தேர்தல் 2024: ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த முடிவு?
இந்திய நாட்டு மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் தேதியானது எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்த நிலையில், தற்போது தேர்தல் தேதி பற்றிய முக்கிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை பிற்பகல் 3 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும், இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை 543 தொகுதிகள் கொண்ட பார்லிமெண்ட் எலெக்ஷன் நம் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும். தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் தத்தம் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன. பாஜக இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளார். இவ்வாறு தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.
இதனிடையே, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று அவர்கள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வரவேற்றார்.
இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மற்றும் புதிய தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர். அந்த வகையில் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலுங்கானா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் பாராளுமன்ற தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை எல்லாம் முடிவு செய்து விட்ட நிலையில் பாராளும்னறத் தேர்தலுக்கான அட்டவணையை நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்