டிஸ்னி வசமிருந்த மிக்கி மவுஸ் காப்பிரைட் காலாவதியானது!..
1928ஆம் வருஷம் ஷார்ட் ஃபிலிமில் இடம்பெற்றிருந்த Mickey Mouse, Minnie Mouse ஆகிய இரு கதாபாத்திரங்களின் அமெரிக்கக் காப்புரிமை காலாவதியாகி விட்டது. இனி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் அந்தக் இக்குறிப்பிட்ட வகைக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இனி அவற்றுக்கான அனுமதியை யாரிடமும் பெறத் தேவையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). அது உருவான நாள் 1922 ஏப் 7-தான்.. ஆனால் 1928 இல்தான் வெளியுலகிற்கு அறிமுகமானது.
கொஞ்சம் சுவையான பின்னனி உண்டு இந்த மிக்கி மவுஸ் பிறப்பில்:
அதாவது 1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச் சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார்.
அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் ஆலோசித்தக் கொண்டிருந்த போது ஒரு எலி அவர்கள் மீது ஏறி இறங்கி ஓட்டம் காட்டிக் கொண்டிருந்தது.. ஆரம்பத்தில் அதிர்ந்து அதை பிடிக்க, அடிக்க முயன்று தோற்ற நிலையில் அந்தச் எலியை அதன் போக்கில் விட்டு விட்டார். அதையே பார்த்து கொண்டிருந்தவர் திடீரென இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார். அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் ‘Mickey Mouse’ முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது.
வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர் என்பதெல்லாம் வரலாறு.
அப்படியாக 1928-ம் ஆண்டு, 'ஸ்டீம்போட் வில்லி' என்னும் அனிமேஷன் குறும்படத்தின் வாயிலாக அறிமுமாகி 'டிஸ்னி' நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மிக்கி மவுஸ், ஆஸ்கர் விருது உட்பட, பல விருதுகளையும் வென்றுள்ளது. ‘மிக்கி மவுஸ்’தான் முதன் முதலில் ஆஸ்கர் விருது வென்ற ஓர் உயிரற்ற கதாபாத்திரம்கூட. பெரும்பாலான மக்கள் விரும்பும் இந்த மிக்கி மவுஸை அனுமதியின்றிப் பயன்படுத்தக்கூடாது என்று அதன் காப்புரிமையை வைத்திருந்த 'டிஸ்னி' கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் தற்போது 'மிக்கி மவுஸ்' சம்பந்தமான, 'டிஸ்னி' நிறுவனத்தின் 95 ஆண்டுக் கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இதனால் ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கான தடை நீங்கி விட்டதுது.
பொதுவாக அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரைதான் காப்புரிமைகள் செல்லுபடியாகும். அதன் அடிப்படையில், மிக்கி மவுஸின் கேரக்டருக்கான டிஸ்னியின் காப்பிரைட் முடிந்துவிட்டது. .எனினும் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை நீங்கவில்லை. ஸ்டீம்போட் வில்லி குறும்படத்தில் இடம் பெற்ற கேப்டன் மிக்கி கதாபாத்திரத்தைத் தவிர, மற்ற அனைத்து மிக்கி மவுஸ் கதாபாத்திரகளின் காப்புரிமையும், டிஸ்னி வசமே இன்னும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.