நியூ டைரக்டர்களை என்கரேஜ் பண்ணுங்க சார் - மீடியாக்களிடம் மர்மர் இயக்குநர் வேண்டுகோள்!
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக "மர்மர்" உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. எனினும், ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இந்தத் திரைப்படம் ரிலீசான இரண்டாவது நாளில் இதன் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது.தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மர்மர் படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய படத்தின் புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி, "அனைவருக்கும் வணக்கம். எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் எங்களால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. புரொடக்ஷன் மற்றும் இயக்குநர் குழுவினருக்கு நன்றி. குறிப்பாக இந்தப் படத்தின் இயக்குநர் தனக்கு துணை இயக்குநராக பணியமர்த்தாமல் படம் முழுக்க தனியாகவே பணியாற்றினார். அதுவும் காட்டுப் பகுதிகளில் பேய் படத்தை எடுத்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள். இது மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி. சில காட்சிகளில் தலை மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்டு இருக்கும். அத்தகைய காட்சிகளை படமாக்கும் போது மணிக்கணக்கில் அவர்கள் உள்ளே மறைந்திருக்க வேண்டியிருந்தது. மேலும், இந்தப் படத்திற்காக தங்கள் முழு முயற்சியை கொடுத்த அனைவருக்கும் நன்றி," என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.கே. பிக்சர்ஸ்-இன் பிரபாகரன் பேசும் போது, "பத்திரிகை, ஊடகத்துறையை சார்ந்த அனைவருக்கும் நன்றி. மர்மர் திரைப்படத்தை கடைகோடியெங்கும் கொண்டு சேர்த்த தமிழக மக்களுக்கு வணக்கங்கள் மற்றும் மனமார்ந்த நன்றி. ஹேம்நாத் சார் இந்தப் படத்தை எடுத்து முடித்து, இன்று இந்தப் படம் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 400 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கடின உழைப்பின் மறு உருவம். எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவர். இந்த இளம் வயதில் எந்த மாதிரி படம் எடுத்தால் வெற்றி பெறுமோ அதை யோசனை செய்து அப்படியே எடுத்து கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளராக இந்தப் படத்தால் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தை விநியோகம் செய்ய முன்வந்த குகன்-க்கு நன்றி. நான் அவரிடம் சகோதரராகவே பழகினேன். எல்லோரும் கடின உழைப்பை கொடுத்தார்கள். அனைவரின் பெயரை விட அவர்களது கதாபாத்திரத்தின் பெயர் தான் நினைவில் உள்ளது. படத்தின் கதையை கேட்டதில் இருந்தே அப்படித் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு நிகராக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் மிகவும் அருமையாக பணியாற்றி இருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர் கெவின் இந்தப் படத்தின் இயக்குநருடன் இரவு பகலாக உழைத்தார். படத்தொகுப்பாளர் ரோஹித் சிறப்பாக பணியாற்றினார். உங்கள் அனைவருக்கும் நன்றியை தவிர வேறு என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.ஊடகத்துறையினருக்கு மீண்டும் நன்றி. இளசாக இருந்தாலும், புதுசாக இருந்தாலும் கொஞ்சம் சலசலப்பை உண்டாக்கி, கசக்கி தான் அதில் இருந்து வந்து தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்தப் படம் தான் உதாரணம். அனைவருக்கும் நன்றி," என்று கூறினார்.
மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது, "பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்திரிகை பார்க்க மேடைகளும் இல்லை, சினிமாத்துறை பார்க்காத கலைஞர்களும் இல்லை. அப்படி வந்த மர்மர் குழுவினரை நேற்று பிறந்த குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். இந்த மேடையை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். ஏன் என்று நான் உங்களுக்கு சொல்கிறன். நூற்றாண்டுகளை கடந்த சினிமாத் துறையில் மர்மர் குழு புதிதாக வந்த குழந்தை தான். இதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த உங்களின் மனமார்ந்த ஆதரவை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றீர்கள். இதற்கு உங்கள் அனைவருக்கும் கோடானக் கோடி நன்றி'' என்று தெரிவித்தார்.
படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசும் போது, "அனைவருக்கும் வணக்கம். மீண்டும் சந்திக்கிறோம். . ஃபவுண்ட் ஃபூடேஜ் என்பதால் இந்தப் படத்தில் ஃபோக்கஸ் புல்லர், துணை ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் என தனி குழு ஒன்று எப்போதும் தயாராக இருக்கும். இந்தப் படத்தில் நடிகர்களுக்கு மிகப் பெரிய சவால் அவர்கள் கேமராவை பார்த்து நடிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். மற்ற படங்களில் கேமராவை பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இந்தப் படம் வித்தியாசமானது. பலர் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கும் போது கேமராவை பார்த்து திட்டு வாங்கியுள்ளார்கள், மன்னித்து விடுங்கள். ஒளிப்பதிவாளர் ஜேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ரீடேக், முதுகுவலி அதன்பிறகு சிகிச்சை என எல்லாம் முடிந்து தற்போது இங்கு வந்திருக்கிறார். ஒரு இயக்குநரின் ஒளிப்பதிவாளர் இவர். எத்தனை முறை ரீடேக் என்றாலும் சற்றும் தளர்வின்றி எடுத்துக் கொடுத்தார், மிக்க நன்றி. ஊடகத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி. எங்கள் படம் குறித்து இவ்வளவு அதிகமாக எழுதுவீர்கள் என்று நினைக்கவில்லை. பலரும், எங்கள் திரைப்படம் குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பணி என்னைப் போல் மேலும் பலருக்கு ஊக்கமும், உற்சாகத்தையும் அளிக்கும். இதே குழுவுடன் அதிக மேடைகளில் உங்களை சந்திக்க விரும்புகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. ஸ்ரீ வெங்கடேஷ் உங்களுக்கும் பெரிய நன்றி. உங்கள் சகோதரியின் திருமண வேலைகள் நடக்கும் போதிலும் நாங்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் எங்களுக்கான பணியும் நடந்து கொண்டே இருந்தது. மிக்க நன்றி ஸ்ரீ வெங்கடேஷ்," என்று கூறினார்.
இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜேசன் வில்லியம்ஸ் மேற்கொள்ள ஒலி வடிவமைப்பு பணிகளை கெவின் ஃபிரடெரிக் மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரோஹித் மேற்கொண்டுள்ளார்.