டபுள் டக்கர்- விமர்சனம்!
நம்மில் பலருக்கு அனிமேஷன் படங்கள் என்றாலே குழந்தைகளுக்கானது என்றவொரு அபிப்ராயம் , அனிமேஷன் படமே பார்க்காதவர்களுக்கும் உண்டு . காரணம் , கார்ட்டுன் தொலைக்காட்சிகளில் போடும் மொக்கையான அனிமேஷன் சீரயல்களைச் சொல்லலாம் . ஆனால் அந்த பார்வையெல்லாம் மேலைநாடுகளில் எப்போதோ மாறி விட்டது . அனிமேஷன் படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பார்த்தாலே நமக்குத்தானாக புரியும் . நம் இந்தியாவிலும் இத்தகைய மனோபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் சூழலில் பெற்றோர்களே குழநந்தைகளைத் தியேட்டருக்கு அழைத்து வந்த விட முடியும் என்ற நம்பிக்கையில் டபுள் டக்கர் என்ற படத்தை அந்த கால அதிசயபிறவி ஸ்டைலில்கொஞ்சம் ஜாலியான திரைக் கதை அமைத்து கவர முயன்று இருக்கிறார் புதுமுக டைரக்டர் மீரா மகதி.
அதாவது ஆக்சிடெண்ட் ஒன்றில் அப்பா & அம்மாவை இழந்து விடும் நாயகன் அரவிந்த் ( தீரஜ்) முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது பெரிய பணக்காரனாக இருந்தும் அவனிடம் யாரும் பழக மறுக்கிறார்கள். அதே சமயம் இளம் பெண் நாயகி பாரு (ஸ்மிருதி) மட்டும் அவனுடன் கேஷூவலாக பழகுகிறாள். வழக்கம் போல் இவர்களின் நட்பு காதல் ஆகிறது. அந்நிலையில் 'காட்'ஸ் ஆர்மி' என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து அரவிந்த் உயிரை பறித்து விடுகிறது. பின்னர் தான் அவர் 85 வயது வரை வாழக்கூடிய தகுதி உடையவர் என்றும் தவறுதலாக அவரது உயிரை பறித்த விஷயம் தேவதை பொம்மைகளுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்துக் கொண்ட நாயகன் அரவிந்த தன் உடலுக்கு உயிர் தரும் வரை விட மாட்டேன் என்று தேவதைகளை மடக்கி வைத்துக் கொள்கிறார். இதை அடுத்து நடக்கும் ரகளைகளும், லூட்டியுமே இந்த டபுள் டக்கர் படக் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் தீரஜ் குழந்தைகளுக்கு பிடிக்கும் ரோல் என்பதைப் புரிந்து கிடைத்த கேரக்டரை ரசிக்கும்படியே செய்திருக்கிறார்.காதல், டூயட், பந்தா காட்டுவது, காமெடி ஆகிய இடங்களில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்தாலும் சில பல காட்சிகள் கொஞ்சம் அடிசினலாக அக்கறைக் காட்டி இருக்கலாம் என்றும் தோண வைத்து விடுகிறார். . மறுபுறம், தாழ்வுமனப்பான்மையில் தவிக்கும் தருணங்களுக்கு இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை 'மட்டும்' செய்திருக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டின் குரல்கள் படத்திற்குப் பெரிய பலம். குரல்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும், அவர்களின் கவுன்ட்டர்களும் ஸ்கோர் செய்கிறது.
கேமராமேன் கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தி விடுகிறது. அத்துடன் வி எஃப் எக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பெரும் பங்கு வகிக்கிறது
வித்யாசாகர் இசை நீண்ட இடைவெளிக்கு பிறகு காதில் ரீங்காரமிடுக்கிறது
படம் டைட்டிலில் இருந்தே கவர தொடங்கி விடுகிறது. அதிலும் மெயின் கேரக்டர்களான லெஃப்ட் மற்றும் ரைட் அவ்வப்போது சினிமா கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்திய காட்சிகளில் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது. . அது மட்டுமின்றி நன்கு பிரபலமான ஒரு கதாபாத்திரம் அந்த அனிமேஷன் கேரக்டருக்கு தனி வரவேற்பே கிடைத்தது கவனிக்கத் தகுந்தது. ஆனாலும் அனிமேஷன் கேரக்டர்களான லெப்ட் & ரைட்டைத் தவிர மற்றவர்களின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை. திரைக்கதையில் ட்விஸ்ட்கள் என்ற பெயரில் யோசித்து வைத்திருக்கும், கதையோட்டமே ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. எந்த ஒரு ரோலும் மனதில் நிற்கும் அளவிற்கு காட்சிப்படுத்தப்படவில்லை. நடிகர்களிடம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை வாங்கி இருக்கலாம்.
ஆனாலும் இந்த டபுள் டக்கர் - மோசமென்று சொல்லி விட முடியாது என்பதே பெரிய விஷயம்.
மார்க் 3/5