மேடம் சி. ஜே. வாக்கர் யார் தெரியுமோ?
அமெரிக்காவில் முதல் முறையாக சுய தொழில் ஆரம்பித்து அதன் மூலம் மில்லியனரான ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் சாரா பிரீட்லவ் என்ற மேடம் சிஜே. வாக்கர் . படிப்போ பணமோ இன்றி, சொந்த முயற்சியில் தானும் முன்னேறி, ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் முன்னேற்றியவர். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, போராட்டக்குணம் கொண்ட மேடம் வாக்கரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. 1867-ம் ஆண்டு பிறந்தார் சாரா ப்ரீட்லவ். அமெரிக்க உள்நாட்டு போருக்கு முன்வரை அடிமைகளாக வாழ்ந்த கருப்பின பெற்றோரின் மகளாய் பிறந்தார். ஏழு வயதில் பெற்றோரை இழந்த சாரா, தன் சகோதரி குடும்பத்துடன் வசித்து வந்தார். தன் அக்காவின் கணவர் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க 14 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். லீலியா என்ற மகளை பெற்றெடுத்தார். சாராவின் 20 வயதில் அவரது கணவர் இறந்துவிட, சலவைத் தொழிலாளியாக வேலை செய்து தன் ஒரே மகளை வளர்த்தார்.
அந்த சமயத்தில், அவருக்கு உச்சந்தலையில் பிரச்சனை ஏற்பட்டு, முடி உதிர ஆரம்பித்தது. அந்த காலத்தில்; கருப்பின பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடினமான வேலைகள் செய்தனர். அதில் பெரும்பாலானவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது. தங்களை ஆரோக்கியமாகப் பராமரித்துக்கொள்ள போதிய நேரமோ, வசதியோ கூட இவர்களுக்கு இல்லை. இதனால், சாராவை போலவே பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இவர்களின் இந்த பிரச்சனையைத் தீர்க்க, சந்தைகளில் கருப்பின பெண்களின் கூந்தலைப் பராமரிக்க பொருட்கள் இல்லை. இதனால் பல பெண்களை இனப்பாகுபாடுடன், தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து வஞ்சித்தது.
இந்த நிலையில், ஆடி மன்ரோவைச் சந்திக்கிறார் சாரா. ஆடி மன்ரோ பெண்களின் கூந்தலுக்கான அழகு பொருட்களை தயார் செய்து விற்பவர். அவர் ஒரு புதிய க்ரீமை உருவாக்கி சாராவிற்கு வழங்குகிறார். சில வாரங்களிலேயே சாராவின் உதிர்ந்த கூந்தல் மீண்டும் வளர ஆரம்பிக்கிறது. அவரது நோய் பிரச்சனையும் சரியாகிறது. இந்த பொருள் அனைத்து கருப்பின பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று, ஆடி மன்ரோவுடன் சேர்ந்து ஒன்றாகத் தொழில் செய்யும் திட்டத்தைச் சாரா பரிந்துரைக்கிறார். ஆனால், மன்ரோவோ, இந்த அழகுப் பொருட்கள் வெள்ளைப் பெண்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும் என்று கூறி சாராவை அவமானப்படுத்தி நிராகரித்து விடுகிறார்.மனமுடைந்த சாரா, நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
இன பாகுபாட்டையும் பெண் முன்னேற்றத்தையும் பெற ஒரே வழி, சுயமாகச் சம்பாதித்து ஜெயிப்பதுதான் என முடிவுசெய்கிறார். மன்ரோவின் செய்முறையை அடிப்படையாகக் கொண்டு, கருப்பின பெண்களுக்கான அழகு சாதனங்களைத் தாமாக உருவாக்குகிறார். முதல் முறையாக ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார். அப்போது செய்தித்தாள் விளம்பரப் பிரிவில் பணிபுரிந்த சார்லஸ் ஜோசப் வாக்கரின் அறிமுகமும் ஆதரவும் கிடைத்தது. அவரைத் திருமணம் செய்துகொண்டார். காலம் நகர்கிறது... `சாரா’ என்று அழைத்த ஆனியை, ‘மேடம் வாக்கர்’ என்று அவரே அழைக்கச் சொல்லும் அளவுக்கு சாராவின் எதிர்காலம் பிரகாசமாகிறது. மேடம் சி.ஜே.வாக்கர் தன் பெயரையே பிராண்டு ஆக மாற்றி க்ரீம், ஷாம்பூ மற்றும் அழகு சாதனப் பொருள்களைத் தயாரித்தார். விற்பனை செய்வதற்கு ஏராளமான முகவர்களை நியமித்தார். வியாபாரம் முன்னேறிக்கொண்டே வந்தது.
