ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்டு விட்டது!- சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது.திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வந்த பாஜகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , " கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை நடைபெறவிருப்பது இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பொதுமக்களைப் பட்டியில் கொடுமைப்படுத்தியதைப் பாரத்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேரதல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.’’என்று அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், “இந்த இடைத்தேர்தலில் எந்த அரசியல் கட்சிகள் பெறாத வகையில் வெற்றி இருக்கும். பல கட்சிகள் தனியாகவும், ஒட்டுமொத்தமாக நிறுத்தினாலும் திமுக வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் திமுக வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி. திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கதாநாயகனாக நான்கு ஆண்டு சாதனை திட்டங்கள் இருக்கும். மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பல நல்ல திட்டம் அறிவித்துள்ளார்.
விடியல் பயணம், மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டம் மக்களை சென்று சேர்ந்துள்ளது. பிரச்சார யூகங்கள் தான் மிகப்பெரிய வெற்றி பெற்று தரும். குறைந்தபட்சம் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021,2023ம் ஆண்டு தேர்தலில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவரும் பல வாக்குறுதி கொடுத்து உள்ளார்கள்.அதில் விட்டு சென்ற வாக்குறுதியை மீதமுள்ள வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றப்படும். போக்குவரத்து நெரிசல் போன்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியோடு இணைந்து செய்வேன். ஆகையால் இதற்கு என்று தனியாக வாக்குறுதி என்று அவசியம் இல்லை. புறநகர் பேருந்து நிலையம் மற்றும் காய்கறிகள் சந்தை இடமாற்றம் போன்றவை நடைமுறைக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் குறையும்” என்று வி.சி.சந்திரகுமார் கூறினார்.