‘நீங்கள் நலமா’ என்ற அரசின் திட்டத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி!
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்த புதிய திட்டத்தி விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். அவரது x சமூகவலைதள பதிவில்,”எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்.விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்” என தெரிவித்துள்ளளார்.
முன்னதாக ‘‘உங்கள் நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன்; அதன் மற்றுமோர் அடையாளம் தான் ‘நீங்கள் நலமா’ என்னும் புதிய திட்டம்’’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,‘‘தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ முத்திரைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படியொரு திட்டம்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம்.
புதிய திட்டத்தின் இந்தத் தலைப்பே, மக்களின் மீதான எங்களது கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் எனபதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.
இதற்கு முன்பு தொடங்கி வைத்து மக்களின் வாழ்வினை மேம்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால்,
மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் – என இப்படி நான் அடுக்கிக்கொண்டே இருக்க முடியும்.
கோடிக்கணக்கான
மக்களை மகிழ்விக்கும்…
இந்தத் திட்டங்கள் அனைத்தும் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து வரும் திட்டங்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குடும்பத்தையும் – ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்களாகும்.
நமது திராவிட மாடல் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் பலன் அடையாதவரே இல்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னைச் சந்திக்கும் மக்கள் முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சியில் இத்திட்டங்களின் வெற்றியைக் காண்கிறேன்.
கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் - உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.#தோழி_விடுதி திட்டம் குறித்துப் பேசிய… pic.twitter.com/W73p6bM2Pr
— M.K.Stalin (@mkstalin) March 6, 2024
பயன் பெற்ற மக்களின் புள்ளிவிவரம் எனப் பார்த்தால்,
* “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்” மூலம் ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள்.
* “விடியல் பயணத் திட்டம்” மூலம் மகளிர் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ.888 வரை சேமித்துப் பயனடைகின்றனர்.
மக்களைத் தேடி மருத்துவம்:
1 கோடி பேர் பலன்
* “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தால் ஒரு கோடிப் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் வயிறார காலைச் சிற்றுண்டி உண்கிறார்கள்.
* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான “புதுமைப்பெண்” திட்டத்தின் பயனாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பட்டதாரிகளாக உருவாகப் போகிறார்கள்.
* ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திப் பயனடைந்துள்ளனர்.
* ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயன் அடைந்திருக்கிறார்கள்.
2 லட்சம் உழவர்களுக்கு
இலவச புதிய மின் இணைப்பு
* 62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன.
* 2 லட்சம் உழவர்கள் புதிதாக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.
* உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோரும் 5 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைகின்றனர்.
* ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் 2 லட்சம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
* ’முதல்வரின் முகவரி’ திட்டத்தினால் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது.
* ‘மக்களுடன் முதல்வர்’ திட்டதின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுஉள்ளது.
இப்படி, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது நமது திராவிட மாடல் அரசு.
குடும்ப ஆட்சிதான்
எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது.
ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் – இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன்.
அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
அமைச்சர்கள், கலெக்டர்கள்
கருத்துக்களைப் பெற்று…
அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம். திராவிட மாடல் அரசின் நலம். தாய்த்திருத் தமிழ்நாட்டின் நலம்.
அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் மற்றுமோர் அடையாளமாகத்தான் இந்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.
உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்.’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.