For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உங்கள் வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் இருக்கா? பீ கேர்புல்!

09:15 AM Nov 28, 2023 IST | admin
உங்கள் வாகனங்களில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் இருக்கா  பீ கேர்புல்
Advertisement

2011 சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு இந்திய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களின் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதில், காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்த கூடாது எனவும், அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும் என தமிழகத்தின் அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார் ஆனாலும் போலீஸ் என்கிற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிகளை மீறுவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. அதேபோல போலீஸ் எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்ய தயக்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில், தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தற்போது ஒரு சுற்றறிக்கையில் தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால், காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே வாகனங்களை போலீசார் சோதனையிடாமல் இருக்கவும், அவ்வாறு சோதனையிட்டால் அவர்களிடம் இருந்து தப்பிக்கவும், தங்களது கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் போலீஸ், பிரஸ், வக்கீல், டாக்டர் என்று ஒட்டி வருகின்றனர். பெரும்பாலும், போலீஸ், பிரஸ், வக்கீல் ஸ்டிக்கர்தான் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டியவர்களில் பெரும்பாலானவர்களுக்கும், அந்தப் பணிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. போலீஸ் அல்லது பத்திரிகை அல்லது வக்கீல் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கூட போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.

Advertisement

இச்சூழலில் இது குறித்து மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சிலர் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்களை ஒட்டி வருவது தெரியவந்துள்ளது. தேச விரோதிகள், குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டிக்கரை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனால் பெரும் பாதுகாப்பு பிரச்னை உருவாகும். தவிர, வாகன சோதனையின்போது, இதுபோல் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்களை ஒட்டி வருபவர்களை கண்டு அவர்களிடம் சோதனை நடத்த போலீசார் தயங்குகின்றனர். உண்மையான போலீஸ் அதிகாரிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருவது தான் இதற்கு காரணமாக அமைகிறது.

‘போலீஸ்’ ஸ்டிக்கரை பயன்படுத்தி மோசடி மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, எந்த ஒரு தனியார் வாகனத்திலும் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், அதில் பயணிப்பவர் யாராக இருந்தாலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார். அதேபோல பல குற்றவாளிகள் பிரஸ் என்ற பெயரில் வாகனங்களில் வலம் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதையும் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags :
Advertisement