வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்!
தமிழ்நாடு முழுக்க வீடுவீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்றுமுதல் தொடங்குகிறது. அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று ஆக.20-ம் தேதி முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை ஓரளவு மறுசீரமைத்து வாக்குச் சாவடிப் பட்டியல் குறித்து ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்.29-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றிலிருந்து நவ.28-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
2025-ம் ஆண்டு ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே, அக். 29 முதல் நவ. 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர்கள், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வழங்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வயதுக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ், ஆதார், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறந்த தேதியுடன் கூடிய 10-ம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கடவுச் சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25 வயதுக்கு கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம்.
மேலும், https://voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் குறித்தும், அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.