அமெரிக்கா அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்!
உலக நாடுகளில் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி நேற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார். டிரம்பிக்கிற்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.!
வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள்அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது. அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை ட்ரமப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிபராக பதவியேற்ற டிரம்ப் தனது முதல் உரையில், “அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது. இந்த நாளிலிருந்து நமது நாடு மீண்டும் செழித்து உலகம் முழுவதும் மதிக்கப்படும். எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது. ஆம்.. அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதே எனது நோக்கம். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். பெருமை, வளம் மற்றும் சுதந்திரம் கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குவதே எனது முதன்மையான முன்னுரிமை. அமெரிக்கா விரைவில் முன்பை விட பெரியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இது நம் நாட்டு வெற்றியின் ஒரு சிலிர்ப்பூட்டும் புதிய சகாப்தத்தின் தொடக்கம்.
முந்தைய ஆட்சி(பைடன்) நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த “ஆபத்தான குற்றவாளிகளுக்கு” அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை வழங்கியது. வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை அமெரிக்கா வழங்கியது. அதே நேரத்தில் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க தவறியது. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட அவர்களால் நிர்வகிக்க முடியவில்லை. இதை சரி செய்ய அமெரிக்காவின் தெற்கு எல்லையில் ஒரு தேசிய அவசரநிலையை அறிவிக்கிறேன். சட்டவிரோத நுழைவை நிறுத்தி, மில்லியன் கணக்கான வெளிநாட்டு கிரிமினல்களை நாடு கடத்தத் தொடங்குவேன். இது உறுதி” என டிரம்ப் தெரிவித்தார்.
அதன் பின்னர், பதவி விலகும் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கும் வழியனுப்பு விழாவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோரும், உலகின் முன்னணி தொழிலதிபர்களான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ், கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் தலைவர் டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலே, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.