எம்மி விருது வாங்கிய முதல் ஆசியப் பெண் அன்னா சவாய்!
அன்னா சவாய் எம்மி விருதை வென்றுள்ளார். இவ்விருதை வெல்லும் முதல் ஆசியப் பெண். இச்செய்தி வெளியானதில் இருந்து இணையவாசிகள் “முதல் விருதா?” என்று வியப்பினைப் பகிர்கிறார்கள்.நியூசிலாந்தில் பிறந்த ஜப்பானியப் பெண் அன்னா சவாய். தந்தையின் வேலை காரணமாக நியூசிலாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ் எனப் பல நகரங்களில் வசித்தவர். 10 வயதுக்கு மேல் வளர்ந்ததெல்லாம் ஜப்பானில். அப்பா பீட்டில்ஸ் விசிறி. அம்மா ஓபரா பாடகர். எனவே இவருக்கும் கலைத்துறையில் ஆர்வம். புகழ்வீச்சுடைய ஜப்பானிய இசைக் குழுவில் பாடகரானார். ஒரு கட்டத்தில் தனக்கு விருப்பமான நடிப்புத் துறையில் ஈடுபட விரும்பி அங்கிருந்து வெளியேறினார்.
பிபிசி தொடர், F9 திரைப்படம் என்று படிப்படியாகத் தன் கனவை நிறைவேற்றினார். தற்போது ஷோகன் தொடருக்காக எம்மி விருதை வென்றுள்ளார். இவ்விருது அமெரிக்கத் தொலைக்காட்சி உலகில் வழங்கப்படும் உயரிய விருது. அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கும் பன்முகத்தன்மை. திரையில் அது எந்த அளவுக்குப் பிரதிபலித்தது என்பது நாம் அறிந்ததுதான். அதெல்லாம் பழங்கதை.
கடந்த சில வருடங்களாக inclusiveness என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. பல்வேறு இன மக்கள் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள் கதாபாத்திரங்களும் இயல்பாகத் திரையில் வருவதை மேற்குத் திரையுலகம் சாத்தியமாக்கியுள்ளது. பாராட்டுக்குரியது. நாமும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. என்றாலும் லீட் எம்மி விருது வாங்கிய முதல் ஆசியப் பெண் என்கிற செய்தி சட்டென இத்தனை வருடங்களாக இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை உணரச் செய்துள்ளது. அதன் விளைவே வியப்பும் விவாதமும். சமூகத்தை முன்னகர்த்திச் செல்ல ஆரோக்கியமான உரையாடல்கள் தேவைதான்.