கும்பமேளாவுக்கு வந்து குளிக்காதீங்க!- மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரம் இந்து புராணங்களிலும் மகாபாரதத்திலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி எனும் மூன்று நதிகள் சங்கமிக்கும் ஒரே இடம் பிரயாக்ராஜ்தான்.அதுதான் இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5482 சதுர கிலோ மீட்டர். கங்கை கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம்.இங்கு நதி வெண்மை நிறத்திலும் யமுனை நதி நீல நிறத்திலும் இருக்கும். சரஸ்வதி நதி மறைந்த நிலையில் இங்கு இருக்கும். இந்தப் பகுதிக்கு சென்று நீராட வேண்டும் என்றால் படகில்தான் செல்ல வேண்டும். அங்கு இறங்கி நீராட முடியாது. படகில் செல்பவர்கள் தலையில் தண்ணீரை அள்ளித் தெளித்துக் கொள்வார்கள்.
இந்நிலையில், இங்கு மஹா கும்பமேளா எனப்படும் ஹிந்து மதத்தின் மிகப் பெரும் ஆன்மிகத் திருவிழா நடப்பதை ஒட்டி புனித நீராடுவது, மோட்சத்துக்கான வழியாகவும், பாவங்களை அழிப்பதாகவும் கருதப்பட்டு கோடிக்கணக்கானோர் குவிந்து நீராடி வருகின்றனர். இச்சூழலில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் அளவுக்கதிகமான “Faecal Coliform” பாக்டீரியா கலந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.இந்த தண்ணீரில் குளித்தால் அல்லது குடித்தால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், ஹெபடைடிஸ் A உள்ளிட்ட கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி முதல், 52 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். குறிப்பாக நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.இந்நிலையில், கங்கை மற்றும் யமுனை சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் நதியின் தண்ணீரில் மனிதக் கழிவில் உள்ள கிருமிகள் (faecal coliform) அதிக அளவில் உள்ளதால் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) திங்கள்கிழமை சமர்ப்பித்தது. அந்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில், கழிவுநீர் அழுக்கு நீரின் குறிகாட்டியான ஃபீகல் கோலிஃபார்மின் அளவு 100 மில்லிக்கு 2500 யூனிட்கள் என்று கூறுகிறது. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது தொடர்பான வழக்கை NGT தற்போது விசாரித்து வருகிறது. மகா கும்பமேளாவிற்கான கழிவுநீர் மேலாண்மை திட்டம் குறித்து NGT ஏற்கனவே உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கும்பமேளாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்