தேர்தல் நிதிப்பத்திர திட்டம் சட்டவிரோதமானது: அதை உடனடியாக நிறுத்துக - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
நம் நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத வகையில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் நன்கொடை அளிக்க உருவாக்கப்பட்ட தேர்தல்நிதிப் பத்திரங்கள் சட்டவிரோதமானவை. இந்த பத்திரங்கள் விற்பனையை எஸ்பிஐ வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்ட்டின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018, ஜனவரி 2ம் தேதி மத்திய அரசு தேர்தல் நிதிப்பத்திரங்களை கொண்டு வந்தது. இந்த பத்திரங்கள் மூலம் ரூ.20ஆயிரத்துக்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பெயரை வெளியிடத் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது தேர்தல் பத்திர திட்டத்தின் விதிமுறைகள்படி, இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் (அரசிதழ் அறிவிப்பின் பிரிவு எண். 2 (டி ) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும் தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து இந்த திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் ஆகியோர் தேர்தல் சுப்ரீம் கோர்ட்டி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “ தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டம், குடிமக்களுக்கு வழங்கும் தகவல் அறியும் உரிமையை மீறுகிறது. அரசியல் கட்சிக்கு யார் நன்கொடை வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை, ஊழலை அதிகப்படுத்துகிறது.
கம்பெனிச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நிதிப்பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் 2017, 2016 நிதி மசோதா வடிவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தேர்தல் நிதிப்பத்திரங்கள், கட்டற்ற அரசியல் நன்கொடை அளிக்கும் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினர்.
ஆனால் மத்திய அரசு தரப்பில் வைத்த வாதத்தில் “ தேர்தல் நிதிப்பத்திரங்களால் கறுப்புப்பணம் கட்டுக்குள் வரும். கணக்கில் வரும் பணம் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தது.இந்த வழக்கில் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், தலைமையில் மூத்த நீதிபதிகள், சஞ்சீப் கண்ணா, பி.ஆர்.காவே, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரித்த தீர்ப்பை கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஒத்தி வைத்தது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக இந்த வழக்கின் இறுதிவாதங்கள் நடந்து முடிந்தநிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இன்று வந்த அந்த தீர்ப்பு விபரம்,
"தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த தீர்ப்புடன் வந்துள்ளோம். இதில் என்னுடைய தீர்ப்பும், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்பும் ஒரேமாதிரியாக இருக்கிறது. மற்ற நீதிபதிகளின் தீர்ப்பு சற்றே வேறு கோணத்தில் உள்ளது.இந்த வழக்கைத் தாக்கல் செய்த மனுதாரர்கள், முக்கியமாக இரு அம்சங்களை கேள்விக்குள்ளாக்கினர். முதலாவதாக, மக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் 19(1)(ஏ) பிரிவை மீறியுள்ளதாக சட்டத்திருத்தங்கள், இரண்டாவதாக, கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் நன்கொடை, சுதந்திரமான, நியாயமான, நேர்மையான தேர்தலை மீறுகிறதா என்ற கேள்விகளை எழுப்பி இருந்தது. அரசு பொறுப்புடன் இருக்க வேண்டும், நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைக்க மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீதிமன்றம் கருதுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் விரிவுபடுத்தப்படுவதன் முக்கியமான அம்சம் என்னவென்றால், மாநில விவகாரங்களுடன் நின்றுவிடாமல், பங்கேற்பு ஜனநாயகத்திற்குத் தேவையான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. தேர்தல் செயல்பாட்டில் அரசியல் கட்சிகளும் தொடர்புடைய அம்சங்கள்தான். தேர்தல் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் யாரிடம் இருந்து நிதி பெறுகின்றன என்ற தகவல்களை தெரிவிப்பது அத்தியாவசியமானது.
இந்த தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதிலும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.
அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது. இந்தத் தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
நிலவளம் ரெங்கராஜன்