இரண்டு முகம் வேண்டாமே!-டாக்டர் பத்மஸ்ரீ வி.எஸ். நடராஜன்!
முருகக் கடவுளுக்கு ஆறு முகங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு சக்தி இருப்பதாக கூறுவார்கள். கடவுளுக்கு அது சரி. ஆனால் மனிதர்களுக்கு இரண்டு முகங்களா? இதுவரை கேள்விப்பட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ முடியாத முகம் ஒன்று உண்டு. தினம் தினம் மனிதர்களிடையே வெளியில் நாம் பார்க்கும் முகம் ஒன்று. முகத்தில் தோன்றும் முக பாவங்கள், உணர்ச்சிகள் மற்றும் பேச்சிலிருந்து அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்று எடைபோடுவதுதான் வழக்கம். இதைத் தவிர அவரது உள்மனதில் மற்றொரு முகம் மறைந்திருக்கும். இதுதான் ஒருவருடைய இரண்டாவது முகம்.
இதோ உதாரணத்திற்கு
ஒருவர் எல்லோரிடமும் சரளமாக சிரித்த முகத்துடன் நன்றாகப் பேசிப் பழகுவார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தனது விசிட்டிங் கார்டை கொடுத்து ''ஏதாவது உதவி வேண்டும் என்றால் என்னை எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம். நான் கட்டாயம் உதவுவேன்'' என்று யாரும் கேட்காமலேயே தம்பட்டம் அடிப்பார். ஆனால், அவருடைய அலுவலகத்திற்குச் சென்று ஏதாவது ஒரு சிறிய உதவியை (அதை எளிதில் அவரால் செய்ய முடியும்) அவரிடம் கேட்டால் அப்படி எல்லாம் என்னால் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தாற் போல் ஒரு பொய்யைச் சொல்லிவிடுவார்.
ஒருவர் செலவுக்காக கெஞ்சிக் கூத்தாடி மற்றொருவரிடம் கடனாக ஒரு தொகையை பெற்றுக் கொள்வார். குறித்த காலத்தில் அப்பணத்தை திருப்பித் தராதபோது அவரிடம் பணத்தைக் கேட்டால், ''என்னால் பணத்தை திருப்பித் தர முடியாது, உன்னால் முடிந்ததைச் செய்து கொள்'' என்று தனது இரண்டாவது முகத்தை வெளிப்படுத்துவார்.
இளைஞர் ஒரு பெண்ணை பல மாதங்களாகக் காதலித்து வருகிறான். அவளையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி வருவான். காதலி, ''என்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள், விரைவில் எனது பெற்றோர்கள் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய உள்ளார்கள்'' என்று சொன்னதும், ''அடடே, நான் சொல்ல மறந்து விட்டேன். அடுத்த வாரம் நான் வேலைக்கு அமெரிக்கா போக இருக்கிறேன், வருவதற்கு ஒரு வருடம் ஆகலாம், அதுவரை பொறுத்துக்கொள், நான் திரும்பி வந்தவுடன் உன்னைக் கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்'' என்று இதுவரை மறைத்து வைத்திருந்த இரண்டாவது முகத்தைக் காட்டி விடுவான். இப்படி பல உதாரணங்களை எழுதிக் கொண்டே போகலாம்.
மக்களிடையே பலருக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. இதனால் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்பது தெரியாமல் பலர் குழப்பமடைகிறார்கள். இவர் உண்மையைப் பேசுகிறரா? அல்லது பொய் பேசுகிறாரா? என்று சந்தேகப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படி இரண்டு முகங்கள் உள்ள மக்களை நம்பி பலர் பொன்னான நேரம், பணம், உறவு மற்றும் கற்பு போன்ற விலை மதிக்க முடியாதவற்றை இழக்கிறார்கள்.இரண்டு முகங்களைக் கொண்ட மக்கள் தற்பொழுதுதான் இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். திருவள்ளுவர் காலத்திலேயே அது இருந்திருப்பதை அவருடைய 'கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு' என்ற குறள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது செயல் ஒன்று சொல் ஒன்றாக இருப்பவர் தொடர்பு நனவில் அன்றி கனவிலும் துன்பத்தைத் தரும் என்பதாகும்.'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் கூறியுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் மற்றும் சோதனையிலும் ஹரிச்சந்திரன் காட்டியது ஒரே முகம் தான். அதுதான் வாய்ச்சொல் பிறழாமை. அந்த ஒரே முகத்துக்குத்தான் இன்னமும் எல்லா மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.யாருக்கெல்லாம் ஒரே முகம் மட்டும் இருக்கும்? இதைக் கண்டறிவது மிகவும் சிரமம். பொதுவாக குழந்தைகள் மாறி மாறி பேசமாட்டார்கள். அவர்கள் பெரியவர்களாக ஆகும்வரை ஒரே முகத்துடன்தான் இருப்பார்கள். அடுத்து தாய், தன் குழந்தைகளிடம், அவர்கள் வளர்ந்த பின்னரும், அவர்களின் நன்மைக்காக ஒரே முகத்துடன்தான் இருப்பார். உண்மையான பக்தியுடன், பணம், பதவி, பட்டம் போன்றவற்றிற்கு ஆசைப்படாமல் தொண்டு மனப்பான்மையுடன் இருக்கும் உண்மையான ஆன்மிகவாதி காட்டுவது தனது ஒரு முகத்தைத்தான். முதியவர்கள் தனது வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தாலும், அறிவாலும் அவர்களின் முகம் பொதுவாக ஒன்றாகதான் இருக்கும்.
இரண்டு முகங்கள் உள்ள மக்கள் இனியும் மாறி ஒரு முகமாக இருப்பார்கள் என்பது நடக்காத காரியம். ஆனால் வீட்டில், பெற்றோர்களும், பள்ளியில் ஆசிரியர்களும் ஒரு முகத்தின் சிறப்புகளைச் சொல்லி குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் ஒரே முகத்துடன் பெரியவர்களாக ஆன பின்பும் இருப்பார்கள் என்பது நிச்சயம். இது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் மட்டுமின்றி நாட்டுக்கும் நன்மை பயக்கும் அல்லவா? அக்காலம் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்போம்!
வி.எஸ்.நடராஜன்