ஜெ-யின் தீவிர பக்தனான ஷிஹான் ஹூசைனிக்கு திமுக அரசு உதவி!
நடிகரும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான ஷிஹான் ஹூசைனிக்கு ரத்த புற்றுநோய் என்றும் தினமும் 2 பாட்டில்கள் ரத்தம் ஏற்ற வேண்டிய சூழலில் கடும்ம் சிரமத்தில் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். நேற்று தமிழ்நாடு அரசு அவரது சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் அளித்து உதவியுள்ளது. இதே ஷிஹான் ஹூசைனி ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அவரைக் கவர செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகிறது.
மூன்று முறை உலக கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஷிஹான் ஹூசைனி, ஜெயலலிதாவை சந்திக்க வேண்டுமென்று முயன்றார். ஆனால் ஜெயலலிதாவை நெருங்குவது அவ்வளவு எளிதா என்ன? எல்லாம் தோல்வியில் முடிந்துபோக, நடுரோட்டில் தன்னுடைய கையில் நூற்றியொரு கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார். இது ஜெயலலிதாவின் கவனத்திற்குச் செல்ல, ஷிஹான் ஹூசைனியை அழைத்து கராத்தே பயிற்சி மையம் தொடங்குவதற்காக அவருக்கு நிலம் வழங்கினார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றபோது, அவர் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து பிரார்த்தனை செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 350 மிலி ரத்தம் என எட்டு வருடங்களுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து ரத்தத்தை சேகரித்த ஷிஹான் உசேனி, 11.2 லிட்டர் ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவச் சிலையை செய்தார். தன் ரத்தத்தை மட்டுமல்லாது தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் இருந்தும் ரத்தத்தை கட்டாயப்படுத்தி பெற்று சிலை வடித்ததாக புகார் ஆனது.
ஜெயலலிதா குறித்து இலங்கை அரசு இணையதளத்தில் தவறாகச் செய்தி வெளியிட்டதை எதிர்த்து அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவத்தை பன்றியின் ரத்தத்தால் வரைந்து அதன் கீழ் ராஜபிக்ஷே என்று எழுதினார். ஜெயலலிதா மறைந்த பிறகு அனைத்து மக்கள் முன்னேற்ற அமைப்பு(AMMA) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அம்மாவின் தீவிர பக்தனான ஷிஹான் ஹூசைனிக்கு திமுக அரசு தான் உதவி இருக்கிறது. அதிமுகவோ ஹூசைனியிடம் பயிற்சி பெற்ற விஜய்யோ பவன் கல்யாணோ இதுவரை உதவியதாக தகவல் இல்லை.