ந்து சர்வதேச அளவிலும் உள்நாட்டளவிலும் பல்வேறு காலநிலை குறைப்பு மட்டும் தகவமைப்பு செயல்பாடுகள் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசின் காலநிலை நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.எப்படி சமூக நீதியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறதோ, அதே போல தற்பொழுது சூழலியல் நீதியிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அரசின் காலநிலை செயல்பாடுகள் பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற துறையும் தொடங்கப்பட்டது.இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் முறையாக ஒரு மாநில அரசால் காலநிலை மாற்றத்திற்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட துறை இது. இத்துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடக்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் சுற்றுசூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் (3.0) ஆற்றிய உரை:-

Advertisement

காலநிலை மாற்றம்தான் இன்றைக்கு உலக நாடுகளும், மானுட சமுதாயமும் எதிர்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்! அதனால்தான், இதை பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டு இருக்கிறோம். அதில் ஒரு பகுதியாக, என்னுடைய தலைமையில், காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்து ஆராய, இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக மாநாடு நடத்தியது நம்முடைய தமிழ்நாடுதான்! அதுமட்டுமல்ல, துறையின் பெயரையே "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று மாற்றியிருக்கிறோம்.

இந்த வரிசையில்,

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்,

பசுமைத் தமிழ்நாடு இயக்கம்,

தமிழ்நாடு ஈரநில இயக்கம்,

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்

ஆகிய நான்கு சிறப்பு இயக்கங்கள் மூலமாக இதற்கான முன்னெடுப்புகளை நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகதான், ஆண்டுதோறும் காலநிலை உச்சி மாநாடுகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம். இந்த மாநாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின்கீழ் செயல்பட்டுவரும், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரைக்கும், தமிழ்நாட்டில் இரண்டு காலநிலை உச்சி மாநாடுகளை நம்முடைய அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், நம்மை தகவமைத்துக்கொள்ள விவாதங்களை முன்னெடுப்பதற்கான தளமாக இந்த மாநாட்டை நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். இன்று உலக நாடுகள் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்,கடந்தாண்டு துபாயில் ஏற்பட்ட வெள்ளம்,சீனா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் - ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் ஏற்பட்ட காட்டுத் தீ, வெப்ப மண்டல நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்புகள் ஆகியவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், நம்முடைய சகோதர மாநிலமான கேரளத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவை யாரும் மறந்திருக்க முடியாது.

நம்முடைய மாநிலத்திலும், திருவண்ணாமலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையெல்லாம், வேறு வேறு நாடுகளில் வேறு வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களாக இருந்தாலும், இது எல்லாவற்றிற்கும் ஒரே காரணமாக காலநிலை மாற்றத்தைத் தான் சொல்ல முடியும். இதை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கு முதல் தேவை, பிரச்சினையின் தீவிரத்தை உணர்வது! காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், பேரிடர்களையும் எதிர் கொள்ளவேண்டும் என்றால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? அதை எப்படி எதிர்கொள்வது? அதற்கேற்றபடி, நம்மை எப்படி தகவமைத்துக்கொள்வது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது மட்டும் நடந்தால், நம்முடைய சமூகம் காலநிலைக் கல்வியறிவை பெற்ற சமூகமாக இருக்கும். பேரிடர்களிலிருந்து மீண்டு வருவதற்கான ‘Resilience’ இருக்கும்.

காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட நம்முடைய அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கனவுகள் எல்லாவற்றிற்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது! அதனால்தான், நம்முடைய அரசு, காலநிலைக் கல்வியறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக, ஒரு முக்கிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன்.

தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும்! .காலநிலைக் கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறோம்.எல்லோருக்கும் அவசியமான காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமே அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம். பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றத் தடுப்பு மற்றும் தழுவல்களுக்கான திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தால், பாதிப்படையக் கூடிய வேளாண்மை, நீர்வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். பசுமைக் குடில்கள் மூலமாக, வாயுக்களின் உமிழ்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் காணப்படும்.

வெப்ப அலையை மாநிலப் பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. வெப்ப அலையால் உயிரிழக்க நேரிட்டால், 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறோம். வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்ப அலை தாக்கத்தின்போது, தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்கவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறோம். இயற்கை வளங்களைப் பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும். இயற்கைப் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொண்டு, மீண்டெழக்கூடிய சமூகமாக வளரவேண்டும். பசுமைத் தொழில்நுட்பங்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தக்கூடிய சமூகமாகவும்,உலகளாவிய காலநிலைக் குறிக்கோள்களை அடைய உறுதுணையாக இருக்கும் சமூகமாகவும் எதிர்காலத்தில் நாம் திகழவேண்டும்.

தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக கருதி, தொடர்ந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு முன்னெடுப்பும் இதை மனதில் வைத்துதான் செய்யப்படுகிறது. அது, நீர்நிலைகள் மறுசீரமைப்பு, காலநிலை மீள்திறன் கொண்ட நகரங்களை கட்டமைத்தல் Bio-Diversity-யை பாதுகாத்தல் என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நம்முடைய உறுதியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

எதிர்க்காலத்தில் வரக்கூடிய சூழலியல் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இப்போதே Advance-ஆக திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு மேற்கொண்டு வருகிறது. அதை உலகத்திற்கு எடுத்துரைக்கும் உரைகல்லாக இந்த மாநாடு விளங்குகிறது. மக்களுக்கு தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படும் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து உங்களிடமிருந்து விடை பெறுவதற்கு முன்பு இந்த மாநாடு வெற்றி அடைய வாழ்த்தி, இதனை சிறப்பாக ஒருங்கிணைத்த அமைச்சர் நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களுக்கும், செயலாளர் செந்தில்குமார் மற்றும் அவரோடு துணைபுரிந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்''இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement