கல்வி வளர்ச்சி நாளின்று - காமராஜர் நினைவுகள்!
காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய 'பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.
அன்று ஊரே திரண்டு வந்திருந்தது முதலமைச்சரைப் பார்ப்பதற்காக. அதிகாரிகள் அலறியடித்துக்கொண்டு ‘ஏதற்கு முதலமைச்சரைப் பார்க்க வேண்டும் எங்களிடம் கூறினால் நாங்களே எந்தப் பிரச்னையானாலும் தீர்த்து வைப்போமே’ எனக் கெஞ்சி கூத்தாடியப் பிறகும் இம்மியளவிற்கும் அசையாமல் நின்றனர் அவ்வூரார். முதலமைச்சரைப் பார்த்தேயாக வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவ்வூரே உறுதியாக நின்றது.
ஒரு வழியாக அவர்களின் பிடிவாதம் வெற்றி பெற்று, முதலமைச்சரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அண்ணாந்துப் பார்க்கும் அளவிற்கு உயரம், எழுந்து நிமிர்ந்து நின்றால் முழங்காலுக்குக் கீழாகத் தொங்கிக் கொண்டு நிற்கும் கைகள், கறுத்த மேனியில் வெளுத்த கதர் வேட்டியும் சட்டையும், தூய்மைக்கும் எளிமைக்கும் அடையாளம். பார்வையில் கருணை, பேச்சில் இனிமை, முடிவில் திடம் இதுதான் அந்த முதலமைச்சரின் அடையாளம்.
வந்தவர்கள் அனைவரும் வணக்கம் சொல்லிவிட்டு, ‘ஐயா எங்கள் ஊரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் பெரும் லஞ்ச பேர்வழி, அவரால் எங்கள் ஊரில் நீதியும் நியாயமும் கெட்டுப் போச்சு, அநியாயம் தலைவிரிச்சாடுது. அதனால அந்த அதிகாரியை அங்கிருந்து உடனடியாக வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.’ உரத்தக்குரலில் கோரிக்கை வைத்தனர் ஊரார். ஆனால் அந்த முதலமைச்சர், அவ்வூராரைப் பார்த்து மெல்ல புன்னகைத்துக் கொண்டு, என்ன கூறினார் தெரியுமா? ‘அந்தப் போலீஸ் அதிகாரி உங்க ஊரில வந்து லஞ்சம் வாங்கி, அந்த ஊரையே கெடுத்துப்புட்டாரு, அவரை இங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றினா, அங்க போய் அந்த ஊர் மக்களையும் கெடுத்துப்புடுவாரு. அதனால, அவரால உங்க ஊர் கெட்டதோட இருக்கட்டும். இன்னொரு ஊரும் கெட்டுப் போவதற்கு விடவேண்டாம்’ என கூறி அந்த மக்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
அவர்தான் நூற்றாண்டுக் கடந்தும் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் கர்மவீரர் காமராஜர்.தமிழகத்தில் மூன்று முறையாக ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவர். மூன்றாவது முறை தமது ஆட்சி காலம் முடிவதற்கு முன், தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது முதலமைச்சர் பதவியை துச்சமென நினைத்து, தேச வளர்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அப்பழுக்கற்ற தேசபக்தராகத் திகழ்ந்தவர்.
இரண்டு முறை இத்தேசத்தின் பிரதமராகும் அரிய வாய்ப்பு தன்னை நாடி, தேடி வந்த பிறகும் அதன் மீது இம்மியளவிற்கும் விருப்பம் கொள்ளாமல், அந்த இடத்தை வேறு இருவருக்குத் தாரைவார்த்தார். அதனால் இந்தியாவின் ‘கிங்மேக்கர்’ என்ற அழியாத பெயருக்கும் புகழுக்கும் உரித்தானார்.தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் பருவத்தில் பிள்ளைகள் ஆடு, மாடு மேய்ப்பதைப் பார்த்து மனமுருகி அவர்கள் பள்ளியில் சென்று படிக்காததின் காரணத்தை உணர்ந்து, அவர்களின் படிப்பிற்காக கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறந்ததோடு மட்டும் நின்று விடாமல், ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்குவதற்காகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக இலவச சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கருத்து தெரிவித்தபோது, “நாம் பரம்பரைத் தொழிலையே செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நாம் படிக்காதவர்களாக இருந்து ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் வேலை செய்ய வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண்படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?'' எனக் கேட்டார்.
இவற்றுடன், கல்வியறிவற்ற சமூகம் வேறு எத்துறையிலும் வளரச்சியடைய முடியாது என்பதை நன்குணர்ந்த அவர் இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி ஆகியத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். அதாவது 1957-ஆம் ஆண்டு காமராஜர் ஒரு கணக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன் வாயிலாகப் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் இல்லை என்பதையும், ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் நெடுந்தூரம் இடைவெளி இருப்பதையும் அறிந்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் பள்ளிகள் அமைவது அவசியம் என்பதை உணர்ந்தார். அந்தக் கணக்கெடுப்பின் வாயிலாகத் தமிழ்நாட்டிலிருந்த பதினைந்தாயிரம் கிராமங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரம் கிராமங்களில் பள்ளிகளே கிடையாது என்பதை அறிந்து அதிர்ந்து போனார். உடனே அந்தப் பகுதிகளில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பதில் தனது கவனம் முழுவதையும் செலுத்தினார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் ‘படித்தவேலையற்றோருக்கு நிவாரணம்’ என்ற முறையில் மத்திய அரசு வழங்கிய நிதியைக் கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களில் ‘ஓர் ஆசிரியர் பள்ளி’களைத் திறந்தார். ஏற்கெனவே செயல்படும் பள்ளிகளைச் சிறந்த பள்ளிகளாக ஆக்க, மேலும் சில ஆசிரியர்களை நியமித்தார்.இதன்மூலம் படித்த வேலை இல்லாதவர்களுக்கும் வேலை வாய்ப்பளித்ததுடன், நாட்டில் நிலவிய அறியாமை இருளைப் போக்கி, மக்களிடையே கல்வி அறிவு வளத்தைப் பெருக்க உரிய நடைமுறைகளை மேற்கொண்டார்.
இதன் காரணமாகத் தமிழகத்தில் இவரது ஆட்சி காலத்தில் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள் 29 ஆயிரமாக உயர்ந்தன. தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 48 லட்சமாக உயர்ந்தது. இது போன்று உயர்நிலைப் பள்ளிகளும் மூன்று மடங்கு உயர்ந்தன,
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. மட்டுமின்றி அதுவரை பள்ளிகளில் ஆண்டுக்கு 180 ஆக இருந்த வேலை நாள்கள் 200 மாற்றப்பட்டன.
தொடக்கக் கல்வியோடு மட்டும் அவரது கல்விப்பணி முடிந்து விடவில்லை உயர் கல்வியிலும் தொழில் நுட்பக் கல்வியிலும் அவரது கவனம் சென்றது. அதனால் தான் சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (சென்னை ஐஐடி) தொடங்கப்பட்டது. இப்படி கர்மவீரர், அவரது ஆட்சி காலத்தில் கல்வியில் செயல்படுத்திய மாபெரும் புரட்சியின் காரணமாகத் தான் தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முதல், காமராஜர் பிறந்த தினமான ஜூலை மாதம் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து, கல்விக்கண் திறந்த காமராஜரை கௌரவித்துள்ளது.
கல்விப்பணியோடு மட்டும் அவரது செயல்பாடு நின்றுவிடவில்லை தொழில் புரட்சியிலும் விவசாய வளர்ச்சிலும் அவர் அதிக முக்கியத்தும் அளித்தர். விசாயத்திற்காக அவர் உருவாக்கிய அணைகட்டுகளும் நீர்தேக்கங்களும் இன்றும் தமிழக விவசாயிகளின் வரப்பிரசாதங்களாக உள்ளன.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மலைவாழ் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்பதற்காக எழுப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலம் இன்றளவும் அவரது பெயருக்குப் பெருமை சேர்க்கும் மணிமகுடமாக உள்ளது.
1903 ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசுவாமி, சிவகாமி அம்மாளின் புதல்வனாக புவியுதித்து, தனது வாழ்நாள் முழுவதையும் இத்தேசத்திற்காக அற்பணித்து, இத்தேசத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்று, மனிதருள் மாணிக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் அந்த கர்மவீரரின் பிறந்த நாளை இன்று கொண்டாடி மகிழ்வோம்.
நிலவளம் ரெங்கராஜன்