‘‘அமெரிக்க நாடு, பணத்தைத் தவிர எதையுமே மதிப்பதில்லை. நம் மக்கள் முன்னேற, அவர்களில் சில பணக்காரர்களை உருவாக்கினாலே போதும்” என்று நம்பியவர், தொழிலில் நன்றாகச் சம்பாதித்தது மட்டுமில்லாமல், மிகப் பெரிய தொழிற்சாலைகளையும், பயிற்சி மையங்களையும் உருவாக்கினார். அதில் கருப்பின பெண்களையே வேலையில் நியமித்து, அவர்களுக்கான மதிப்பையும் வாழ்வாதாரத்தையும் பெருக்கினார். கருப்பின பெண்களை அழகானவர்கள் என்று கூட ஏற்க மறுத்த காலகட்டத்தில், அவர்களை தன் நிறுவனத்தின் மாடல்களாக அறிமுகப்படுத்தினார்.
அதே நேரத்தில் தன் கணவர், மருமகன் போன்ற குடும்பத்து ஆண்களாலேயே ஏமாற்றப்பட்டார். ஆனாலும், சில நல்ல மனிதர்களின் உதவியால் அவருக்கு நிதி கிடைத்தது. தொழில் விஸ்வரூபம் எடுத்தது. புகழ்பெற்ற அமெரிக்கச் செல்வந்தர் ராக்ஃபெல்லர் மாளிகைக்கு அடுத்த மாளிகையை தன் வாழ்விடமாக்கினார். அழகுக்கலைப் பயிற்சி, தொழிற்சாலை, விற்பனை, விளம்பரத் துறைகளில் பணி என்று சகலத்துறைகளிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர் களுக்கு வேலைவாய்ப்பு களை வழங்கினார். மகளிடம் பிசினஸைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தார் மேடம் வாக்கர். அங்கும் தன்னுடைய பொருள்களை அறிமுகம் செய்தார். கிளைகள் இல்லாத பகுதிகளுக்கு அஞ்சல் மூலம் பொருட்களை அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். க்யூபா, ஹைதி, ஜமைக்கா, பனாமா, கோஸ்டாரிகா நாடுகளிலும் இவரது வியாபாரம் பெருகியது.
முதுமையடைந்த அமெரிக்கர்களுக்கு உதவுவதற்காகவும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். தேசிய அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கான மாநாட்டை நடத்தினார். இதன் மூலம் ஏராளமான பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடும் வாய்ப்பு உருவானது. மேலும் கருப்பின பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமில்லாமல், ‘‘வாக்கர் சிஸ்டம்” என்ற பயிற்சி நிறுவனங்களை ஆரம்பித்தார். அதில் பெண்களுக்குப் பயிற்சியுடன் விற்பனை முகவர் உரிமமும் வழங்கி நிரந்தர வருமானத்திற்கு உதவினார். அவருடைய நிறுவனத்தில் சுமார் 10,000 பெண்கள் வேலை செய்தனர்.
இதனிடையே அமெரிக்க இனவெறிக் கும்பல் வெறியாட்டம் ஆடிய 1917 ஜூலை மாதத்தில் மட்டுமே 39 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலியானார்கள். இந்தக் கொடூரத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. 8,000 பேர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் மேடம் வாக்கர் பங்கேற்றார். இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்காக ஏராளமான உதவி களையும் செய்தார்.
பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேடம் வாக்கர், ஓரின ஈர்ப்பாளராக இருந்த தன் மகளிடம், திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தினார். மகளுக்கோ அதில் விருப்பம் இல்லை. பிறகு அவரே, `உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் திருமணம் வேண்டாம். பெண்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்று நினைக்கும் நான் இதைச் சொல்லிருக்கக் கூடாது' என்று மகளிடம் மன்னிப்பு கேட்டார்.
`பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பிசினஸ் செய்ய வரவில்லை. நானும் என் மக்களும் மற்றவர்களைப் போல முன்னேற வேண்டும் என்ற காரணத்துக்காகவே பிசினஸ் ஆரம்பித்தேன்’ என்றவர், தன்னுடைய சொத்துகளில் மூன்றில் இரண்டு பங்கை அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்தார்.
ஆக பிசினஸ் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரராக மாறிய மேடம் வாக்கர், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களில் முதல் கோடீஸ்வரர்! மேடம் சி.ஜே.வாக்கர் 51 வயதிலேயே மரணம் அடைந்துவிட்டாலும் அவரது நிறுவனம் 100 ஆண்டுகளைக் கடந்த பின்னும் அழகுசாதனப் பொருள்கள் துறையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.
வித்யாஸ்ரீ