எலான் மஸ்க், ஏஐ மூலம் உருவாக்கிய வீடியோ!
நவீன மயமாகி விட்ட இந்த டிஜிட்டல் உலகில் அசல் எது, போலி எது என்பதை அடையாளம் காண்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. மறுபக்கம் டீப்ஃபேக் அச்சுறுத்தலும் நிலவுகிறது. இந்நிலையில், வேடிக்கையான வகையில் ஒரு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அதை மஸ்க் பகிர்ந்துள்ளார். வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு முதல் சமீபத்திய மைக்ரோசாப்ட் செயலிழப்பு வரை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.கைது உடையில் டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மோடி, புடின், கிம் ஜோங் உன், போப் பிரான்சிஸ் என உலகத் தலைவர்கள் வித்தியாசமான உடையில் பேஷன் ஷோவில் நடந்து வருகின்றனர். இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் குளறுபடியையும் கிண்டலடித்துள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் போலவே குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ராம்ப் வாக்கை பொருத்தி நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? அவர் அதை செய்வார் என்று என்றைக்காவது நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுதான் உண்டா?இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளது எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஏஐ வீடியோ.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் நிறுவனம் சிஇஓ டிம் குக், போப் பிரான்சிஸ் ஆகியோரின் ஏஐ அவதார்கள் இதில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் விதவிதமாக அவுட்ஃபிட் அணிந்து ராம்ப் வாக் போட்டுள்ளனர்.
இந்த வீடியோ மற்றும் இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.