ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’:மோடி அரசு உத்தரவு!
ஜூன் 25 ம் தேதியை அரசியல்சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய வரலாற்றின் இருண்ட கால கட்டமான, காங்கிரஸ் பிரகடனப்படுத்திய அவசர நிலையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஜூன் 25-ம் தேதி அஞ்சலி செலுத்தும் நாளாக அமையும் என்று பிரதமர் மோடி X தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி என்கிற இரும்புப் பெண்மணி சர்வ வல்லமை கொண்ட தலைவராக இந்தியாவின் அசைக்க முடியாத பலமாக கருதப்பட்ட காலம். 1966 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்ற நாள் தொடங்கி இந்திரா காந்தி அதிகார மையமாகவே இருந்தார். 1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிளவுபட்டபோதும், இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அதிக பலம் மிக்கதாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தலில் அவர் முறைகேடுகளை செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குபின் வந்த தீர்ப்பில் இந்திரா காந்தி வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இந்திரா காந்தியை பதவியில் இருந்து விலகுமாறு கோரி பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன. ஜெயப்பிரகாஷ் நாராயண் , மொரார்ஜி தேசாய், ஜிவத் ராம் கிருபாளனி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில்தான், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி, அரசுப் பணியாளர்களின் போராட்டத்தால் ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என்றும் கூறி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யுமாறு அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமதுவுக்கு, இந்திரா காந்தி கடிதம் எழுதினார். இதையேற்று ஜூன் 25 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனமானது. இது குறித்து ஆந்தை ரிப்போர்ட்டரில் வந்த விரிவான செய்தியை அறியலாம்.
இதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தப்பவில்லை. 1975 ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி, 1977 மார்ச் 21 வரை நீடித்த எமர்ஜென்சி காலத்தில் நாடு முழுவதும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எதிர் கருத்துகளை கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சாரா அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. குஜராத், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. கருத்தடைச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. ஊடகங்களுக்கு கடுமையான தணிக்கை என இந்திய ஜனநாயகம் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானது.
இந்நிலையில் இப்போது அந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, பிரதமர் மோடி X தளத்தில் இந்திய வரலாற்றின் இருண்ட கால கட்டமான, காங்கிரஸ் பிரகடனப்படுத்திய அவசர நிலையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஜூன் 25-ம் தேதி அஞ்சலி செலுத்தும் நாளாக அமையும் என்று தெரிவித்துள்ளார். அது போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினம் ('சம்விதான் ஹத்யா திவாஸ்') ஆகக் கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அடக்குமுறை அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசியலமைப்பு படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நிலவளம் ரெங்கராஜன்