For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

போகி பண்டிகையின் நோக்கம் என்ன தெரியுமோ?

06:32 AM Jan 13, 2025 IST | admin
போகி பண்டிகையின் நோக்கம் என்ன தெரியுமோ
Advertisement

மிழ்நாட்டு உள்ளிட்ட தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இதன் துவக்க நாளாக கொண்டாடப்படுவதே போகி பண்டிகையாகும். அதாவது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். *"பழையன கழிதலும்...புதியன புகுதலும்" என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த நாளில் வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். மேலும் இந்த தினத்தில் பழைய பொருட்களோடு நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து (Pongal Festival 2025) எரிக்க வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும்.

Advertisement

போகிப் பண்டிகை நோக்கம் :-

சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை தெற்கில் இருந்து வடக்கில் துவக்கும் நாளையே மகர சங்கராந்தி என்கிறோம். பழைய தீய விஷயங்களை விடுத்து, வாழ்க்கையில் புதிய பயணத்தை துவங்க வேண்டும் என்பதை உணர்த்தும் நாளே போகிப் பண்டிகையாகும். வீட்டில் செல்வ வளம், மாற்றம், வளர்ச்சி ஆகியவை புதிதாக நிறைய வேண்டும் என்பதற்காக வீடுகளை சுத்தம் செய்து, புதிய பயணத்திற்கு தயாராகும் நாள் போகி பண்டிகையாகும். 2025ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை வருகிறது.

Advertisement

யாரை வழிபட வேண்டும் ?

போகி என்பது மழையின் கடவுளான இந்திரனை வழிபடுவதற்குரிய நாள் என இந்த சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த நாளில் விவசாயிகள், தங்களின் விவசாயம் செழிக்க நல்ல மழையை அருள வேண்டும் என வேண்டிக் கொள்வது வழக்கம். ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்க, செல்வ வளங்களை நிறைவதற்கு இந்திரன் அருள் செய்யும் நாள் என நம்பப்படுகிறது. இது இந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நாளாக சொல்லப்படுகிறது. இயற்கைக்கு நன்றி செலுத்தி, அவற்றின் ஆசியை பெறும் நாளாக போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

போகி கொண்டாட்ட முறைகள் :-

இந்தியாவில் பல மாநிலங்களில் பல விதமான பெயர்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் போகி என்ற பெயரிலும், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும், அசாமில் மகி பிரு அல்லது போகாலி பிரு என்ற பெயரிலும், கொண்டாடப்படுகிறது. வேறு வேறு பெயர்களில் கொண்டாடினாலும் இது கொண்டாடப்படும் விதமாக ஒன்றாக தான் இருக்கும். அனைவரும் விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் நாளாகவே போகி கொண்டாடப்படுகிறது.

போகியில் செய்ய வேண்டியது :-

போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, அழகிய மலர்கள் மாவிலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். புதிதாக விளைந்த அரிசியில் அரைத்த மாவை பயன்படுத்தி மாக்கோலமிட்டு, கோலத்திற்கு நடுவே மாட்டுச் சாணம் பிடித்து வைத்து, அவற்றில் பூசணிப்பூவை வைக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் விவசாய பணிகளுக்க பயன்படுத்தும் ஏர் களப்பை போன்றவற்றிற்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து வணங்க வேண்டும். சூரிய பகவானையும், பூமி தேவியையும் வணங்கி விட்டு, விவசாய பணிகளை துவக்க வேண்டும். விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

போகி சடங்குகள் :-

சில பகுதிகளில் தீ மூட்டி தேவையற்ற பொருட்களையும், ஆடைகளையும் எரிப்பார்கள். பெண்கள் மந்திரங்கள் சொல்லியும், பாடல்கள் பாடியும் அந்த தீயை சுற்றி வந்து வழிபடுவார்கள். நண்பர்கள், குடும்பங்கள் ஆகியவை ஒன்றிணையும் நாளாக போகி பண்டிகை இருக்கும். புதிதாக விளைந்த அரிசி, பழங்கள், விளைச்சல் மூலமாக கிடைத்த பணம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து போகியை கொண்டாடும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது. பட்டம் விடுவது, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்துவது ஆகியனவும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. அனைவருடனும் பகை, கோபங்களை மறந்து ஒன்று கூடி, மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் போகி பண்டிகையை கொண்டாடுலாம்.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் இதோ:

“நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 20 ஆண்டுகளாக போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்த 2025 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement