For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பல லட்சம் பேர்களுக்கு பார்வை வழங்கிய சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்!

01:00 PM Nov 21, 2023 IST | admin
பல லட்சம் பேர்களுக்கு பார்வை வழங்கிய சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் காலமானார்
Advertisement

ம் நாட்டின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை வெளிநாடுகளில் முடித்துவிட்டு, 1978ம் ஆண்டு இந்த அமைப்பை சென்னையில் நிறுவினார். சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த மக்களும் தரமான இலவச மருத்துவ சிகிச்சையை பெற இவர் பெரிதும் உதவினார். இவரது தொண்டு நிறுவனமான சங்கர நேத்ராலயா மூலம் தினமும் ஏராளமானோர் பயன் பெற்றனர். அதன் பிறகு இந்த நிறுவனம் ஒரு மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பேர்பட்ட சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் இன்று காலமானார். அவருக்கு தற்போது வயது 83.

Advertisement

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் சென்னை புறநகர் ஒன்றில் பிறந்தார். தனது இளமைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த இவர், தனது பெற்றோர் மரணத்தின் மூலம் கிடைத்த காப்பீட்டுத் தொகையை மருத்துவ அறிவியலில் தமக்கிருந்த ஆர்வத்தைத் தொடரப் பயன்படுத்தினார்.1963ம் ஆண்டில், மெட்ராஸ் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.தனது மருத்துவக் கல்வி வாழ்க்கையை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து தொடங்கிய இவர், அங்கு பல கண் மருத்துவ மையங்களில் பயிற்சி பெற்றார்.

Advertisement

பரோபகாரர்கள் குழுவுடன் சேர்ந்து 1978ம் ஆண்டு சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவு ஆகும். அதைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு, டாக்டர் பத்ரிநாத் ஒரு மருத்துவக் குழுவோடு சென்னையில் ‘சங்கர நேத்ராலயா’ எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு லாப நோக்கமற்ற, தரமான இலவச கண் சிகிச்சை மருத்துவத்தைக் கொடுக்க முன்வந்தார்.அவர் தொடங்கிய இந்த மருத்துவமனையில் தினமும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இலவச கண் அறுவை சிசிக்சை செய்யப்படுகின்றன. மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் வளரும் கண் சிகிச்சை நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் கொடுக்கப்படுகின்றன. இவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக இந்திய அரசாங்கம் டாக்டர் பத்ரிநாத்க்கு பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு என்ற துயரத்துடன்.முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவில்,''சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் திரு. பத்ரிநாத் அவர்கள் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்மபூஷன்' விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கர நேத்ராலயா மூலம் திரு. பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் திரு. பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம்.

எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு. டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement