தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது!
நம் நாட்டின் 18-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது.இதையடுத்து, கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
முன்னதாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது. சோதனையில் ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் என ரூ.1,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் விடுவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 543 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது. அதுமட்டுமின்றி, அரசு வழக்கமான பணிகளை நாளை முதல் மேற்கொள்ளலாம். அரசு புதிய திட்டங்கள் அறிவிப்பது, நிதி உதவி அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பணிகளையும் நாளை முதல் வழக்கம் போல் மேற்கொள்ள முடியும்.