தேர்தல் வந்தாச்சு– திருப்பதி கோயில் தரிசன முறையில் மாற்றம்!
ஆந்திராவை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் ஆகியவஒ ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடையும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13ம் தேதி ஒரே நாளில் ஆந்திரா சட்டசபை மற்றும் ஆந்திரா லோக்சபா தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வரும் 3 மாதங்களுக்கு ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலின் தரிசன முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, விஐபி தரிசன விதிமுறைகளில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமையான் கோவிலில் ஆண்டு முழுவதும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுக்கு சராசரியாக 2.4 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தினசரி சராசரியாக 60,000 முதல் 75,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதே சமயம் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் வரைலான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அத்துடன் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்வதில்தான் எத்தனை எத்தனை விதங்கள்... சிலர் காலையில் வீட்டிலிருந்து கிளம்பினால், தரிசனம் முடித்து, இரவே ஊருக்குத் திரும்பி மறுநாள் வழக்கம்போல் அலுவலகம் வந்து லட்டு பிரசாதம் கொடுத்து அலுவலக நண்பர்களை ஆச்சர்யப்படுத்துவார்கள். சிலர் திருமலையில் ஒரு நாள் இரவு தங்கி, மறுநாள் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து இல்லம் திரும்புவார்கள். வேறு சிலர் நடைப்பயணமாகச் சென்று வழியில் உள்ள கோயில்களையெல்லாம் தரிசித்துவிட்டு பிறகு திருமலையில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வருவார்கள். அந்த வகையில் ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாட்டிலேயே பணக்கார கோயிலாக திருப்பதி இருந்து வருகிறது
இதனிடையே தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசனத்தில் சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளன. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விஐபி தரிசனத்தில் மக்கள் பிரதிதிகளான எம்.பி., எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படும். மேலும் பரிந்துரை கடிதங்கள் மூலம் கோவிலில் தங்கும் வசதி கொடுக்கப்படும். ஆனால் இப்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் பரிந்துரை கடிதங்கள் இனி ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விஐபிக்கள் நேரில் வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.