செயற்கை நுண்ணறிவு குறித்து தவறான தகவல்கள்!
எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கை தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி எனப் பல்வேறு இடங்களில் அழைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவைப் பற்றி பேசி வருகிறார்கள். சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொருத்து எழுதியும் வருகின்றனர். உள்ளபடியே இவர்களது எண்ணமும், முயற்சிகளும், செயல்பாடுகளும் பாராட்டுக்குரியதே! அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், சிலர் தாங்கள் படித்தவற்றிலிருந்தும், பயன்படுத்தியிலிருந்தும் கிடைக்கப் பெற்றிருக்கும் குறைவான தகவல்களின் அடிப்படையில், தவறான புரிதல்களுடன் தனக்குத் தெரிந்தவற்றை மக்களுக்கு எளிமையாக சொல்கிறேன் என்கிற பெயரில் பொருந்தாத சொற்கள் மற்றும் உவமைகளுடன் பொதுவெளியில் மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து தவறான புரிதல் ஏற்படுத்தும் வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
நேற்றிரவு நண்பர் ஒருவர், Promptingஎனப்படும் தூண்டல் உள்ளீடுகள் குறித்து பேசியிருப்பதாக அவர் பேசிய காணொலி இணைப்போடு சேர்த்து,எனக்குத் தனித் தகவல் அனுப்பியிருந்தார். "தொடுத்தல் - PROMPTING செயற்கை நுண்ணறிவின் ஆணிவேர்” என காணொலி தலைப்பிட்டதோடு மட்டுமல்லாது, காணொலி முகப்பு அட்டையில் தொடுத்தல் - (Prompting) AI உயிர்நாடி எனவும் தலைப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் செயற்கை நுண்ணறிவின் ஆணிவேர் Prompting அல்ல! செயற்கை நுண்ணிறிவுத் தொழில்நுட்ப இயங்கியலுக்கு அடிப்படையாக இருப்பவை:
1)தரவுகள்(Data)
2)படிமுறை தீர்வு(Algorithm)
3)கணிமை ஆற்றல்(Computing Power)
4)வழிநடத்தும் வல்லுநர்(Human Experts)
5)அறம்சார் கருதுதல் (Ethical Considerations)
உற்பத்தி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் (Gen AI), விரும்பத் தகுந்த விடைகளைப் பெற தெளிவான தூண்டில் உள்ளீடுகளே (Clear Prompting) உதவுமே தவிர, தூண்டில் உள்ளீடுகள் மட்டுமே உற்பத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமல்ல! தூண்டில் உள்ளீடுகள் (Prompting) என்பது வெறும் வினாக்களாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. கட்டளையாகவோ, உரையாடல்களாகவோ அல்லது வேறு வழிமுறைகளில் கூட இருக்கலாம். Prompting AI இன் ஆணி வேர் என்றோ, prompting இல்லாமல் ஏஐ இல்லை என்றோ செல்லும்போது அல்லது தலைப்பிடும் போது புதிதாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பற்றியோ அல்லது உற்பத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு தவறான புரிதல் ஏற்படுத்தும்.
ஆகவே, நண்பர்களே தொழில்நுட்பத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது கதைச் சொல்வது அல்ல! அழகியலுக்காகவோ அல்லது அழுத்தத்திற்காகவோ சொற்களைப் பயன்படுத்துவதற்கு! உங்கள் நோக்கத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பற்றி பேசும் போது, எழுதும் போது பொருந்தாத சொற்களையோ அல்லது உவமைகளையோ அல்லது எடுத்துகாட்டுகளையோ பயன்படுத்தாதீர்! அதுவே தவறான தகவலாக மாறுகிறது. அது புதிதாக தெரிந்துகொள்வோரை தவறாக வழிநடத்தும்!