நீச்சலடித்து போய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்!
இது போன்ற செய்திகள் அரிது. ஒரிசா மாநிலத்தில் வெள்ளத்தால் சூழப்பட்டு ஒரு கிராமமே நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள் இருவர் ஆற்றை நீந்திக் கடந்து சிகிச்சை அளித்திருக்கின்றனர். உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
மல்கங்கரி மாவட்டம் மதிலி ஒன்றியத்தில் பாரா என்பது கிராமத்தின் பெயர். மருத்துவர்கள் ஆனந்த் குமார் சுஜித் குமார். கியாங் நதியை நடந்தே கடந்து விடலாம் என்று ஆனந்த் குமாரும் சுஜித் குமாரும் சென்ற பொழுது நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டு நீச்சல் அடித்து கிராமத்தை அடைந்து சிகிச்சை அளித்திருக்கின்றனர். கடமையைச் செய்தோம் என்று இருவரும் அடக்கமாக சிரிக்கின்றனர்.
கிராம மக்கள் மருத்துவர் இருவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து இருக்கின்றனர். அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் நாளொன்றுக்கு ஒரு படுக்கைக்கு வருமானம் ரூபாய் 50,000 என்று இலக்கு நிர்ணயித்து இலாபம் பார்க்கும் காலம் இது. ஆனந்த் குமாரும் சுஜித் குமாரும் அரசு மருத்துவர்கள். கிராம மக்களோடு சேர்ந்து நாமும் பாராட்டுவோம்.