புத்தகங்களைப் பொய்ச்சான்றாகக் காட்டாதீர்கள்!
அண்மையில் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஏமாற்றுச் செயல் ஒன்றை நாம் எல்லாரும் கண்ணுற்று வருகிறோம். அது சரிதான் என்று நம்மையும் ஒப்புக் கொள்ள வைக்குமளவுக்கு நடக்கின்ற போலிச் செயல் அது. ஊடகத்தினராக வலைக் காணொளித் தளங்களில் செயல்படுபவர்கள் பல்வேறு தரப்பினரை நேர்கண்டு வினாவெழுப்புகின்றனர். அவ்வூடகத்தினரே குழுமிப் பேசுவதும் நிகழ்ச்சியாகிறது. அவ்வாறு செய்யும் பொழுது தமது பின்னணியில் புத்தகங்கள் அடுக்கப்பட்ட பேழைகளின் பொய்த்திரையைத் தொங்க விட்டுள்ளனர். அவை அச்செடுத்து ஒட்டப்பட்ட நெகிழிப் படங்களாகவும் இருக்கலாம். நிகழ்ச்சியின் ஒளியேற்பாடுகள் அத்திரையில் பட்டு மின்னுவதைக் காண முடிகிறது.
எண்ணிப் பாருங்கள்! ஊடகத்தினர் என்பவர் யார்? புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த முனைப்போடு இருப்பவர்கள். தம்மகத்தே அந்தப் பொய்ப்படத்தில் காட்டியுள்ளபடி அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிடையே வாழ்பவர்கள். செய்தி ஊடகவியலாளர் என்றால் அறுபதுகளில் நிகழ்ந்த ஒன்றைப் பற்றிய குறிப்பு தோன்றினால் மடமடவென்று அது தொடர்பான பலவற்றையும் கூறவல்லவராக இருத்தல் வேண்டும். ’போலந்து’ என்றால் அது நாடா, நகரமா, விளையாட்டா, ஆட்பெயரா என்பதில் தெள்ளத் தெளிவான அறிதல் வேண்டும் அவர்க்கு.
ஓர் அரசியலாரைப் பற்றிய கட்டுரை என்றால் உடனே அவரது வரலாறு அச்செய்தியாளரின் நினைவில் வரவேண்டும். அவற்றின் அறிவுச்சேர்க்கை மட்டுமின்றி எண்ணற்ற நூல்களைப் படித்துக்கொண்டேயும் இருப்பார் அவர். அந்தத் தோற்றத்தைத்தான் அவர் பின்னணியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற புத்தகங்கள் நமக்குக் காட்டுகின்றன. நாமும் அவரிடமிருந்து அந்த நம்பிக்கையைத்தான் பெறுகிறோம். அளவில்லாத புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பவர். அவர்க்குத் தெரியாதது என்ன இருக்க முடியும் ? உலக நடப்புகள் அனைத்தையும் அறிவார். நாட்டு நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். இவ்வெண்ணமே செய்தியாளரின், ஊடகவியலாளரின் தனிச்சிறந்த பெருமை. அதனால்தான் புத்தகங்கள் புடைசூழ்ந்த ஓர் அறையில் அவர் அமர்ந்திருக்கிறார்.
அவ்வாறு உண்மையான புத்தகங்களை அடுக்கிக் காட்ட முடியாதபோது பொய்ப்புத்தகப் பேழைப் படங்களைத் தொங்கவிடுவது பார்வையாளர்களை ஏமாற்றுவதா, இல்லையா ? அவர் புத்தகங்களைப் படிக்கிறாரா, இல்லையா ? எழுத்தும் கருத்துமே தொழிலாகக்கொண்டுள்ள ஊடகத்தாரே நூல்களைப் படிக்கவில்லை என்றால் வேறு யார் படிப்பார்கள் ?
வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்திற்குப் போகிறீர்கள். அவர் இவர்களைப்போல் அச்சடிக்கப்பட்ட புத்தகத் திரையைத் தொங்கவிட்டு அமர்ந்திருந்தால் அவரை நம்புவீர்களா ? வழக்கறிஞர் என்பவர் புத்தகங்கள் அடுக்கப்பட்ட பேரறையில் அமர்ந்திருந்தால்தானே நாம் நம்புவோம் ? எந்நேரமும் ஒரு வழக்குக் குறிப்பைத் தேடுவதற்காக நூல்களை அடுக்கிவைத்திருக்கிறார். அதுதானே செய்தியாளர்க்கும் பொருந்தும் ? எதற்காகப் பொய்ப்படம் மாட்டவேண்டும் ? உண்மையாகவே உங்களிடம் அவ்வளவு புத்தகங்கள் இல்லையா ? அல்லது படிப்பதே இல்லையா ? மூத்த இதழாளர்கள் எத்துணைப் பேர் புத்தகங்களின் நெரிசலில் தமக்கே இடமில்லாத திருவல்லிக்கேணி ஒற்றையறையில் வாழ்ந்து மடிந்தார்கள், தெரியுமா ?
நீங்களே ஒரு சடங்குப் பொருள்போல் புத்தகங்களைப் பார்ப்பீர்கள்/காட்டுவீர்கள் என்றால் வேறு யார்தான் புத்தகங்களை வாங்குவார்கள் ? எல்லாமே மேற்பார்வைக்கு இருப்பதுபோல் தெரிந்தால் போதும் என்றால் அந்தத் துறையின் நம்பிக்கை என்பது என்ன ? அது எங்கே உருப்படும் ?அருள்கூர்ந்து உண்மையான புத்தகங்களை அடுக்கிக் காட்டி உங்கள் அறிவு மேன்மையைக் காட்டுங்கள். எதற்காக இத்தகைய போலிப் படங்கள் ? புத்தகங்களைப் பொய்ச்சான்றாகக் காட்டாதீர்கள். உண்மையான புத்தகங்களுக்கு உங்களைக் கொடுங்கள் !