31-ம் ஆண்டில் மதிமுக தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மை என்ன தெரியுமா?
1964-ம் வருஷம் சென்னை, கோகலே மன்றத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, வைகோவுக்கு.
அதன் மூலம் அவரது அரசியல் பயணமும் ஆரம்பித்தது.
பின்னர் திமுக மாணவரணி இணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல்வேறு பதவிகளை எட்டிப்பிடித்தார்.
அதை அடுத்து ,தொடர் பொதுக்கூட்டங்களில் வைகோ இடைவிடாமல் நிகழ்த்தும் உரைக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.இது அவருக்கு வேறு வித நெருக்கடியையும் உருவாக்கிக் கொடுத்தது.
இதனிடையே அவர் 1989-ம் ஆண்டு திடீரென ஈழத்துக்கு ரகசிய பயணம் செய்தார். இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என மத்திய அரசுக்கு தகவல் தெரிய வந்திருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க முதலமைச்சர் கூறியிருப்பதாக அந்த கடிதம் தெரிவித்தது. இந்தச் செய்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கருணாநிதி.
இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ, "மத்திய அரசின் உளவுத் துறையினர் தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கலைஞர் பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கோ கட்சிக்கோ கடுகளவும் கேடுவராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். தி.மு.க-வின் வாரிசு அரசியல் காரணமாக வைகோ கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டபோது அதைக் கண்டித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அப்போது, "மு.க.ஸ்டாலினைவிட வைகோவுக்கத்தான் தொண்டர்களிடத்தில் அதிகம் செல்வாக்கு இருக்கிறது. எனவேதான் கருணாநிதி இப்படிச் செய்துவிட்டார்" என வைகோவின் ஆதரவாளர்கள் குமுறினர். ஆர்ப்பாட்டம், போராட்டங்களும் வெடித்தன.ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து 1994-ம் ஆண்டு, இதே மே 6-ம் நாள் மதிமுக உதயமானது. அப்போது அவருடன் தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வந்தார்கள்.
அப்போது அவர் தன்னை திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அடையாளப்படுத்தினார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அந்த மதிமுக-வில் சேர்ந்தவர்களைவிட விலகியவர்களே அதிகம்.
மேலும் எந்த வாரிசு அரசியலைக் கண்டித்து தி.மு.க-வில் இருந்து வெளியேறினாரோ அதே வாரிசு அரசியலுக்குள் வைகோவும் புதைந்து போன நிலையில் எஞ்சிய தொண்டர்களை ஏமாற்றாமல், வாரிசுக்காக கட்சி நடத்தாமல் தாய்க் கழகமான திமுகவில் மதிமுகவை இணைப்பதுதான் 31-ம் ஆண்டில் தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மையாகும் என்ற பல தரப்பினரும் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.
ரேஷன் சங்கர்